Published:Updated:

கர்நாடகா: `இனி நோ லாக்டௌன்; 5டி முறை மட்டுமே’ - முதல்வர் எடியூரப்பா

பெங்களூரு
பெங்களூரு ( wikipedia )

இன்று முதல் கர்நாடக மாநிலம் முழுவதும் எந்தவிதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் இல்லை என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்துத் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இன்று தேசிய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,92,915 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,732 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,53,049 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 4,11,133 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊரடங்கு
ஊரடங்கு

இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வரும் இந்தநேரத்தில் இனி மாநிலத்தில் எந்தவிதமான ஊரடங்கும் இல்லை என அறிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ``நாளை (இன்று) முதல் கர்நாடகா மற்றும் பெங்களூருவில் எந்தவிதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதேநேரம், கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் எப்போதும்போல ஊரடங்கு மற்றும் பிற நிபந்தனைகள் தொடரும்.

கொரோனா: `சென்னை, மும்பையைவிட அதிகம்!’ - திணறும் பெங்களூரு; அச்சத்தில் மக்கள்!

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு என்பது தீர்வல்ல, மக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்குத் திரும்ப வேண்டும். நம் மாநிலத்தின் பொருளாதாரமும் அதிமுக்கியமானது. பொருளாதாரம் இருந்தால்தான் கொரோனாவுக்கான சிகிச்சைகளும் முறையாக வழங்க முடியும். மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்திலிருந்து பெங்களூரு வந்தவர்களால்தான் இங்கு கொரோனா பரவல் அதிகரித்தது. நிபுணர்கள் கூறிய 5T (Trace - வைரஸ் கண்டறிதல், Track - தடமறிதல், Test - சோதனை, Treat - சிகிச்சை Technology - தொழில்நுட்பம்) முறை இனி கர்நாடகா முழுவதும் தீவிரமாகச் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

எடியூரப்பா
எடியூரப்பா

கர்நாடகாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக அங்கு அடுத்த 15 நாள்களுக்குக் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஊரடங்குக்குப் பதிலாக ஏற்கனவே நோய் வாய்ப்பட்டவர்கள், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து அவர்களுக்கு முறையான பரிசோதனை செய்து சிகிச்சையளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை மொத்த கர்நாடகாவிலும் சுமார் 67,420 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா: `தாமதமான ஆம்புலன்ஸ்; சாலையில் விழுந்து உயிரிழந்த முதியவர்!’ -பெங்களூரு அதிர்ச்சி
அடுத்த கட்டுரைக்கு