Published:Updated:

`எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும்!’- ரூ.25 லட்சம் நிலத்தை விற்று உதவும் கர்நாடக சகோதரர்கள்

பாஷா சகோதரர்கள்
பாஷா சகோதரர்கள்

``எல்லா குடும்பங்களுக்கும் மூன்று வேளையும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்’’ என்கின்றனர் பாஷா சகோதரர்கள்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸைக் காட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல ஏழை எளிய மக்களும் தினக் கூலிகளும் எவ்வித வாழ்வாதாரமும் தினசரி உணவும் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்தநிலையில், சேவை மனப்பான்மை கொண்ட சிலர் அவர்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். இவற்றுள் ஒருபடி மேலே சென்று கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் தங்கள் நிலத்தை விற்று ஏழைகளுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

ஊரடங்கு
ஊரடங்கு
AP | Rajesh Kumar Singh

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டத்தில் இருந்து கோலார் நகரில் வாழும் தினக்கூலி தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் படும் துயரங்களை பார்த்து தாஜம்முல் பாஷா மற்றும் முஷம்மில் பாஷா சகோதரர்கள் கலங்கியிருக்கின்றனர். அதனால், நகரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான 25 லட்ச ரூபாய் மதிப்புக் கொண்ட நிலத்தை நண்பருக்கு விற்று ஏழைகளுக்கு உணவளிக்க முடிவு செய்தனர்.

இதுகுறித்து பேசியுள்ள தாஜம்முல் பாஷா, ``கொரனா பாதிப்பில் இருந்து தப்ப ஊரடங்கு மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டியுள்ளது. இருப்பினும், தினசரி உணவுகூட கிடைக்காத ஏழை மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டியுள்ளது. இந்நிலையில் அவர்களது வீட்டு வாசலுக்கே சென்று மளிகை பொருட்களை வழங்குவதே அவர்களை காக்க சிறந்த வழியாகும்" எனக் கூறியுள்ளார்.

பாஷா சகோதரர்கள்
பாஷா சகோதரர்கள்

முதல் வேலையாக வீட்டிற்கு அருகில் டெண்ட் அமைத்து மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்கி அதில் சேமித்துள்ளார். மேலும், வீடு இல்லாதவர்கள் மற்றும் வீட்டில் சமைக்க இயலாதவர்களுக்கு உணவு வழங்கும் வண்ணம் சமையல் அறையும் அமைத்துள்ளனர். ஒவ்வொரு வீட்டிற்கும் 10 கிலோ அரிசி, 1 கிலோ மாவு உள்ளிட்ட பொருட்கள், 2 கிலோ கோதுமை, 1 கிலோ சர்க்கரை மற்றும் தேவையான அளவு எண்ணெய், தேயிலை மேலும், சனிடைசர்கள் மற்றும் மாஸ்க் ஆகிய பொருட்களையும் வழங்கியுள்ளனர்.

``ஊசி, பாசி, பொம்மையெல்லாம் வீணாப்போச்சு... சாப்பாட்டுக்கே திண்டாடுறோம்”- கலங்கும் நாடோடிகள்!

மேலும் பேசிய தாஜம்முல், ``சிறு வயதிலேயே எங்கள் பெற்றோரை இழந்து கோலாரில் பாட்டி வீட்டிற்கு வந்தோம். நாங்கள் உணவிற்கு வருந்தியபோது சீக்கியர், முஸ்லீம், இந்து என அனைத்து மதத்தவரும் எங்களுக்கு உணவழித்தனர். சாதி, மத பாகுபாடின்றி மனிதநேயதுடன் எங்களுக்கு உதவியதால் அந்த மனித நேயத்தின்பால் நாங்கள் இதனை செய்து கொண்டிருக்கிறோம்" என்றார்.12000-த்துக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட 2800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களை அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். சுமார் 2,000 மக்களுக்கு தினசரி உணவு அளிக்கின்றனர் அந்த சகோதரர்கள். ``எல்லா குடும்பங்களுக்கும் மூன்று வேளையும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்’’ என்கின்றனர் பாஷா சகோதரர்கள்.

பாஷா சகோதரர்கள்
பாஷா சகோதரர்கள்

தன்னார்வலர்களுக்கு காவல்துறையினர் வழங்கியுள்ள அனுமதி சீட்டு கொண்டு அனைத்து குடும்பங்களுக்கும் மளிகைப் பொருட்களை இருசக்கர வாகனங்களில் மளிகை பொருட்களை வழங்கி வருகின்றனர். ``அரசாங்கம் மேலும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதா என தெரியவில்லை. ஆனால், ஊரடங்கு அமலில் இருக்கும் வரை எங்களால் இயன்ற உதவிகளை சிறப்பாக செய்வோம்" என நெகிழ்கிறார்கள் பாஷா சகோதரர்கள்.

அடுத்த கட்டுரைக்கு