Published:Updated:

மும்பை: கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை இடித்த மாநகராட்சி... இடைக்காலத் தடைவிதித்த உயர் நீதிமன்றம்!

கங்கனா ரணாவத் அலுவலகம்
கங்கனா ரணாவத் அலுவலகம் ( @KanganaTeam /Ttwitter )

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்குச் சொந்தமான அவரது மும்பை அலுவலகம், மும்பை மாநகராட்சி அதிகாரிகளால் இடிக்கப்பட்டது.

மும்பை பாந்த்ராவிலுள்ள கங்கனா ரணாவத்தின் இல்லத்தின் ஒரு பகுதி, அலுவலகமாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது. மும்பை மாநகராட்சியின் ஒப்புதல் பெறாமல் அதை மாற்றம் செய்ததாக மாநகராட்சித் தரப்பில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.

நோட்டீஸ்
நோட்டீஸ்
@KanganaTeam /Ttwitter

அந்த நோட்டீஸில், ``வீட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கழிவறைப் பகுதி அலுவலகமாக மாற்றப்பட்டிருக்கிறது. மாடிப்படி அருகே கழிவறை கட்டப்பட்டிருக்கிறது. இதற்கான விளக்கத்தை அடுத்த 24 மணிநேரத்துக்குள் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. `வீட்டிலிருந்த யாரும் நோட்டீஸை வாங்காததால் வீட்டின் வாசலில் ஒட்டப்பட்டுள்ளதாகவும், பாந்த்ரா பகுதியில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம்தான்' என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

`மும்பையிலிருக்கும் என்னுடைய அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள், சட்டவிரோதக் கட்டடம் எனக் கூறி இடிக்க முயன்றிருக்கிறார்கள்’ என்று கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள், வீட்டின் ஒரு பகுதியை அதிகாரிகளின் முன்னிலையில் இடித்தனர். `அனுமதியின்றி கட்டப்பட்டிருப்பதால் இடிக்கப்படுகிறது’ என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கங்கனா ரணாவத் அலுவலகம்
கங்கனா ரணாவத் அலுவலகம்
@KanganaTeam /Ttwitter

மாநகராட்சியின் செயலை எதிர்த்து கங்கனா தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கட்டடத்தை இடிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

கடுமையான அச்சுறுத்தல் நிலவிவரும் நிலையில், தனது சொந்த மாநிலமான இமாச்சல் பிரதேசத்திலிருந்து, தனக்கு வழங்கப்பட்டிருந்த ஓய் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் மும்பை கிளம்பினார் கங்கனா. மும்பை வருவதற்கு முன்னர் பஞ்சாபில் கோயிலுக்குச் சென்று வந்தார்.

கங்கனா ரணாவத்துக்கு எதற்காக ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது, மகாராஷ்டிரா அரசுக்கும் இவருக்கும் என்ன பிரச்னை என்பது குறித்து கீழேயுள்ள லிங்க்கில் விரிவாக படிக்கலாம்.

`ஒரு லட்சம் மக்களுக்கு 138 காவலர்கள்... கங்கனாவுக்கு மட்டும் Y Plus?’-மஹூவா மொய்த்ரா எம்.பி காட்டம்

கங்கனா ரணாவத், `எனது வீட்டில் சட்டவிரோத கட்டுமானம் எதுவும் இல்லை. செப்டம்பர் 30-ம் தேதி வரை கொரோனா பாதிப்பு காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றலுக்குத் தடை இருக்கிறது’ #DeathOfDemocracy என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்தச் செயலுக்குப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். தேசிய அளவில் #DeathOfDemocracy என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகிவருகிறது.

இந்நிலையில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள், சட்டவிரோத கட்டடத்துக்கான விளக்கத்தைக் கேட்டு, கங்கனாவுக்கு புதிய நோட்டீஸை வழங்கியிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு