Published:Updated:

`போலீஸுக்குத் தெரிந்தால் பிரச்னையாகிவிடும்!'- எதிர்ப்பை மீறி பச்சிளம் குழந்தைக்கு உயிர்கொடுத்த பெண்

பிறந்து சில தினங்களே ஆன நிலையில் மீட்டெடுக்கப்பட்ட அந்தக் குழந்தைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வீட்டில் வைத்துச் செய்துள்ளார். குழந்தையைக் குளிப்பாட்டி உணவு கொடுத்துள்ளார்.

விஜயலட்சுமி
விஜயலட்சுமி

கர்நாடக மாநிலம் பெங்களூரு மைக்கோ லேஅவுட் பகுதியில் வசித்து வருபவர் 37 வயதான பெண் விஜயலட்சுமி. அங்குள்ள வீடுகளில் பணிப்பெண் வேலையைச் செய்து வருகிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான விஜயலட்சுமி செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியளவில் வேலையை முடித்துவிட்டு பி.ஜி சாலையில் உள்ள வேகா சிட்டி மால் வழியாக வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்துள்ளார். சாக்கடையாக இருந்த அந்தப் பகுதியிலிருந்து ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டுள்ளது.

நடைபாதையின் அருகே காகிதப் பையில் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்கவே அருகில் சென்று பார்த்துள்ளார் விஜயலட்சுமி. பையில் துணிகள் ஏதும் போர்த்தப்படாத நிலையில் கைவிடப்பட்ட பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், உடனடியாகக் குழந்தையைத் தூக்கியுள்ளார். குழந்தையின் நிலைமை மோசமாக இருப்பதை அறிந்த அவர் வீட்டுக்குக் குழந்தையை எடுத்துச் செல்ல நினைத்துள்ளார்.

பச்சிளம் குழந்தை
பச்சிளம் குழந்தை

ஆனால், அருகில் இருந்தவர்களோ `போலீஸுக்குத் தெரிந்தால் பிரச்னையாகிவிடும்' எனப் பயமுறுத்தி அவரைத் தடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் மீறி குழந்தையின் நிலைமையைக் கருத்தில்கொண்டு விஜயலட்சுமி தன் வீட்டுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். பிறந்து சில தினங்களே ஆன நிலையில் மீட்டெடுக்கப்பட்ட அந்தக் குழந்தைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வீட்டில் வைத்துச் செய்துள்ளார். குழந்தையைக் குளிப்பாட்டி உணவு கொடுத்துள்ளார்.

ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இருந்தாலும் இந்தக் குழந்தையையும் வளர்க்க ஆசைப்பட்டுள்ளார் விஜயலட்சுமி. ஆனால், குழந்தையைத் தத்தெடுப்பதற்கான சட்டச்சிக்கல் குறித்து அவரிடம் அவரது பிள்ளைகள் எடுத்துரைக்கவே, மறுநாள் குழந்தை குறித்து போலீஸிடம் தகவல் தெரிவித்துள்ளார் விஜயலட்சுமி.

இதுதொடர்பாகப் பேசியுள்ள அவர், ``கைவிடப்பட்ட குழந்தையை வளர்ப்பதில் எனக்கு ஒன்றும் கவலையில்லை.

`மேக் அமெரிக்கா கைன்ட் அகெய்ன்’ - அரசியல் முழக்கத்துடன் மேயரான 7 மாதக் குழந்தை!

நான் வீட்டிற்கு வந்த பிறகு, கைவிடப்பட்ட ஒரு குழந்தையை வீட்டில் வைத்திருப்பது சட்டத்திற்கு எதிரானது என்றும், ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதற்கான நடைமுறைகள் உள்ளன என்றும் என் மகன் எனக்கு அறிவுறுத்தினான். நான் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தபோது, ​​சட்டச் சிக்கல்கள் பற்றி எனக்குத் தெரியாது. என் மகனுடன் பேசிய பிறகு, குழந்தையை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஆனால், அதற்கு முன்பு குழந்தையைச் சுத்தம் செய்து பால் கொடுத்தேன். குழந்தையைக் கொடுப்பதில் மனமில்லை.

எனினும் தயக்கத்துடன்தான் குழந்தையை போலீஸிடம் ஒப்படைத்தேன்" எனக் கூறியுள்ளார்.

போலீஸிடம் ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை தற்போது ஜெயநகரில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பராமரிப்பில் உள்ளது.

மைக்கோ லேஅவுட் போலீஸ்
மைக்கோ லேஅவுட் போலீஸ்

முன்னதாக போலீஸார் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வரை குழந்தையுடனே இருந்துள்ளார் விஜயலட்சுமி.

இதுதொடர்பாகப் பேசியுள்ள மருத்துவர்கள், ``குழந்தை நீண்ட நேரமாகச் சாப்பிடாமல் இருந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோதுதான் குழந்தையை மீட்டுள்ளார் விஜயலட்சுமி.

அவரின் மனித நேயத்தால் தற்போது குழந்தை உயிரோடு இருக்கிறது. அவர் மட்டும் சரியான நேரத்தில் மீட்டெடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு கொடுக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகி இருக்கும். குழந்தை தற்போது நன்றாக உள்ளது. இன்னும் ஒரு வாரம் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. அதன்பிறகு காப்பகத்தில் ஒப்படைக்கப்படும்" எனக் கூறியுள்ளனர்.

மற்றவர்கள் பேச்சைக் கேட்காமல் சரியான நேரத்தில் குழந்தைக்கு விஜயலட்சுமி உதவிய சம்பவம் வெளியில் தெரியவர அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

`குழந்தை அழவும் கூடாது... வீட்டுல விட்டுட்டும் போகணும்..!’- இணையத்தை கலக்கும் ஜப்பான் தாயின் ஐடியா