Published:Updated:

கொரோனா:`பயணிகள் நிழற்குடையில் 3 மணி நேரம் கிடந்த உடல்!’ - கர்நாடகா அவலம்

உடல்
உடல்

``அறிக்கையின் முடிவுகளைத் தெரிந்துகொள்ள, கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். முடிவு வராததால் வீட்டுக்கு திரும்பிச் செல்லும்போது, அருகில் இருந்த பயணிகள் நிழற்குடையில் ஓய்வெடுக்க நினைத்துள்ளார்.”

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், இறப்பு எண்ணிக்கைகளும் அதிகமாகிவருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் உடலை உறவினர்கள் கையாள்வதில் ஆபத்து இருப்பதால், பெரும்பாலும் அரசு ஊழியர்கள்தான் உயிரிழந்தவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இறந்தவர்களின் உடலை ஊழியர்கள் அலட்சியமாகக் கையாள்வதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

இறப்பு
இறப்பு
மாதிரி புகைப்படம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹவேரி என்ற மாவட்டத்தின் ரானிபென்னூர் தாலுக்கா மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ள பயணிகள் நிழற்குடையில், கொரோனா வைரஸால் இறந்தவர் எனக் கருதப்படும் நோயாளி ஒருவரின் உடல் பாதுகாப்பு உடைகளால் போர்த்தப்பட்ட நிலையில், சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகக் கிடந்துள்ளது. இதனால், அப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இறந்த நபரின் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள வந்த ஊழியர்கள், அவரது உடலை அங்கேயே விட்டுச்சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து, சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். உடலை விட்டுச்சென்ற ஊழியர்கள், சர்ச்சையான பின்பு திரும்பிவந்து உடலை எடுத்துச்சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா: `ஒரே குழியில் வீசப்பட்ட நோயாளியின் உடல்கள்!’ - கர்நாடகா அதிர்ச்சி

அப்பகுதியைச் சேர்ந்த 45 வயதான நபர் ஒருவர், சுமார் ஒரு வாரத்துக்கும் மேலாக காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டுவந்துள்ளார். இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த ரானிபென்னூர் தாலுக்கா மருத்துவமனைக்குச் செல்ல முடிவு செய்துள்ளார். அவரிடமிருந்து கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான மாதிரிகளை மருத்துவமனை ஊழியர்கள் கடந்த ஜூன் 28-ம் தேதி எடுத்துள்ளனர். அறிக்கையின் முடிவுகளைத் தெரிந்துகொள்ள, கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால், முடிவு வராததால் வீட்டுக்கு திரும்பிச் செல்லும்போது, அருகில் இருந்த பயணிகள் நிழற்குடையில் சிறிது நேரம் ஓய்வெடுக்க நினைத்துள்ளார். சிறிது நேரத்தில், இருந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்களுக்கு இதுதொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், சம்பவ இடத்துக்கு வந்து பாதுகாப்பு உடைகளை வைத்து உடலை மூடி சவக்கிடங்குக்கு எடுத்துச்செல்லாமல், அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.

கொரோனா
கொரோனா

சமூக ஊடகங்களில் இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் அதிகம் பரவிய பிறகு, ஊழியர்கள் ஆம்புலன்ஸ் ஒன்றைக் கொண்டுவந்து, உடலை எடுத்துச்சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாகப் பேசிய அப்பகுதியின் அதிகாரிகள், ``ஊழியர்கள் ஏன் உடலை அங்கேயே வைத்துவிட்டுச் சென்றார்கள் என எங்களுக்குத் தெரியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளனர். இதேபோன்ற சம்பவங்கள் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் அதிகமாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா அதிர்ச்சி: மருத்துவமனைக்குள்ளேயே இறந்துகிடந்த நபர்! -தேடி அலைந்த மனைவி
அடுத்த கட்டுரைக்கு