Published:Updated:

`மும்பை வருகிறேன்... முடிந்தால் தடுத்து நிறுத்துங்கள்..!’ - கங்கனா Vs மகாராஷ்டிரா அரசு

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

`பொதுவெளியில் அவதூறாகப் பேசுவதைக் கண்டிக்காமல், சுஷாந்த்தின் கொலைக்கு எதிராகப் போராடிவருபவர்களை அவதூறாகப் பேசும் கருத்துகளை மும்பை காவல்துறை லைக் செய்திருக்கிறது. இதைவிட மோசமான நிலைக்கு மும்பை காவல்துறை இறங்கிவிட முடியாது’ - கங்கனா

பாலிவுட்டில் சுஷாந்த் சிங் மரணம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை. ஒருபுறம், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்துவர, பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்துவருகிறது. தற்போது அந்த வழக்கில் புதிதாக போதைப் பொருள் பயன்பாடு குறித்த தகவல்கள் வெளிவர, போதைப் பொருள் தடுப்புக் குழுவும் இந்த வழக்கில் புதிதாக இணைந்திருக்கிறது.

கங்கனா - சுஷாந்த்
கங்கனா - சுஷாந்த்

மறுபுறம், `சுஷாந்த் சிங் மரணத்துக்கு பாலிவுட்டிலிருக்கும் நெப்போடிசம்தான் காரணம்’ என ஓப்பனாகப் பேசிய நடிகை கங்கனா ரனாவத், தொடர்ந்து அது தொடர்பாக பல்வேறு விஷயங்களைப் பேசிவருகிறார். இந்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் சிவசேனா தலைமையிலான அரசுக்கும், கங்கனா ரனாவத்துக்கும் பெரும் வார்த்தைப் போர் நடைபெற்றுவருகிறது.

என்ன நடந்தது..?

கங்கனா ரனாவத், தொடர்ச்சியாக `பாலிவுட் மாஃபியா’ என்று குறிப்பிட்டு பல முக்கிய நட்சத்திரங்களைக் கடுமையாக விமர்சித்துவந்தார். `கரண் ஜோகர், ஆதித்யா சோப்ரா, ராஜீவ் மசாந்த், மகேஷ் பட் உள்ளிட்ட ரத்தவெறி பிடித்த கழுகுக் கூட்டப் படையான மூவி மாஃபியாதான் சுஷாந்த்தைக் கொலை செய்தது’ என விமர்சித்திருந்தார்.

இதற்கிடையே, கங்கனா ரனாவத் உள்ளிட்ட சிலரை, பெயர் குறிப்பிடாமல் போடப்பட்டிருந்த அவதூறுப் பதிவை, மும்பை காவல்துறையின் ஒரு ட்விட்டர் கணக்கு லைக் செய்திருந்தது. இதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்ட கங்கனா, ``பொதுவெளியில் அவதூறாகப் பேசுவதைக் கண்டிக்காமல், சுஷாந்த்தின் கொலைக்கு எதிராகப் போராடிவருபவர்களை அவதூறாகப் பேசும் கருத்துகளை மும்பை காவல்துறை லைக் செய்திருக்கிறது. இதைவிட மோசமான நிலைக்கு மும்பை காவல்துறை இறங்கிவிட முடியாது” என்று கடுமையாகச் சாடினார்.

தொடர்ந்து மும்பையில் தனக்கான பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பினார். அது தொடர்பாக சில ட்வீட்களை பிரதமர் மோடியை டேக் செய்து பதிவிட்டிருந்தார் கங்கனா. இதற்கிடையே மும்பை காவல்துறை, கங்கனாவின் `ட்வீட்’டுக்கு பதிலளிக்கும்விதமாக ட்விட்டரில், ``இப்படி ஒரு பதிவுக்கு மும்பை காவல்துறை லைக் பதியவில்லை. ஸ்கிரீன் ஷாட் குறித்து விசாரிக்கிறோம்” எனக் குறிப்பிட்டது.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்
www.instagram.com/team_kangana_ranaut

பா.ஜ.க எம்.எல்.ஏ ராம் கடம் என்பவர், மகாராஷ்டிரா அரசு கங்கனா ரனாவத்துக்குப் பாதுகாப்பளிக்க மறுப்பதாகக் குற்றம்சாட்டினார். `சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான கருத்துகளைத் தெரிவித்துவரும் கங்கனாவுக்கு போதைப் பொருள் மாஃபியாக்களாலும் ஆபத்து நேரலாம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த `ட்வீட்’டைத் தொடர்ந்து கங்கனாவுக்கும் மகாராஷ்டிரா ஆளும் அரசுக்கும் பெரும் மோதலே நடந்துவருகிறது.

`சுஷாந்த் கொலைக்கு இதுதான் காரணம்... பாலிவுட்டில் போதைப் பழக்கம்!' - கங்கனா பகீர் தகவல்

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான `சாம்னா’வில், சிவசேனாவின் முக்கியத் தலைவர்களின் ஒருவரான சஞ்சய் ராவத், கங்கனாவைக் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார். `மும்பையில் வசித்துக்கொண்டே, மும்பை காவல்துறைக்கு எதிராகப் பேசுவது துரோகம்’ என்றார். மேலும், கங்கனாவை மீண்டும் மும்பை வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே கங்கனா ட்விட்டரில், ``சஞ்சய் ராவத், நான் மும்பைக்கு வர வேண்டாம் என மிரட்டல் விடுக்கிறார். மும்பை தற்போது ஏன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்போல் இருக்கிறது?” என ஆவேசமாகப் பதிவிட்டார்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், `நீங்கள் (கங்கனா ரனாவத்) மகாராஷ்டிராவை அவமதிக்க முயல்கிறீர்கள்’’ என்றார். மேலும், அவருக்கு (கங்கனாவுக்கு) ஆதரவாக ஓர் அரசியல் கட்சி அல்லது அதிகார மையம் இருக்க வேண்டும். அதனால்தான் அவர் இப்படிப் பேசுகிறார். மும்பை மற்றும் மும்பை காவல்துறையின் நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் கங்கனாவோ, தனக்கு மூவி மாஃபியாவைவிட மும்பை காவல்துறையை நினைத்துத்தான் அதிகம் அச்சமாக இருக்கிறது என்று கூறி ஆளும் கட்சியை அதிரவைத்தார்.

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ``கங்கனா ரனாவத்துக்கு மும்பை நகரம் பாதுகாப்பானதாக இல்லையென்றால், அவர் இங்கு வசிக்க உரிமை இல்லை. மும்பை காவல்துறை குறித்த அவரின் ஒப்பீடுக்குப் பின்னர், அவருக்கு இங்கு வசிக்க உரிமை இல்லை” என்றார். மீண்டும் ட்விட்டரில் மும்பை குறித்துப் பதிவிட்ட கங்கானா, ``பலர் என்னை மும்பை வர வேண்டாம் என்கிறார்கள். அதனாயே நான் மும்பை திரும்பத் திட்டமிட்டிருக்கிறேன். வரும் செப்டம்பர் மாதம் 9 -ம் தேதி மும்பை வருகிறேன். மும்பை விமான நிலையம் வந்த பின்னர் நேரத்தையும் வெளியிடுகிறேன். முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்” என்று சவால் விடுத்துள்ளார்.

உள்துறை அமைச்சரின் கருத்துக்கு பதிலளித்த கங்கனா, ``என் ஜனநாயக உரிமைகள்மீது அவர் முடிவுகளை எடுக்கிறார். ஒரே நாளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து தாலிபானுக்கு சென்றுவிட்டது” என்றார் காட்டமாக!

அடுத்த கட்டுரைக்கு