Published:Updated:

``என்னிக்கும்போல... இன்னிக்கும் ஒரு கேஸு!" - போலீஸ் வழக்கு பதிவு குறித்து கங்கனா கருத்து

தன்மீது வழக்கு பதிவு செய்வது ஒன்றும் புதிதல்ல என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்திருக்கிறார்.

நடிகை கங்கனா ரணாவத் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை `காலிஸ்தான் தீவிரவாதிகள்’ என்று விமர்சனம் செய்திருந்தார். இதற்காக ஏற்கெனவே குருத்வாரா கமிட்டி டெல்லி போலீஸில் புகார் செய்திருந்தது. மும்பையிலும் சீக்கிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து நடிகை கங்கனா ராணாவதுக்கு எதிராக போலீஸில் புகார் செய்தனர்.

கங்கனா தங்கள் இனத்தை இழிவாகப் பேசிவிட்டதாக புகாரில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் கங்கனாமீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்திருக்கும் கங்கனா, `மற்றொரு நாள், மற்றொரு வழக்கு...!' என்று குறிப்பிட்டு, தான் ஒயின் கிளாஸுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

கங்கனா ரணாவத் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலிஸ்தான் தீவிரவாதிகளைக் கொசுவை நசுக்குவதுபோல் நசுக்கியதாக அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை `காலிஸ்தான் தீவிரவாதிகள்’ என்று கங்கனா தெரிவித்தது சீக்கியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

கங்கனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக், ``சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். இஸட் பிரிவு பாதுகாப்பு இருந்தால் மட்டும் தப்பிவிட முடியாது" என்று கூறினார். ஏற்கெனவே பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் குறித்து மோசமாக விமர்சனம் செய்ததாக மும்பையில் கங்கனாமீது வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கங்கனா கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது.

`விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டுக் கங்கனா கருத்து?!' - வலுக்கும் எதிர்ப்பு
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு