Published:Updated:

மெடிக்கல் சீட் மூலம் ரூ.100 கோடி; உதவியாளர் தற்கொலை?- தொடர் ரெய்டால் அதிரும் கர்நாடகா!

சர்ச்சைகளுக்கு மத்தியில் பரமேஸ்வராவின் தனி உதவியாளர் ரமேஷ் என்பவர் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பரமேஸ்வரா
பரமேஸ்வரா

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை அடுத்து கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான பரமேஸ்வர கங்காதரையா என அழைக்கப்படும் ஜி.பரமேஸ்வராவின் இல்லம் மற்றும் கல்லூரிகளில் சமீபத்தில் மிகப்பெரிய வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டது. கர்நாடகாவில் எடியூரப்பா அரசு அமைந்த பிறகு, குளிர்கால சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நாளிலேயே இந்த ரெய்டு நடந்தது கர்நாடக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பரமேஸ்வரா
பரமேஸ்வரா

பரமேஸ்வரா தன் சொந்த மாவட்டமான துமகுருவில், சித்தார்த்தா என்ற பெயரில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளை நடத்திவருகிறார். தன் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம், மெடிக்கல் சீட்டுக்காகப் பல கோடி ரூபாய் பணம் நன்கொடையாக வாங்கப்பட்டதாகவும், அதைத் தனது கல்லூரிகளின் பெயரில் உள்ள டிரஸ்ட்டுகளில் கறுப்புப்பணமாக முதலீடு செய்துள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாக, கர்நாடக ஊடகங்கள் தகவல் தெரிவித்து வந்தன.

திரிபுராவில் கட்டப்பட்ட முதல் பாலம்! - அதிலும் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்?

அதன்படி, பெங்களூருவில் உள்ள பரமேஸ்வராவின் வீடு, துமகுருவில் உள்ள கல்லூரி என அவருக்குச் சொந்தமான 30 இடங்களில் சோதனை நடந்தது. பரமேஸ்வராவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடந்த அதே நாளில் மற்றொரு காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் எம்.பி-யுமான ஆர்.எல்.ஜலப்பாவுக்குச் சொந்தமான மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனையிலும் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 300 அதிகாரிகள் இரண்டு நாள் முழுவதும் இந்த மெகா ரெய்டை நடத்தி முடித்துள்ளனர்.

பரமேஸ்வரா
பரமேஸ்வரா

ஆனால், இந்த ரெய்டுகள் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாத கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகளோ, ``அரசியல் ரீதியாக இந்த ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. கொள்கை மற்றும் ஊழல் பிரச்னைகளில் எங்களை எதிர்கொள்ளத் தவறியதால், அவர்கள் கர்நாடகக் காங்கிரஸ் தலைவர்களை மட்டும் குறிவைக்கிறார்கள். இதுபோன்ற தந்திரங்களை எல்லாம் நாங்கள் கண்டுகொள்ளப்போவதில்லை" எனக் கூறி இருந்தனர். இதற்கிடையே சோதனையில் ஐந்து கோடி ரூபாய் அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கறுப்புப் பணம்... அதிகார துஷ்பிரயோகம்..?- சிவக்குமாரை அடுத்து சிக்கும் முன்னாள் அமைச்சர்!

இந்நிலையில் சோதனை குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ``மெடிக்கல் கவுன்சிலால் நிரப்ப வேண்டிய மருத்துவ கல்லூரி சீட்களை முறைகேடாக மேனேஜ்மன்ட் கோட்டா மூலம் நிரப்பியுள்ளனர். இதற்கான ஆதாரங்கள், தரகர்களுக்கு கமிஷன் கொடுத்தது, மெடிக்கல் சீட்களை மாற்றியதற்கான பண பரிமாற்றம் உள்ளிட்டவைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஹவாலா பண பரிமாற்றத்துக்கான ஆதாரங்களும் உள்ளன. இதுபோக அவரது வீட்டில் 89 லட்ச ரூபாயும், கல்லூரிகளில் 4.22 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" எனக் கூறப்பட்டுள்ளது.

பரமேஸ்வரா வீடு
பரமேஸ்வரா வீடு

கர்நாடக காங்கிரஸின் மிக முக்கியப் பிரமுகர் ஜி.பரமேஸ்வரா என்னும் ஜி.பி இரண்டு முறை மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்த ஒரே நபர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். பரமேஸ்வரா, சித்தராமையா அரசில் துணை முதல்வராகவும் அதற்கு முன்பு ஆறு முறை அமைச்சராகவும் இருந்தவர். சித்தராமையாவுக்கு அடுத்து, கர்நாடக காங்கிரஸின் முகமாக அறியப்பட்ட ஜி.பி, முதல்வர் ரேஸிலும் இருந்தவர், தான் நடத்தி வரும் சித்தார்த்தா கல்வி நிறுவனங்கள் பெயரில் இரண்டு மருத்துவக் கல்லூரிகளை நடத்தி வருகிறார். இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை பரமேஸ்வராவின் குடும்ப உறுப்பினர்கள் கவனித்து வருகின்றனர்.

Vikatan

இது அவர்களின் குடும்ப சொத்தாக இருந்துள்ளது. பரமேஸ்வராவின் தந்தைதான் முதலில் இந்தக் கல்லூரியை ஆரம்பித்திருந்தார். அதன் பிறகு டிரஸ்ட்டாக மாற்றப்பட்டு தற்போது பரமேஸ்வராவின் உறவினர் ஆனந்த் என்பவர் மேற்பார்வையில் கல்லூரி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பரமேஸ்வரா மற்றும் ஆர்.எல்.ஜலப்பா மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் முதல் 65 லட்சம் வரை நன்கொடையாகப் பெற்றுள்ளதாகவும், மொத்தம் 185 மெடிக்கல் சீட்களுக்கு நன்கொடை வீதமே ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக வருமானம் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

உதவியாளர் ரமேஷ்
உதவியாளர் ரமேஷ்

இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியில் பரமேஸ்வராவின் தனி உதவியாளர் ரமேஷ் என்பவர் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ரெய்டுக்கு அடுத்த நாளே அவர் தற்கொலை செய்துள்ளது இந்த விவகாரத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான சரியான காரணம் தெரியவில்லை எனப் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பரமேஸ்வரா, ``சோதனையின்போது அவர் என்னுடன் இருந்தார், எதுவும் நடக்காது, கவலைப்பட வேண்டாம் என்று நான் அவரிடம் கூறியிருந்தேன். அவர் மென்மையாகப் பேசும் மனிதர். அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்று எனக்குத் தெரியவில்லை. இது நடந்தது துரதிர்ஷ்டவசமானது'' எனக் கூறியுள்ளார்.