Published:Updated:

கார்கில் போரில் கணவனை இழந்த பெண்: `அவர் நாட்டை காதலித்தார்; அவ்ளோதான் எனக்குத் தெரியும்!’

கார்கில் போர் வெற்றி
கார்கில் போர் வெற்றி

`கணவர் இறந்த பிறகு முதல் சில வாரங்கள் கடப்பது எனக்கு நரகமாக இருந்தது. என் உயிரையும் எடுத்துக்கொள் எனத் தினமும் கடவுளிடம் வேண்டினேன்’ என கட்னா தேவி குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரிலிருந்து லே பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ளது கார்கில் சிகரம். அந்தப் பகுதியில் சாதாரண நாள்களிலும் கடுமையான குளிர் நிலவும், அந்தக் காலகட்டத்தில் கார்கில் பகுதியில் உள்ள வீரர்களை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் திரும்பப் பெற்றுக்கொள்ளும்.

கார்கில்
கார்கில்
wikipedia

1999-ம் ஆண்டும் இதேபோன்றுதான் நடந்தது. ஆனால், இந்திய வீரர்கள் மீண்டும் கார்கில் பகுதிக்குச் செல்லும்போது அந்தப் பகுதி முழுவதையும் பாகிஸ்தான் படை கைப்பற்றியிருந்தது. அதன் பின்னர் `ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் உடனடியாக எதிர்த்தாக்குதல் நடத்தில் கார்கில் உட்பட பாகிஸ்தான் ஆக்கிரமித்த மொத்த இடத்தையும் இந்தியா மீண்டும் ஆக்கிரமித்தது. 1999-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி ஆபரேஷன் விஜய் வெற்றி பெற்றதாகவும், கார்கில் பகுதி மீட்கப்பட்டுவிட்டதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாகவும் ஆண்டுதோறும் இந்த நாள் கார்கில் வெற்றி தினமாக அனுசரித்து வருகிறது இந்திய அரசு. கார்கில் போரில் வெற்றிபெற்ற 20-ம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கார்கில் போரில் தன் கணவரை இழந்த கட்னா தேவி அவருடனான நினைவுகளையும், கார்கில் போரில் கணவர் இறந்தது பற்றியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் (Indian Express) ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார். தற்போது அவர் இமாசலபிரதேசத்தில் தன் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.

கார்கில் போர்
கார்கில் போர்
wikipedia

``1999 -ம் ஆண்டு பெரும்பாலும் லேண்ட்லைன் போன் மட்டுமே இருக்கும். அதுவும் நிறைய பேர் வீட்டில் இருக்காது. பக்கத்து வீட்டில் உள்ள போனுக்குதான் எங்கள் உறவினர்கள் போன் செய்வார்கள். மிகவும் அவசரம் என்றால் மட்டுமே அந்த போனும் வரும். எனக்கும் என் கணவர் தீப் சந்துக்கும் 1999, பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. விடுமுறைக்காக வந்திருந்த என் கணவர் இரண்டு மாதங்கள் என்னுடன் இருந்துவிட்டு மீண்டும் கார்கிலுக்குச் சென்றுவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜூலை 8, 1999 அன்று பக்கத்து வீட்டுக்கு இந்திய ராணுவத்திடமிருந்து போன் வந்துள்ளது. அதில் சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் எங்கள் வீட்டுக்கு ஓடி வந்து அவர்கள் கூறியதை மிகவும் பதற்றமாக அனைவரிடமும் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த விஷயம் என்னவென்று எனக்கு மட்டும் தெரியாது. அப்போது நான் நான்கு மாதம் கர்ப்பமாக இருந்ததால் என்னிடம் யாரும் எதுவும் கூறவில்லை. என் வீட்டில் உள்ள அனைவரும் ஒருவித கலக்கத்துடன் காணப்பட்டனர்.

