Published:Updated:

`ஊரடங்கா...அப்டின்னா?'- அரசுப் பள்ளியில் பிரியாணி விருந்தளித்து பிறந்தநாள் கொண்டாடிய பாஜக எம்.எல்.ஏ

கொரோனா உத்தரவை மதிக்காத எம்.எல்.ஏ
கொரோனா உத்தரவை மதிக்காத எம்.எல்.ஏ

கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கை மதிக்காத பா.ஜ.க எம்.எல்.ஏ தன் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடினார்.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்படாத காரணத்தினால், நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பலரும் கருத்து கூறிவருகின்றனர். இந்த நிலையில், கர்நாடகாவில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ ஒருவரே, ஊரடங்கு உத்தரவை மீறி, தன் பிறந்தநாளை ஏராளமான தொண்டர்களுடன் கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாணி வாங்க குவிந்த மக்கள்
பிரியாணி வாங்க குவிந்த மக்கள்

கர்நாடக மாநிலம் துருவகேரா தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ மசாலே ஜெயராம். இவருக்கு நேற்று பிறந்தநாள். தன் பிறந்தநாளை தொகுதி மக்களிடையே சேர்ந்து கொண்டாட முடிவு செய்த மசாலே ஜெயராம், அவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்தார். இதையடுத்து, தும்கூரு அரசுப் பள்ளியில் பிறந்தநாள் விழா கொண்டாட விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது. தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டி தன் பிறந்தநாளைக் கொண்டாடிய எம்.எல்.ஏ-வுக்கு அவருக்கு நெருங்கியவர்கள் கேக் ஊட்டியும் மகிழ்ந்தனர்.

இதுதவிர, பள்ளி குழந்தைகளையும் தன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வைத்திருந்தார். பள்ளியில் பிரியாணி வழங்கப்படுவதை கேள்விப்பட்டு ஏராளமான மக்கள் பள்ளி வளாகத்தில் கூடினர். சமூக விலகல் குறித்து கிஞ்சித்தும் யோசிக்காத மக்கள் முண்டியடித்துக்கொண்டு, பிரியாணியை வாங்கிச் சென்றனர். ஊரடங்கு காலத்தை மதிக்க வேண்டிய எம்.எல்.ஏ, அதுவும் ஆளுங்கட்சியை சேர்ந்தவரே தன் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஓவியம்
கொரோனா ஓவியம்

கர்நாடகாவில் 200 பேருக்கு கொரோனா பாதிப்புள்ளது. 6 பேர் இறந்துள்ளனர். தும்கூரு பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, 'மக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து நடக்க வேண்டும்' என்று கூறினார்.

`யார் நீங்கள்.. இங்கு என்ன செய்கிறீர்கள்?’- கர்நாடக உள்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய தமிழக போலீஸ்

பிரதமர் மோடியோ சமூக விலகல் குறித்து ஒவ்வொரு முறையும் எடுத்துரைத்து வருகிறார். ஆனால், கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ-வோ பிரதமர், முதல்வர் வேண்டுகோளை காதில் போட்டுக் கொள்வில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

அடுத்த கட்டுரைக்கு