Published:Updated:

ஒருவருக்கு ஒன்றரை லிட்டர், கடைகளில் அமரக்கூடாது! -கட்டுப்பாடுடன் திறக்கப்படும் கேரள கள்ளுக்கடைகள்

கள்ளு
கள்ளு ( மாதிரி படம் )

தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை கள்ளுக்கடைகள் திறந்திருக்கும். கள், பார்சல் மட்டுமே வழங்கப்படும்.

கேரள மாநிலத்தில், கடந்த ஜனவரி மாதம் கொரோனா கண்டறியப்பட்டது. இந்தியாவில் முதன் முதலில் கொரோனா பாதித்த மாநிலமாக அறியப்பட்ட கேரளம், தற்போது பாதிப்பில் இருந்து மீண்டுவருகிறது. இப்போது, புதிதாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளது. சில நாள்கள், புதிய கொரோனா பாதிப்பு இல்லாத நிலையும் இருந்தது. கேரளத்தில் நேற்று புதிதாக ஏழுபேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மஹாராஷ்டிரா மாநிலம், சென்னை மற்றும் குவைத்தில் இருந்து ஊர் திரும்பியவர்கள்.

இப்போது, சிகிச்சையில் 27 பேர் உள்ளனர். இதுவரை 489 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 27,986 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். மாநிலம் முழுவதும் 34 ஹாட் ஸ்பாட்டுகள் உள்ளன. மேலும், வெளிநாடுகளில் இருந்து 229 கர்ப்பிணிகள் உட்பட 1,307 பேர் கேரளா வந்துள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்கணிக்கப்பட்டுவருகின்றனர்.

தென்னை மரத்தில் இருந்து எடுக்கப்படும் கள்
தென்னை மரத்தில் இருந்து எடுக்கப்படும் கள்
மாதிரி படம்

கொரோனா கட்டுக்குள் வரும் நிலையில், கேரளத்தில் லாக்டெளன் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவருகிறது. இந்த நிலையில், நாளை (மே.13) கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என கேரள அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை கள்ளுக்கடைகள் திறந்திருக்கும். கள், பார்சல் மட்டுமே வழங்கப்படும் எனவும், கடையில் அமர்ந்து குடிக்க அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு ஒன்றரை லிட்டர் கள் மட்டுமே வழங்கப்படும். தேவையான தொழிலாளர்களைக் கொண்டு, சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு கள் வழங்கப்படும். ஒரே சமயத்தில், ஐந்துபேருக்கு மேல் கள்ளுக்கடைகளில் நிற்க அனுமதி இல்லை. கள்ளுக்கடைகளில் உணவுப் பொருள்கள் சாப்பிட அனுமதி இல்லை என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தென்னை மரங்கள்
தென்னை மரங்கள்

இதுகுறித்து கேரள அதிகாரி ஒருவர் கூறுகையில், "கேரள மாநிலத்தில் 3,590 கள்ளுக்கடைகள் உள்ளன. லாக்டெளன் தொடங்கிய பிறகுதான் கள்ளுக்கடைகளுக்கான ஏலம் நடத்தப்பட்டது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, கள்ளுகடைகள் செயல்படும்" என்றார். கேரள மாநிலத்தில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் நோக்கில் தென்னை மரங்களில் இருந்து கள் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு