Published:Updated:

`விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டுக் கங்கனா கருத்து?!' - வலுக்கும் எதிர்ப்பு

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொசுக்களை கால் ஷூவால் மிதித்து நசுக்குவது போல் காலிஸ்தான் தீவிரவாதிகளை நசுக்கியதாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சமீப காலமாக அடிக்கடி சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறி வருகிறார். நாடு சுதந்திரம் பெற்றது தொடர்பாகவும், மகாத்மா காந்தி குறித்தும் சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதோடு விவசாய சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது குறித்து கவலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய பஞ்சாப் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். கங்கனா ரணாவத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக, `காலிஸ்தான் தீவிரவாதிகள் இன்று வேண்டுமானால் அரசை வளைத்திருக்கலாம்.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

ஆனால் ஒரு பெண்ணை மறக்கக்கூடாது. நாட்டில் பெண் பிரதமர் மட்டுமே காலிஸ்தான் தீவிரவாதிகளை தன் கால் ஷுவால் நசுக்கினார். இந்த நாட்டுக்கு அவர் எவ்வளவுதான் கெடுதல் விளைவித்திருந்தாலும், தன் உயிரைப் பணயம் வைத்து கொசுக்களை நசுக்குவது போல் காலிஸ்தான் தீவிரவாதிகளைக் காலால் நசுக்கினார். இன்றும் அவர் பெயரைக்கேட்டாலே நடுங்குகிறார்கள். அவரைப்போன்ற ஒருவர் அவர்களுக்குத் தேவை' என்று கருத்து பதிவிட்டிருக்கிறார். கங்கனாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் அகாலி தளத்தின் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, இது தொடர்பாகச் செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறார். அதில், `கங்கனா ரணாவத் வேண்டுமென்றே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காலிஸ்தான் இயக்கம் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஒட்டுமொத்த சீக்கிய சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் அவர்களை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும், அவர்களை இந்திரா காந்தி கொசுக்களை நசுக்குவது போல் நசுக்கியதாகவும் கூறியிருக்கிறார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல, கங்கனா மீது டெல்லி சைபர் பிரிவு போலீஸில் டெல்லி குருத்வாரா கமிட்டி இது தொடர்பாகப் புகார் அளித்திருக்கிறது.

`1947 சர்ச்சை’ : ``இதை நிரூபித்தால் பத்மஸ்ரீ விருதைத் திருப்பிக் கொடுக்கத் தயார்..!” - நடிகை கங்கனா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு