Published:Updated:

``நான் இன்னும் சாகலை, நம்புங்க!" - இறந்து 3 மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பிய நபரால் பரபரப்பு?

நாராஜப்பா
News
நாராஜப்பா

மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துபோன நாராஜப்பா, சாலையில் நடந்து வந்ததைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்து நாலா திசையிலும் ஓட்டம் பிடித்தனர்.

கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டம், மதிகிரி தாலுகாவுக்கு உட்பட்ட சிக்கமாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராஜப்பா (59). கூலித் தொழிலாளியான இவருக்கு பிரேமலதா, நேத்ரா என இரு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் பிரேமலதா சிக்கமாலூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். இளைய மகளான நேத்ரா பெங்களூருலிருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணியாற்றிவருகிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான நாராஜப்பா, வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே கிடந்திருக்கிறார். மூத்த மகள் பிரேமலதா இதைக் கண்டிக்க, நாராஜப்பா கோபித்துக்கொண்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறியினார்.

நாராஜப்பா
நாராஜப்பா

அங்கிருந்து பெங்களூரிலிருக்கும் இளைய மகள் நேத்ராவின் வீட்டுக்குச் சென்ற நாராஜப்பா, அங்கும் அதேபோல குடித்துவிட்டு சாலைகளில் சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்திருக்கிறார். இந்த நிலையில், திடீரென அவர் அங்கிருந்து சொல்லாமல், கொள்ளாமல் வெளியேறியிருக்கிறார். நாராஜப்பா ஒரு வாரத்துக்கும் மேலாக வீட்டுக்கு வராமல் போக, பயந்துபோன மகள் நேத்ரா தன்னுடைய தந்தை காணாமல்போனதாக கோரமங்கலா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதற்கிடையே பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனை பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையில் இறந்துகிடந்ததாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. உடனே அவர்களும் நேத்ராவுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அந்தச் சடலத்தை பார்த்த நேத்ரா, ``இது என்னுடைய அப்பாதான்!" எனக் கதறி அழுதிருக்கிறார். அதையடுத்து, உடற்கூறாய்வுக்குப் பிறகு அந்தச் சடலத்தை நேத்ராவிடம் போலீஸார் ஒப்படைத்தனர். நேத்ராவும் அந்தச் சடலத்தை எடுத்துச் சென்று சொந்த ஊரில் உறவினர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், நேற்று முன்தினம் சிக்கமாலூரில் உள்ள தனது வீட்டுக்குத் தள்ளாடியபடி நாராஜப்பா வந்திருக்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துபோன நாராஜப்பா எப்படி உயிருடன் வந்தார் என சாலையிலிருந்த பொதுமக்கள் நாலா திசையிலும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இறந்துபோன அப்பா எப்படி உயிருடன் வந்தார் என மகள் பிரேமலதாவும் அலறியிருக்கிறார். தான் இறந்துபோனதைப்போல எதற்காக தன்னுடைய போட்டோவுக்கு மாலை போட்டு வைத்திருக்கிறார்கள் என நாராஜப்பாவும் அதிர்ந்துபோயிருக்கிறார். உடனே நாராஜப்பாவின் பிரேத பரிசோதனை அறிக்கை, இறப்புச் சான்றிதழ் போன்றவற்றை எடுத்து உறவினர்கள் அவரிடம் காட்டியிருக்கின்றனர்.

நாராஜப்பா வீடு முன்பு கூடிய பொதுமக்கள்
நாராஜப்பா வீடு முன்பு கூடிய பொதுமக்கள்

ஒருகட்டத்தில் ஊர்மக்கள் கூடி நாராஜப்பாவை விசாரிக்கையில், அவர் அத்திப்பள்ளி, பெங்களூரு எனப் பல இடங்களில் தங்கியிருந்து கூலி வேலை செய்துவந்ததும், வீட்டுக்கு வராமல் குடித்துவிட்டு சுற்றியதும் தெரியவந்திருக்கிறது. அதன் பிறகே நாராஜப்பாவைப்போல உருவ ஒற்றுமைகொண்ட ஒருவரை தன்னுடைய தந்தை என நினைத்து மகள்கள் இருவரும் அடக்கம் செய்தது தெரியவந்திருக்கிறது. இது தெரிந்ததும் நாராஜப்பாவின் குடும்பத்தினர் மற்றும் கூடியிருந்த பொதுமக்கள் அதிர்ந்துபோனார்கள்.

போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.