Published:Updated:

`கட்டுமான நிறுவனங்களின் வேண்டுகோள்; சிறப்பு ரயிலை ரத்து செய்த கர்நாடகா!’ - சர்ச்சையில் எடியூரப்பா

எடியூரப்பா
எடியூரப்பா

தொழிலாளர்கள் இடப்பெயர்வு தொடர்பாகக் கட்டுமான நிறுவனங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று சிறப்பு ரயிலை ரத்து செய்துள்ளது எடியூரப்பா அரசு.

இந்தியாவில் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்குநாள் உச்சத்தை அடைந்துகொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முதல் நாட்டின் பொருளாதாரம் வரை அனைத்தும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாகத் தேசிய அளவில் மூன்றாம்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு இல்லாமலும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமலும் தவித்து வருகின்றனர்.

சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்

சுமார் 40 நாள்களுக்குப் பிறகு, தொழிலாளர்களின் நலனுக்காக அந்தந்த மாநில அரசுகள் இணைந்து சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்து வசதிகளைச் செய்து கொடுத்து வருகின்றன. இந்நிலையில் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் வசதியைக் கர்நாடக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாகக் கர்நாடகாவின் புலம்பெயர்ந்தோருக்கான அதிகாரி மஞ்சுநாத பிரசாத், தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ``புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தங்கள் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்ப 6.5.2020 முதல் அடுத்த ஐந்து நாள்களுக்குத் தலா 2 ரயில்கள் வீதம் மொத்தம் 10 ரயில்கள் இயக்க நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். தற்போது அந்தச் சேவை தேவையில்லை என்பதால் மேற்கூறிய கோரிக்கை திரும்ப பெறப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

`இலவசம் இல்ல; எக்ஸ்ட்ரா காசு கொடுத்து டிக்கெட் எடுத்தோம்’-சிறப்பு ரயில் பயணத் தொழிலாளர்கள் புலம்பல்

நேற்று கர்நாடகாவில் உள்ள கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள், முதல்வர் எடியூரப்பாவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். தற்போது ஊரடங்கில் தளர்வு விதிக்கப்பட்டுள்ளதால் கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதைக் கூறி தொழிலாளர்கள் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இதை ஏற்ற பிறகுதான் எடியூரப்பா சிறப்பு ரயில்களை ரத்து செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

``3,500 பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் சுமார் ஒரு லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருகிறோம். தற்போது மாநிலத்தில் கட்டுமான பணிகள் தொடங்கிவிட்டதால் தொழிலாளர்கள் இங்கேயே தங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ” எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

எடியூரப்பா
எடியூரப்பா

மேலும் பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு இதுவரை ரூ.2,000 சம்பளமாக வழங்கப்பட்டு வந்ததை ரூ.3,000 - ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

எடியூரப்பா ரயிலை ரத்து செய்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கர்நாடக காங்கிரஸ் கட்சி, ``தொழிலாளர்களை இங்கு வலுக்கட்டாயமாக சிறைபிடித்து வைக்க முடியாது. இந்தநேரத்தில் நாம் அவர்களுக்கு நம்பிக்கையை மட்டுமே வழங்க வேண்டும். அரசாங்கமும் கட்டடதாரர்களும் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்” என மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

`ஒரே பில்லில் ரூ.95,000; 52,000 ரூபாய்க்கு மதுவிற்பனை!’ - ரூ.45 கோடி வசூல் செய்த கர்நாடகா
அடுத்த கட்டுரைக்கு