கட்னா தேவி
கட்னா தேவி
Indian Express

மேலும், எங்கள் வீட்டுக்குப் பெரும்பாலும் உறவினர்கள் வரமாட்டார்கள் ஆனால், அன்றைய தினம் நிறைய பேர் வந்துசென்றனர். எனக்கு எதுவும் விளங்கவில்லை. பிறரிடம் கேட்கவும் பயமாக இருந்தது. ஏதோ தவறாக நடப்பதாகத் தோன்றியது. ஜூலை 8-ம் தேதி மாலை என் வீட்டுக்கு வெளியில் குழப்பமான சூழல் நிலவியது. நான் அறையை விட்டு வெளியில் சென்று பார்த்தபோது, வாசலின் என் கணவரின் உடல் இருந்தது. அதைப் பார்த்ததும் அங்கேயே நான் மயங்கி விழுந்துவிட்டேன்.

கார்கில் போர் தொடங்கிய நாளிலிருந்து தினமும் செய்தித்தாள் தொலைக்காட்சி எனத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்போம். என் கணவரை நினைத்து குடும்பத்தினர் அனைவரும் கவலைப்பட்டனர். ஆனால், அவருக்கு எதுவும் நடக்காது என நான் நம்பிக்கையாக இருந்தேன். என் நம்பிக்கை நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை. அவர் எனக்குக் கடிதம் மட்டுமே எழுதுவார். எப்போதாவது போனில் பேசுவார். அப்படி பேசும்போதெல்லாம் அவர் கூறும் ஒரு வார்த்தை `நான் நலமாக உள்ளேன்’. நாங்கள் புதிதாகத் திருமணமான தம்பதி என்பதால் அவரிடம் பேசவும், அவருக்கு ஏதாவது வேண்டுமா எனக் கேட்கவும் எனக்கு வெட்கமாக இருக்கும். மே 1999-க்குப் பிறகு அவரிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை.

கடிதம்
கடிதம்
Indian Express

கணவர் இறந்து சில மாதங்களில் என் மகள் பிறந்துவிட்டாள். அதன் பிறகுதான் வாழ்க்கையின் மீது பற்றுவந்தது. என் மகளுக்காக வாழ வேண்டும் என முடிவெடுத்தேன். அந்த நேரத்தில் ஒரு ஆபீஸரின் மனைவியைச் சந்திக்க நேர்ந்தது. அவர்தான் எனக்கு நம்பிக்கை அளித்தார். வேறு திருமணம் செய்துகொள் என அவர்தான் முதலில் என்னிடம் கூறினார். பின்னர் அனைவரும் என்னை வேறு திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினர். வேறு வழியில்லாமல் என் கணவரின் சகோதரர் விஜய் குமாரைத் திருமணம் செய்துகொண்டேன். அப்போது அவரும் இந்திய ராணுவத்தில்தான் பணியிலிருந்தார்.

என் மகளின் எதிர்காலத்துக்காகவும், அவளுக்கு ஒரு தந்தை வேண்டும் என்பதற்காகவும் திருமணத்துக்குச் சம்மதித்தேன். என் முதல் கணவர் யார் என்றுகூட மகளுக்குத் தெரியாது. அவர் பற்றி தெரியக் கூடாது என்பதற்காக வீட்டிலிருந்த அவரின் புகைப்படங்களை எடுத்துவிட்டோம். அவர் இருந்த தடமே தெரியாமல் குழந்தையை வளர்த்தோம். அவளும் விஜய் குமாரை தன் தந்தையாக நினைத்தாள். ஒருநாள் செய்தித்தாளில் என் முதல் கணவரைப் பற்றி அறிந்த பிறகு என்ன கேட்கப் போகிறாள் எனப் பயந்தேன். ஆனால், மகள் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை. தன் தந்தையின் தியாகத்தை அறிந்து அவள் பெருமைப்பட்டாள்” என தெரிவித்துள்ளார் கட்னா தேவி.

கார்கில் நினைவிடம்
கார்கில் நினைவிடம்
wikipedia

மேலும். ``தீப் சந்த் இறந்து 20 வருடங்கள் ஆகிறது. ஆனால், அவரின் நினைவுகளை என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை. நாங்கள் இருவரும் வெறும் 2 மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தோம். சந்த் மிகவும் நேர்மையானவர், கருணை மனம் படைத்தவர், நாட்டைக் காதலித்தார், விளையாட்டு பிடிக்கும் இவைதான் அவரைப் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்கள்” என கட்னா தேசி கூறியுள்ளார்.

News & Photo Credits : Indian Express

அடுத்த கட்டுரைக்கு