`ஊரை சூழ்ந்த நீர்; போட்டியில் கலந்துகொள்ளணும்!'- வெள்ளத்தில் 2.5 கி.மீ தூரம் நீந்தி சாதித்த மாணவர்

தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கர்நாடகாவைச் சேர்ந்த 19 வயது இளம் வீரர் ஒருவர் மழை வெள்ளத்தில் 2.5 கி.மீ தன் தந்தையுடன் நீந்திச் சென்ற சம்பவம் நடந்திருக்கிறது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, குஜராத், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால், அம்மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் தொடர் மழையால் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தின் மன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நிஷான் மனோகர் கடம்.

19 வயதான இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவருகிறார். குத்துச்சண்டை வீரரான அவருக்கு மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற வேண்டும் என்பது கனவாக இருந்துவந்தது. அதேபோலவே, கடந்த வாரம் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறார் நிஷான். ஆனால், இதுவல்ல செய்தி.
தேசிய குத்துச்சண்டைப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக அவரும் அவரின் தந்தையும் பட்ட கஷ்டம் தற்போது தெரியவந்திருக்கிறது. மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் பெலகாவி மாவட்டம் சார்பாகக் கலந்துகொள்வதற்காக அவர் தகுதிபெற்றிருந்தார். பெங்களூருவில் நடைபெறவிருந்த அந்தப் போட்டியில் கலந்துகொள்ள அவர், கடந்த 7-ம் தேதி ரயிலில் தனது மாவட்ட அணியுடன் புறப்படுவதாக இருந்தது. ஆனால், கர்நாடகாவில் அந்த நேரத்தில் கனமழை பெய்யவே, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்தன.

இதனால், மன்னூர் உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டன. மன்னூரில் இருந்து பெலகாவி உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்குச் செல்ல 3 பாதைகள் இருந்தன. அவை மூன்றுமே வெள்ளத்தால் சூழப்பட்டிருந்தன. ஆனால், இந்தக் காரணத்தால் தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட அவர் விரும்பவில்லை. குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற அவர், வெள்ளத்தில் நீந்தி அப்பகுதியைக் கடக்க முடிவு செய்தார்.
குத்துச்சண்டை போட்டிகளுக்கான கிளவுஸ் உள்ளிட்ட பொருள்களை பிளாஸ்டிக் பையில் கட்டிக்கொண்டு, விவசாயியான தன் தந்தையுடன் வெள்ளத்தில் இறங்கி நீந்தத் தொடங்கியிருக்கிறார் நிஷான். அங்கிருந்து 2.5 கி.மீ தூரத்தை 45 நிமிடங்களில் நீந்திக் கடந்த அவர்கள், பெலகாவி குத்துச்சண்டை அணி இருந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். அதன்பின்னர் பெங்களூரு சென்று அந்தப் போட்டியில் நிஷான் கலந்துகொண்டிருக்கிறார். இறுதிப் போட்டியில் பெங்களூருவைச் சேர்ந்த பரத்திடம் தோல்வி அடைந்தார் நிஷான். இதன்மூலம், வெள்ளிப்பதக்கம் வென்ற அவர் நிச்சயம் அடுத்த முறை தங்கம் வெல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய நிஷான், ``இந்தப் போட்டிகளுக்காக நீண்ட நாள்களாக நான் காத்திருந்தேன். ஆனால், இந்தக் காரணத்துக்காக அந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழக்க நான் விரும்பவில்லை. எங்கள் கிராமத்திலிருந்து வெளியேறும் 3 வழிகளுமே வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில், அப்பகுதியை நீந்திக் கடப்பதைத் தவிர எங்களுக்கு வேறுவழி இல்லாமல் போய்விட்டது'' என்றார்.
நிஷானின் செயல்பாடுகளைப் பாராட்டிய அவரது அணியின் மேலாளர் கஜேந்திரா எஸ்.திரிபாதி, `எங்கள் பகுதியில் கடுமையான மழை பெய்துவருவதால், சூழல் மோசமாக இருக்கிறது. இதனால், பலர் தங்கள் குழந்தைகளை போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. மழையால் நிஷானும் பல நாள்கள் பயிற்சிப் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் குறித்து கேள்விப்பட்டதும், அதில் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நீந்திக் கடந்துவிடுவதாகவும், அருகில் உள்ள சாலையில் வந்து தன்னை அழைத்துக் கொள்ளுமாறும் அவர் எங்களிடம் கூறினார். அவரும், அவரின் தந்தையும் போட்டிக்கு முந்தைய நாள் மாலை 3.45 மணிக்கு நீந்தத் தொடங்கி 4.30 மணியளவில் சாலைப் பகுதியை அடைந்தனர். இரவு ரயிலில் பெங்களூரு சென்று போட்டியில் கலந்துகொண்டோம். இந்தக் கடினமான சூழலைக் கடந்தும் நிஷான், போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டார்'' என்று பாராட்டினார்.