Published:Updated:

`பிரதமர் மோடியைத் தடுமாற வைத்த உயரம்!' -புதுப்பிக்கப்படும் கான்பூர் படிக்கட்டுகள்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி ( ANI )

கான்பூரில், பிரதமர் மோடியைத் தடுமாற வைத்த படிக்கட்டுகள் சற்று அதிக உயரத்தில் இருப்பதால் அதை இடித்துப் புதுப்பிக்க உ.பி அரசு முடிவு செய்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அடல் கட் பகுதியில் கடந்த வாரம் நடந்த `நமாமி கங்கா’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதில் படகுப் பயணம் மேற்கொண்டு கங்கை நதியின் தூய்மையை ஆய்வு செய்தார் பிரதமர். ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டுத் திரும்பும்போது படிக்கட்டுகளில் ஏறுகையில் தடுமாறிவிட்டார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
ANI

சில விநாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில் பிரதமர் மோடி வேகமாகப் படி ஏறுகிறார். அப்போது திடீரென தடுமாறுகிறார். அடுத்த விநாடியில் அருகிலிருந்த பாதுகாப்பு வீரர்கள் அவரைத் தூக்கிவிட்டனர். இதனால் பிரதமருக்கு எந்தக் காயங்களும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடியைத் தடுமாற வைத்த அந்தப் படிக்கட்டை இடிக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. அடல் கட் பகுதி படிக்கட்டுகளில் ஒன்றின் அளவு மட்டும் சற்று அதிகமாக இருந்துள்ளது. அதைக் கவனிக்காமல்தான் மோடி தடுமாறினார் என்று கூறப்பட்டுள்ளது.

`தைரியம் இருந்தால் இதைச் செய்யுங்கள்!’ - காங்கிரஸுக்கு சவால் விடுத்த பிரதமர் மோடி! #CAA

இதுபற்றிப் பேசியுள்ள அப்பகுதியின் மண்டல கமிஷனர் பாப்டே, ``பிரதமரைத் தடுமாற வைத்த படிகளில் ஒன்றின் நீளம் மட்டும் சற்று அதிகமாக உள்ளது. அது மற்ற படிகளிலிருந்து வேறுபடுகிறது. அதை மட்டும் இடித்துவிட்டு, மற்ற படிகளின் உயரத்திலேயே கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் வேறு சிலரும் அந்தப் படியில் ஏறும்போது தடுமாறியுள்ளனர். எனவே, அந்தப் படி புதுப்பிக்கப்படவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
ANI

``உத்தரப்பிரதேசத்தில் இதேபோன்று நதிக்கரையில் படிக்கட்டுகளைக் கட்டும் பணிகளை நாங்கள் ஏற்கெனவே செய்துவருகிறோம். அடல் கட் படிக்கட்டுச் சீரமைப்புப் பணிகளையும் எங்களுக்கு அளித்தால் சிறப்பாகச் செய்து முடிப்போம்.

கங்கை நதிக்கரையில் விழாக்காலங்களில் ஆரத்தி எடுத்து வழிபடுவது இங்குள்ள மக்களின் வழக்கம். அதற்காகத் தங்களுக்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு படிக்கட்டின் நீளத்தை மட்டும் அதிகமாக வைத்துக்கட்டும் படி எங்களிடம் கேட்டுக்கொண்டனர். நாங்களும் அதைப் பின்பற்றிக் கட்டி வருகிறோம். இனி படிகளின் நீளம் சரிசெய்யப்படும்” என இந்தியா லிமிடட் நிறுவனத்தின் பொறியாளர் தன்வீர் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு