Published:Updated:

`கழுகின் மீதான ஈர்ப்பு; காலி பர்ஸ்; கலாமின் புகைப்படம்!' - ஏழ்மையை வென்ற இளம் ட்ரோன் விஞ்ஞானி

இளம் விஞ்ஞானி பிரதாப்
இளம் விஞ்ஞானி பிரதாப் ( the better india )

பணம் இல்லாத காலி பர்ஸ் நம்பிக்கையை உடைக்கும்போதெல்லாம் அதில் இருக்கும் கலாமின் படம் தனக்கு மிகுந்த நம்பிக்கை அளித்ததாக கூறியுள்ளார் இந்தியாவின் இளம் ட்ரோன் விஞ்ஞானி.

இந்தியாவில் கண்ணுக்குத் தெரியாத பல சாதனையாளர்கள் தினம் தினம் உருவாகிக்கொண்டுதான் உள்ளனர். ஆனால், அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் அவர்களைப் பாராட்டுவதற்கும்தான் நமக்குப் போதிய நேரம் இருப்பதில்லை. அப்படிப் பாராட்டப்பட வேண்டியவர்கள் பட்டியலில் அதிகக் கவனம் ஈர்த்த இளைஞர்தான் பிரதாப்.

2017-ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச ரோபோடிக்ஸ் கண்காட்சியில் எலெக்ட்ரானிக் கழிவுகள் மூலம் ட்ரோன் செய்து, தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இவரின் உழைப்பு மற்றும் சாதனைக் கதை தற்போது வைரலாகி வருகிறது.

Representational image
Representational image
pixabay

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரதாப். நடுத்தர விவசாயக் குடும்பத்தில் வளர்ந்த ஒரு சிறுவன், தந்தையைப் போலவே சிறுவயதிலேயே வயலில் இறங்கி வேலை செய்துவந்துள்ளார். கடுமையான சூரிய ஒளி மற்றும் உடல் உழைப்பு என எப்போதும் வயலிலேயே இருந்த அந்தச் சிறுவனுக்குப் பரந்து விரிந்த வானத்தில், கட்டுப்பாடில்லாமல் பறந்த கழுகுகளின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த ஈர்ப்புதான் அவரை ட்ரோன் செய்யத் தூண்டியுள்ளது.

News & Image Credits : The Better India

``கழுகுகள் எனக்கு இயல்பாகவே மிகவும் பிடிக்கும். ஒருநாள் தொலைக்காட்சியில் ட்ரோன் பறப்பதைப் பார்த்தேன். அவை எனக்குக் கழுகுகளை நினைவுபடுத்தின. அப்போதுதான் சொந்த முயற்சியில் ஒரு ட்ரோன் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது. நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிக்கும்போது கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதிகளெல்லாம் எங்கள் ஊரில் கிடையாது. அதனால் என் குடும்பத்தினருக்குத் தெரியாமல் ஒரு கணினி மையத்தில் சுத்தம் செய்பவனாக வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது தினமும் 45 நிமிடங்கள் கம்ப்யூட்டரை இயக்குவதற்கு அதன் உரிமையாளர் என்னை அனுமதிப்பார். அதுதான் என் சுதந்திரத்தின் ஆரம்பப் புள்ளி.

ட்ரோன்
ட்ரோன்
Representational image

12-ம் வகுப்பு படிக்கும்போது, ட்ரோன் பற்றி ஓரளவுக்கு தெரிந்துகொண்டு சொந்தமாக ட்ரோன் செய்யலாம் என நினைத்தேன், ஆனால் அதற்குமுன் மிகப்பெரும் சவால் கண் முன்பு தெரிந்தது. ட்ரோன் செய்யத் தேவையான உபகரணங்களை வாங்க என்னிடம் பணம் இல்லை. மோட்டார், மதர் போர்ட், ஒயர் போன்றவற்றைக்கூட வாங்க முடியாத நிலையிலிருந்தேன். அதன் காரணமாகத்தான் எலெக்ட்ரானிக் கழிவுகளின் மூலம் ட்ரோன் செய்ய முடிவெடுத்து ஒரு கடைக்குச் சென்று தேவையான அனைத்துப் பொருள்களையும் மிகவும் குறைந்த விலையில் வாங்கினேன்.

ஒருமுறை நான் தங்கியிருக்கும் அறைக்கு வாடகை கொடுக்க முடியாததால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் என் கனவுகளுக்காகப் பேருந்து நிலையத்தில் தூங்கிய சம்பவமும் நடந்துள்ளது.
பிரதாப்

அதற்குள் என் படிப்பு முடிந்து பட்டப்படிப்புக்காக மைசூர் செல்லவேண்டிய நிலை வந்தது. ஜே.எஸ்.எஸ் கல்லூரியில் பி.எஸ்சி படிப்பில் இணைந்தேன். நான் மைசூரு செல்வதற்கு முன்பு கல்லூரிக் கட்டணம், விடுதி, பிற செலவுகள் என மொத்தமாக 8,000 ரூபாயை என் தந்தை வழங்கினார். நான் சம்பாதித்த பணத்தையும் ட்ரோன் தயாரிக்கும் பணிகளுக்கே செலவு செய்துவிட்டேன்.

கல்லூரியில் சேர்ந்த ஒரு சில மாதங்களில் மொத்த பணமும் காலியாகிவிட்டது. அதனால் மைசூரிலிருந்து பல கி.மீட்டர்கள் நடந்து சென்று பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்தேன். அதில் வந்த பணத்தை வைத்துத்தான் தங்குவதற்கு, உணவு மற்றும் ட்ரோன் தயாரிப்புக்குப் பயன்படுத்திக்கொண்டேன்.

பிரதாப்
பிரதாப்
the better india

ஒருமுறை நான் தங்கியிருக்கும் அறைக்கு வாடகை கொடுக்க முடியாததால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன். என்ன செய்வது என்று தெரியாமல் என் கனவுகளுக்காகப் பேருந்து நிலையத்தில் தூங்கிய சம்பவமும் நடந்துள்ளது. என் 16-வது வயதில் முதல் ட்ரோன் தயாரித்து முடித்தேன். ஆனால், அது பறக்க 50 முறை பிழைகளைக் கடக்க வேண்டியிருந்தது. என் ட்ரோன் முதன் முதலில் 1000 மீட்டர் உயரம் வரை மேலே பறந்தது. அந்த நொடியில் நான் அனுபவித்த மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை” என்று தன் கனவைப் பற்றிப் பகிர்ந்துள்ளார் பிரதாப்.

பிறகு கல்லூரிப் பேராசிரியர்களின் வழிகாட்டுதலின்படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த ட்ரோன் கண்காட்சி, போட்டி ஆகியவற்றில் கலந்துகொண்டு ஜப்பானில் நடந்த சர்வதேசப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.

இந்தியாவின் ட்ரோன் விஞ்ஞானியாக அறியப்படும் பிரதாப், இதுவரை 600 ட்ரோன்களை உருவாக்கியுள்ளார். மிகவும் குறைந்த விலையில் ட்ரோன்களைத் தயாரித்து அதை இந்தியப் பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு வழங்க வேண்டும் என்பதை தன் லட்சியமாகக் கொண்டு உழைத்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய அவருக்கு இறுதியில் ஜப்பான் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த நேரத்தில் மீண்டும் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பணம்தான் பிரதாப் தன் வாழ்வில் சந்தித்த பெரும் சவாலாக இருந்துள்ளது. இந்த முறையும் ஜப்பான் செல்வதற்கு ஆகும் பயணச் செலவுகளை யார் செய்வது? எப்படிச் சமாளிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரதாப்
பிரதாப்
the better india

இதையடுத்து, பிரதாப்பின் தாய் தன்னிடம் இருந்த அனைத்து தங்க நகைகளையும் விற்று மகனின் கனவுகளை நிறைவேற்ற விமான டிக்கெட்டுக்குப் பணம் தயார் செய்துள்ளார். பிரதாப்பின் கல்லூரியில் இருக்கும் அனைத்து ஆசிரியர்களும் இணைந்து பணம் கொடுத்து உதவியுள்ளனர். தன் நலம் விரும்பிகளின் ஆதரவு மற்றும் துணையோடு இளம் விஞ்ஞானி பிரதாப் ஜப்பானுக்குப் பறந்துள்ளார். டோக்கியோ விமான நிலையத்திலிருந்து 25 நிமிட பயணத்தில் நடக்கும் சர்வதேச ரோபோட்டிக்ஸ் கண்காட்சியில் கலந்துகொள்வதைத் தவிர வேறு எதுவுமே தெரியாமல் அங்கு சென்றுள்ளார்.

Vikatan

“ ஜப்பானில் கால் வைத்ததும் சில நிமிடங்கள் அப்படியே உறைந்துபோனேன். பின்னர் மீண்டும் சுயநினைவுக்கு வந்து விமான நிலைய ஊழியர்களின் உதவியுடன் வெளியில் வந்தேன். அப்போது வெறும் 1500 ரூபாய் மட்டுமே என் பாக்கெட்டில் இருந்தது. வழிகாட்டுபவர்களின் உதவியுடன் ரயில் மூலம் கண்காட்சி நடக்கும் இடத்துக்கு என் ட்ரோனுடன் சென்றேன்.

அங்கு சுமார் 120 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுடன் போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. இந்தக் கூட்டத்தில் நான் எப்படி வெற்றிபெறுவேன் என்று தோன்றியது. மேலும் அங்கு வந்திருந்த அனைவரும் மிகவும் சரளமாக ஆங்கிலம் பேசினார்கள்.

தங்கம் வென்ற பிரதாப்
தங்கம் வென்ற பிரதாப்
the better india

இவை அனைத்துக்கும் நடுவில் நான் வந்த வேலையில் தீவிர கவனம் செலுத்தினேன். முதல் நாள் 7 விளக்கச் சுற்றுகள் நடைபெற்றன. அது அனைத்தையும் கடந்து மறுநாள் நடக்கும் ட்ரோன் சோதனை சுற்றுக்கு முன்னேறினேன். முதல்நாள் வெற்றி எனக்குப் பலம் கொடுத்தது. நம்பிக்கையுடன் அடுத்தநாள் சுற்றுகளில் கலந்துகொண்டேன். இறுதியில் 20 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தப் பட்டியலில் இறுதி வரையில் என் பெயர் இல்லாததை நினைத்து நம்பிக்கையிழந்தேன். ஆனால், சரியாக 20-வது பெயராக என் பெயர் அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் நாள் நடந்த இறுதிச்சுற்று என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத ஒரு தருணம். போட்டியின் முடிவுகளை அதிகாரிகள் அறிவித்தபோது என் பெயர் மற்றும் தங்கப் பதக்கம் இது இரண்டு மட்டும்தான் என் காதில் கேட்டது. அந்த நிமிடம் உலகம் சுழல்வது நின்றுவிட்டதாக உணர்ந்தேன். நான் மேடை வரை நடப்பதே மிகவும் கடினமாக இருந்தது” என்று ஜப்பான் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் பிரதாப்.

மீட்புப் பணிகளில் பிரதாப்
மீட்புப் பணிகளில் பிரதாப்
the better india

எப்போதும் தன் பர்ஸில் அப்துல் கலாம் புகைப்படம் வைத்திருந்ததாகவும் பணம் இல்லாத காலி பர்ஸ் தன் நம்பிக்கையை உடைக்கும்போதெல்லாம் அதில் இருக்கும் கலாமின் படம் தனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்ததாகவும் பிரதாப் கூறியுள்ளார். கடந்த வருடம் கர்நாடகாவின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டபோது அங்கு நடப்பதை அறிந்துகொள்ள பிரதாப்பின் ட்ரோன்களே அதிகம் உதவியுள்ளன.

மனிதன் செல்ல முடியாத இடத்துக்கும் அவரின் ட்ரோன்கள் சென்று அங்கிருக்கும் உண்மை நிலையை அறிய உதவியுள்ளன. பிரதாப் ஜப்பான் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற பிறகு ட்ரோன் உலகில் பெரும் புகழ்பெற்றவராக வலம் வருகிறார். இருந்தும் தன் தாய் நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்ற உயர்ந்த லட்சியங்களுடன் தன் பணியைத் தொடர்ந்து வருகிறார்.

வாழ்த்துகள் பிரதாப்!

அடுத்த கட்டுரைக்கு