Published:Updated:

காரைக்கால்: `கொரோனா காலத்திலும் செயல்படாத ஜிப்மர் கிளை!’ - நடவடிக்கை எடுக்குமா அரசு?

காரைக்கால்
காரைக்கால்

கொரோனாவால் உயிரிழப்பு புதுச்சேரியில் அதிகரித்து வரும் வேளையில், காரைக்காலில் மக்களின் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிப்மரின் தொலைதூர மருத்துவ சேவை மையம் இயங்குவதின் அவசியத்தை அரசுகள் உணர வேண்டும்.

கொரோனா பேரிடரால் பலர் உயிரிழக்கும் தருவாயிலும் மக்களுக்கு சேவை செய்யாத காரைக்கால் ஜிப்மர் கிளை உடனே செயல்பட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை வேண்டும் என்று இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காரைக்கால்
காரைக்கால்

2009 ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மு.ராமதாஸ் முயற்சியால் மத்திய அரசு நிறுவனமான புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் பல்வேறு துறைகளின் சிறப்பு நிபுணர்கள் காரைக்கால் வந்து முகாமிட்டு புறநோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் தொலைதூர சேவை மையம் பாரதி நகரில் உள்ள ஒரு தனியார் கட்டடத்தில் தொடங்கப்பட்டது.

காரைக்கால் பொது மருத்துவமனையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ளவர்கள் போல நிபுணர்கள் இல்லாத காரணத்தால் அதிநவீன சிறப்பு சிகிச்சை காரைக்கால் மக்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லாத அவல நிலையை போக்கும் விதமாக மாதம் தோறும் நான்கு சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தொலைதூர சேவை மையம் செயல்பட்டு புறநோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து சிறப்பாக நடைபெற்று வந்தது. அந்த சேவை மையம் பலரின் பாராட்டைப் பெற்றது.

கொரோனா: புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் உயிரிழப்பு!

அதன்பின், 2017-ம் ஆண்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ளே இயங்கும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவிலேயே செயல்பட தொடங்கியது. போதிய இட வசதி, அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை, மேலும் போக்குவரத்து காரணமாக ஜிப்மர் சிறப்பு சிகிச்சை மருத்துவர்களின் வரத்து படிப்படியாகக் குறைந்து, இந்த வருட மார்ச் மாதத்திலிருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இதுபற்றி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் டாக்டர் ஆனந்தகுமாரிடம் பேசினோம். ``மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதியை காரைக்கால் ஜிப்மர் கிளைக்காக ஒதுக்குகிறது. கிளை தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தும், ஏற்கெனவே இருந்த தொலைதூர புறநோயாளிகள் மருத்துவ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், காரைக்கால் பொது மருத்துவமனையின் ஒரு வளாகத்தை ஜிப்மருக்காகப் புதுப்பிக்க ஒதுக்கப்பட்ட 20 கோடி நிதியில் தரமான பணி நடக்கவில்லை என்றும், அந்த 20 கோடி ரூபாய் நிதியில் புதிய கட்டடமே பிரமாண்டமாகக் கட்டி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

ஆனந்தகுமார்
ஆனந்தகுமார்

பல்வேறு துறைகளில் சிறப்பு சிகிச்சை நிபுணர்களை காரைக்காலுக்கு அனுப்பி தொலைதூர சேவை மையத்தை உடனே செயல்படுத்தி அதிநவீன நல சேவைகளைச் செய்ய ஜிப்மர் நிர்வாகம் முன் வர வேண்டும்.

காரைக்கால் ஜிப்மர் கிளைக்குத் தேவையான அனைத்து மருத்துவர்கள், துணை மருத்துவ பணியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் அனைவரையும் பணி நியமன விதிகள்படி முறையாகத் தகுதி அடிப்படையில் உடனே நியமிக்க வேண்டும்.

கொரோனாவால் உயிரிழப்பு புதுச்சேரியில் அதிகரித்து வரும் வேளையில், காரைக்காலில் மக்களின் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிப்மரின் தொலைதூர மருத்துவ சேவை மையம் இயங்குவதின் அவசியத்தை அரசுகள் உணர வேண்டும். விரைவில் திறக்கவில்லை என்றால், உயிர்களைக் காக்க இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும்" என்றார்.

ஜிப்மர், எய்ம்ஸ்க்கு மட்டும் ஏன் தனி நுழைவுத்தேர்வு? #DoubtOfCommonMan
அடுத்த கட்டுரைக்கு