Published:Updated:

`வழக்கு பதிவு; குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு!' - நித்யானந்தாவைச் சுற்றும் அடுத்த சர்ச்சை

நித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தன் மகள்களை மீட்டுத் தரும்படி கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.

நித்யானந்தா
நித்யானந்தா

கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்தின் கிளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டுவருகிறது. நித்யானந்தாவின் அகமதாபாத் ஆசிரமத்திலிருந்து மகளை மீட்டுத் தரக் கோரி கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்த மனுவில், ``பெங்களூருவை அடுத்த பிடதி ஆசிரமம் நடத்திவந்த கல்விநிலையத்தில் கடந்த 2013-ல் 7 முதல் 15 வயதுக்குட்பட்ட எங்களுடைய 4 மகள்களைச் சேர்த்தோம்.

குஜராத் உயர் நீதிமன்றம்
குஜராத் உயர் நீதிமன்றம்

அதன்பின்னர், அவர்கள் அகமதாபாத்தில் உள்ள மற்றொரு ஆசிரமத்துக்கு மாற்றப்பட்டுவிட்டதை அறிந்தோம். அகமதாபாத்தின் டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் அந்த ஆசிரமம் இயங்கிவருகிறது. இதையடுத்து, அங்கு சென்று எங்களது மகள்களைச் சந்திக்க முயன்றோம். ஆனால், எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாரின் உதவியோடு ஆசிரமத்துக்குள் சென்று எங்களது இரு மகள்களை மீட்டோம். அவர்கள் இருவரும் மைனர். ஆனால், எங்களது மற்ற மகள்களான லோபாமுத்ரா ஜனார்த்தன ஷர்மா (21) மற்றும் நந்திதா (18) ஆகியோரை எங்களால் சந்திக்க முடியவில்லை.

`சிறுவர், சிறுமிகளை டார்ச்சர் செய்கிறார்கள்!' - நித்யானந்தா மீது புகார் வாசித்த கனடா சிஷ்யை

எங்களது மகள்களைக் கடத்தி அவர்கள் சட்டவிரோதமாக இரண்டு வாரங்களுக்கு மேலாக அடைத்துவைத்திருக்கிறார்கள். ஆசிரமத்தில் முறையாக தூங்கக் கூட அனுமதிக்காமல், அவர்களை வேலை வாங்கியிருக்கிறார்கள். இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்திருக்கிறோம். எனவே, எங்களது இரு மகள்களையும் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸாருக்கும் ஆசிரம நிர்வாகிகளுக்கும் உத்தரவிட வேண்டும். உரிய விசாரணைக்குப் பின்னர், அவர்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று அந்த கர்நாடக தம்பதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கு
வழக்கு
Pixabay

ஜனார்த்தன ஷர்மாவின் புகாரை அடுத்து நித்யானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் குஜராத் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.