Published:Updated:

`யானை மரணத்தில் கேரளாவின் உண்மைத் தன்மையை கேள்விக்குறியாக்க முயற்சி!’ - பினராயி விஜயன் காட்டம்

பாதிக்கப்பட்ட யானை
பாதிக்கப்பட்ட யானை ( Facebook | Mohan Krishnan )

`யானை இறந்தது மலப்புரத்தில் அல்ல, பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காட்டில். இந்த பிரசாரம் மூலம் கேரளத்தையும் மலப்புறத்தையும் மோசமாகச் சித்திரிக்க முயல்கிறார்கள்.'

கேரள மாநிலத்தில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிமருந்து வைத்துக் கொடுத்து அதன் உயிரைப் பறித்த சம்பவம் தேசத்தையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தை சிலர் கையில் எடுத்து கேரளத்துக்கு எதிராகத் தேசிய அளவில் பிரசாரம் செய்வதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ``கேரளத்தில் இன்று 94 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. கொரோனா தொற்று பாதித்த 47 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இன்று 39 பேர் கொரோனா குணமடைந்துள்ளனர். கொரோனாவால் 3 பேர் மரணமடைந்துள்ளனர். சென்னையிலிருந்து பாலக்காடு திரும்பிய மீனாட்சி அம்மா, அபுதாபியில் இருந்து வந்த மலப்புரம் சபினாஸ், கொல்லத்தைச் சேர்ந்த சேவியர் ஆகியோர் இறந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை 14 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கேரளத்தில் இதுவரை 1,588 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 884 பேர் இப்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். மாநிலம் முழுவதும் 1,70,065 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 124 பகுதிகள் ஹாட்ஸ்பாட்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அன்னாசிப் பழத்தில் வெடி வைத்த கொடூரம்.. கர்ப்பிணி யானையின் இறுதி நிமிடங்கள்! -மனதை உலுக்கும் சம்பவம்
பினராயி விஜயன்
பினராயி விஜயன்

மக்கள் ஒன்றாகக் கூடும் அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்களில் கூட்டம் சேருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும், லாக்டெளனிலிருந்து படிப்படியாக வெளியேறிவருவதால் ஜூன் 8 முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதற்கான வழிமுறைகளை மத்திய அரசு அறிவிக்கவில்லை. வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது குறித்து மதத் தலைவர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினோம். வழிபாட்டுதலங்களைத் திறந்தால் அதிக ஆள்கூட்டம் ஏற்படும் என்று அனைவரும் கருத்து தெரிவித்தனர். வழிபாட்டுத் தலங்களுக்கு முதியவர்கள், நோயாளிகள் வர வாய்ப்பு உண்டு. அது கொரோனா தொற்றுக்கு வழிவகுக்கும் என்பதால் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறை வந்த பிறகு, அதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.

சார்ஸ், நிபா வைரஸ் போன்றவை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியுள்ளது. எனவே, மனிதன் தனது ஆரோக்கியத்தை மட்டும் கவனித்தால் போதாது. இயற்கையையும், அதில் வாழும் மற்ற உயிரினங்களின் ஆரோக்கியத்தையும் காக்க வேண்டும். இயற்கையைப் பாதுகாக்கும் விதமாகப் பூமிக்கு குடைபிடிக்க ஒரு கோடி மரங்கள் நட முடிவு செய்துள்ளோம். அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி சென்றடைய டி.டி.ஹைச் மூலமும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை குழந்தைகளுக்கு இலவச கேபிள் டிவி கனெக்‌ஷன், இலவச டிவிகள் வழங்க பல அமைப்புகளும் நிறுவனங்களும் முன் வந்துள்ளன.

பாதிக்கப்பட்ட யானை
பாதிக்கப்பட்ட யானை
Facebook | Mohan Krishnan

கேரளத்தில் கர்ப்பிணி யானை இறந்த சம்பவம் குறித்து போலீஸார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்துவார்கள். குற்றம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வாயில்லா ஜீவனான கர்ப்பிணி யானையின் மரணம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. துர்பாக்கியமான அந்தச் சம்பவத்தை வைத்து கேரளத்துக்கு எதிராகவும், அதிலும் குறிப்பாக மலப்புரத்துக்கு எதிராகவும் தேசிய அளவில் திட்டமிட்டு பிரசாரம் நடத்தப்படுகிறது.

யானை இறந்தது மலப்புரத்தில் அல்ல; பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காட்டில். ஆனால், திட்டமிட்டு மத்திய அமைச்சர் உள்ளிட்டவர்கள் இத்தகைய பிரசாரத்தை செய்கின்றனர். இந்த பிரசாரம் மூலம் கேரளத்தையும் மலப்புரத்தையும் மோசமாகச் சித்திரிக்க முயல்கிறார்கள். இது சரியான வழிமுறை அல்ல. கேரளத்தின் உண்மைத்தன்மையை கேள்விக்குறியாக்க முயல்வதை அங்கீகரிக்க முடியாது. மனிதன், மிருகம், மரங்கள் எல்லாம் கலந்ததுதான் இயற்கை. மனிதனும் மிருகமும் சந்திக்கும் எதிர்கொள்ளலுக்கு என்ன காரணம், அதைக் குறைக்க என்ன செய்யலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு