Published:Updated:

தமிழருக்காகப் பிரார்த்திக்கும் ஜார்க்கண்ட் மக்கள்-தோனிக்கு அபராதம் விதித்த இந்த கார்த்திக் IPS யார்?

கார்த்திக் ஐ.பி.எஸ்
News
கார்த்திக் ஐ.பி.எஸ்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான கார்த்திக் நலம்பெற வேண்டும் என ஜார்க்கண்ட் மக்கள் வேண்டிக்கொள்வது ஏன், மாவோயிஸ்ட் பகுதியைச் சுற்றுலாத் தலமாக எப்படி மாற்றினார் இவர், செய்தித்தாளில் கண்ட செய்தியைவைத்து தோனிக்கு எப்படி அபராதம் விதித்தார் கார்த்திக் ஐ.பி.எஸ்?

ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் (Hazaribagh) மாவட்டத்தின் எஸ்.பி-ஆகப் பணிபுரிந்துவருபவர் கார்த்திக் ஐ.பி.எஸ். கடந்த இரு தினங்களுக்கு முன்னர், தனது போலீஸ் வாகனத்தில் காவலர்களுடன், ராம்கர்க் நெடுஞ்சாலை வழியாக ராஞ்சி நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருந்தார் இவர். அப்போது எதிர்பாராதவிதமாக நெடுஞ்சாலையை இணைக்கும் உள்ளூர் சாலை வழியாக, எஸ்.பி கார்த்திக் சென்ற காருக்கு முன்பாக பெண் ஒருவர் ஸ்கூட்டியில் வந்திருக்கிறார். அவர்மீது இடித்துவிடக் கூடாது என்பதற்காகக் காரை திருப்பியிருக்கிறார் காவல் ஓட்டுநர். இதன் காரணமாக அருகில் சென்ற லாரியில் இடித்து பெரும் விபத்துக்குள்ளாகியிருக்கிறது காவல்துறை வாகனம்.

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்

இந்த விபத்தில் எஸ்.பி கார்த்திக் மட்டுமல்லாமல், அவருடன் பயணித்த காவலர்கள், அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் என மொத்தம் ஆறு பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். உடனடியாக இந்த ஆறு பேரும் ராஞ்சியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து ஜார்க்கண்ட் மக்கள் பலரும் எஸ்.பி கார்த்திக் விரைவில் குணமடைய வேண்டுமென சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். மேலும், `கார்த்திக்குக்காகப் பிரார்த்தனைகள் செய்துவருகிறோம்' என்பது போன்ற சமூக வலைதளப் பதிவுகளையும் காண முடிகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கார்த்திக் ஐ.பி.எஸ்
கார்த்திக் ஐ.பி.எஸ்

ஜார்க்கண்ட் மக்கள் பிரார்த்தனை செய்யும் அளவுக்கு கார்த்திக் என்ன செய்தார்... யார் இவர்?

கார்த்திக் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சென்னை அயனாவரத்தில் பிறந்த இவர், 2010 ஐ.பி.எஸ் பேட்ச்சில் பயிற்சிபெற்றவர். 2015-ம் ஆண்டு மாவோயிஸ்ட்டுகள் அதிகமிருக்கும் லோஹர்தகா (Lohardaga) மாவட்டத்தின் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டார். லோஹர்தகாவின் பெஷ்ரார் (Peshrar) பகுதியில் வசித்துவந்த இளைஞர்களிடம் நெருங்கிப் பழகத் தொடங்கிய கார்த்திக், அவர்களின் கவனத்தை ஆயுதங்களின் பக்கமிருந்து விளையாட்டை நோக்கித் திசைதிருப்பினார். இளைஞர்களுக்கென விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, பரிசுகளையும் வழங்கினார். மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரான நகுல் யாதவ் உட்பட 18 தீவிர மாவோயிஸ்ட்களைச் சரணடையச் செய்தார் கார்த்திக். பெஷ்ராரில் ஆயுதப் பயிற்சி பெற்றுவந்த 21 குழந்தைகளையும் மீட்டவர் இவரே. மேலும், நீர்வீழ்ச்சிகளும், பசுமையான காடுகளும் நிறைந்த பெஷ்ரார் பகுதியைச் சுத்தம் செய்ய உத்தரவிட்டு, அதைச் சுற்றுலாத் தலமாக மாற்றினார். அரசு அதிகாரிகளோடு இணைந்து அந்த இடத்தை சுற்றுலாத் தலமாக மாற்றும் பணியில் இறங்கியவர், `மான்சூன் பெஷ்ரார்' என்கிற ஃபேஸ்புக் பக்கத்தையும் தொடங்கினார். அந்தப் பகுதியின் புகைப்படங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, பெஷ்ரார் சுற்றுலாத் தலத்தைப் பிரபலமாக்கினார் .

பெஷ்ரார் நீர்வீழ்ச்சி
பெஷ்ரார் நீர்வீழ்ச்சி
Facebook/ Monsoon Peshrar
30 ஆண்டுகளுக்கும் மேலாக மவோயிட்ஸ்களின் கோட்டையாக இருந்த பெஷ்ரார் பகுதி, 2017-க்கு பிறகு மக்கள் அதிகம் வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக மாறியது. சுற்றுலாப்பயணிகள் மூலம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நல்ல வருமானமும் கிடைத்தது. கார்த்திக்கின் பணிகளைப் பாராட்டி 2019-ம் ஆண்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, `சாம்பியன் ஆஃப் சேஞ்ச்' என்ற விருதை வழங்கி கௌரவித்தார்.

தோனிக்கு அபராதம்..!

முன்னதாக 2015-ம் ஆண்டின் முற்பகுதியில் டிராஃபிக் எஸ்.பி-யாக பணியாற்றிவந்தார் கார்த்திக். அந்தச் சமயத்தில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனியிடம் அபராதம் வசூலித்து முக்கியச் செய்திகளில் இடம்பெற்றார் இவர்.

பைக் பிரியரான தோனி, தனது பழைய புல்லட் பைக் ஒன்றை ராஞ்சி சாலையில் ஓட்டிவந்திருக்கிறார். பழைய பைக் என்பதால், அதில் மட்கார்டின் (Mudguard) சைடில் வண்டியின் நம்பர் எழுதப்பட்டிருந்தது. அரசு விதிமுறைப்படி தனியாக நம்பர் பிளேட் வைத்துத்தான் வண்டி நம்பர் எழுதப்பட்டிருக்க வேண்டும். தோனி பைக்கில் வந்த புகைப்படங்கள் செய்தித்தாள்களில் இடம்பெற்றன.

தோனி பைக்
தோனி பைக்

இந்தப் புகைப்படங்களைக் கண்ட கார்த்திக், வண்டியில் நம்பர் பிளேட் இல்லாததையும் கண்டிருக்கிறார். இதையடுத்து தோனியின் வீட்டுக்கு அபராதத்துக்கான ரசீதை அனுப்பி, 500 ரூபாய் அபராதத் தொகையை வசூலித்திருக்கிறார். இந்தச் சம்பவத்தை அடுத்து, `சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் கார்த்திக்' என உயரதிகாரிகள் கார்த்திக்கை வெகுவாகப் பாராட்டினர். கார்த்திக், ஐ.பி.எஸ் அதிகாரியாக ஜார்க்கண்ட்டில் மக்கள்நலப் பணிகள் பலவற்றைச் செய்திருக்கிறார். இதன் காரணமாகத்தான் ஜார்க்கண்ட் மக்கள், `அவர் விரைவில் நலம் பெற வேண்டும்' என சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.