Published:Updated:

`நாடகமாக மட்டுமே பாருங்கள்'- சி.ஏ.ஏ எதிர்ப்பு நாடகத்துக்காக கைதுசெய்யப்பட்டவரின் மகள் கண்ணீர்

காவல்துறை விசாரணை
காவல்துறை விசாரணை

கர்நாடக மாநிலம் பிதாரில் உள்ள ஷாகின் பள்ளியில், சி.ஏ.ஏ பற்றி மாணவர்கள் நடத்திய நாடகம் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) எதிரான போராட்டங்கள் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இந்தியா முழுவதும் நடைபெற்றுவருகின்றன. இதை அரசும் காவல்துறையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கிவருகிறது. சி.ஏ.ஏ-வுக்கு எதிரான நிகழ்ச்சிகளுக்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் பிதார் மாவட்டத்தில் உள்ள ஷாகின் பள்ளியில், சி.ஏ.ஏ பற்றி மாணவர்கள் நடத்திய நாடகம் ஒன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

சி.ஏ.ஏ போராட்டம்
சி.ஏ.ஏ போராட்டம்

கடந்த ஜனவரி 21-ம் தேதி, கர்நாடகா மாநிலம் பிதாரில் உள்ள ஷாகின் பள்ளி மாணவர்கள், சி.ஏ.ஏ பற்றி நாடகம் ஒன்றை நடத்தியிருந்தனர். இந்த நாடகம், தேசத்துக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் இருப்பதாகக்கூறி, பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி, காவல்துறையில் புகார் அளித்துள்ளது. அதன்பேரில், பள்ளியின் மீதும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மீதும் கர்நாடகக் காவல்துறை தேசத்துரோக வழக்கு பதிவுசெய்துள்ளது. ஒரு மாணவியின் தாயான நஸ்புனிஸா மற்றும் பள்ளியின் ஆசிரியர் ஃபரிதா பேகம் ஆகியோரை காவல்துறை கைதுசெய்து சிறை வைத்துள்ளது. அவர்கள், தற்போது வரை விடுதலை செய்யப்படவில்லை.

நோ சி.ஏ.ஏ, நோ என்.ஆர்.சி! - கோவை மக்களின் நூதன போராட்டம்

இந்த நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து பள்ளிக்கு வந்து மாணவர்களை விசாரித்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ``காவல்துறையினர், 9-12 வயதுக்குள்ளான குழந்தைகளை விசாரணை என்ற பெயரில் மனரீதியாக சித்ரவதை செய்துவருகிறார்கள். இது அவர்களைக் கடுமையாகப் பாதிக்கும். காவல்துறையினர் விசாரணை என்கிற பெயரில் ஒரே கேள்விகளை மாணவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு வருகிறார்கள்" எனப் பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி தௌசிப் மடிக்கேரி தெரிவித்துள்ளார். கணவனை இழந்த நஸ்புனிஸா சிறை வைக்கப்பட்டுள்ளதால் அவருடைய மகள் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்.

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்கள்
சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்கள்

தாய் இல்லாமல் மகள் தவித்து வருகிறார். இதுபற்றி அவருடைய மகள் கண்ணீர் மல்கப் பேசுகையில், `` இந்த நாடகத்தை சி.ஏ.ஏ பற்றிய சந்தேகங்களைக் களைவதற்காக மட்டுமே நடத்தினோம். இதனை வெறும் நாடகமாக மட்டுமே பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

News Credit: The Quint

அடுத்த கட்டுரைக்கு