Published:Updated:

படித்தது 8-ம் வகுப்பு: 193 வங்கிக் கணக்கு, ரூ.1201 கோடி சொத்து... மலைக்க வைக்கும் எம்.எல்.ஏ.!

கர்நாடக மாநில எம்.எல்.ஏ ஒருவரின் சொத்து மதிப்பு, 18 மாதங்களில் ரூ.186 கோடி உயர்ந்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் காருடன் எம்.எல்.ஏ நாகராஜ்
ரோல்ஸ் ராய்ஸ் காருடன் எம்.எல்.ஏ நாகராஜ்

சாமான்யர்கள் ஒரு லட்சம் புரட்டவே தலையை அடகுவைக்கும் நிலையில், கர்நாடகா எம்.எல்.ஏ ஒருவரின் வங்கிக் கணக்கில், 5 நாள்களில் ரூ. 48 கோடி டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது. இந்த எம்.எல்.ஏ-வின் பெயர் நாகராஜ். இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,201 கோடி.

கர்நாடகத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 17 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ததால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.

தனி விமானத்தில் பறக்கும் எம்.எல்.ஏ நாகராஜ்
தனி விமானத்தில் பறக்கும் எம்.எல்.ஏ நாகராஜ்

பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களில் ஒருவர்தான் இந்த நாகராஜ். இவர், குமாரசாமி அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள், கர்நாடக இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவருமே பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளனர். அதில், நாகராஜுக்கு ஒசக்கோட்டை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாகராஜ் மனுத்தாக்கல் செய்தார். அதில், தனக்கும் தன் மனைவி சாந்தகுமாரிக்கும் சேர்த்து ரூ. 1,201 கோடி மதிப்பு சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 18 மாதங்களில் மட்டும் இவரின் சொத்து மதிப்பு ரூ. 186 கோடி உயர்ந்துள்ளது. கடந்த வேட்புமனு தாக்கலின்போது, ரூ. 1,015 கோடிக்கு சொத்துகள் இருப்பதாக நாகராஜ் குறிப்பிட்டிருந்தார். நாகராஜுக்கு நகரும் சொத்துகள் மட்டும் ரூ. 104.53 கோடிக்கு உள்ளன. இவரின் மனைவி சாந்தகுமாரிக்கு, ரூ. 44.95 கோடி மதிப்புக்கு நகரும் சொத்துகள் உள்ளன.

நாகராஜ்
நாகராஜ்

நாகராஜ், விதவிதமான சொகுசு கார்களை வாங்கிப் பயன்படுத்துவார். இவரிடம் உள்ள கார்களின் மதிப்பே பல கோடிகள் இருக்கும். கர்காடகாவில் எடியூரப்பா ஆட்சியைக் கவிழ்த்த பிறகு, ரூ. 11 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் ரக காரை வாங்கிய நாகராஜ், அந்த காரில்தான் முதல்வர் எடியூரப்பாவை சந்திக்கச் சென்றார். அப்போது, கர்நாடக மாநில வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை எடியூரப்பாவிடம் வழங்கினார்.

நாகராஜுக்கு மொத்தம் 193 வங்கிக் கணக்குகள் உள்ளன. குமாரசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 7- ம் தேதி வரை மட்டும் மொத்தம் ரூ. 48 கோடி இவரின் பல்வேறு வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரூ. 90 லட்சம் மதிப்புகொண்ட குறுகிய கால டெபாசிட்டாக 53 முறை இவரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. நாகராஜ், முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பிறகு, மதச் சார்பற்ற ஜனதா தளத்தில் சேர்ந்து அமைச்சரானார்.

காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருடன் நாகராஜ்
காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருடன் நாகராஜ்

தற்போது, பாரதிய ஜனதா கட்சி சார்பாக, இடைத்தேர்தலில் களம் காண்கிறார். குமாரசாமியின் ஆட்சியைக் கலைக்க, இவர் ரூ. 50 கோடி பெற்றதாக காங்கிரஸ் கட்சி குமுறியது. 8-ம் வகுப்பு வரை படித்துள்ள 66 வயது நாகராஜுக்கு, கடந்த 2013 ம் ஆண்டு ரூ.470 கோடி சொத்து இருந்தது. 2018-ம் ஆண்டு, தன் பெயரில் ரூ.709 கோடியும் மனைவி பெயரில் ரூ. 306 கோடியும் இருப்பதாக நாகராஜ் குறிப்பிட்டார். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், பெங்களூருவில் உள்ள இவரின் வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கணக்கில் காட்டப்படாத ரூ.120 கோடி கைப்பற்றப்பட்டது. புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டும் ரூ. 1.1 கோடி கைப்பற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது.

கர்நாடகாவில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே பணக்கார எம்.எல்.ஏ இவர்தான்.