Published:Updated:

உலக கோப்பை கிரிக்கெட் : `பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் மீது வழக்கு பதிவு!'

கடந்த அக்டோபர் 24-ம் தேதி நடைபெற்ற உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை முதன்முறையாக வீழ்த்தி, வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது.

கடந்த அக்டோபர் 24-ம் தேதி துபாயில் நடைபெற்ற உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. அந்த போட்டியில், பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை முதன்முறையாக வீழ்த்தி, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணியின் தோல்வி கிரிக்கெட் ரசிகர்களை பேரதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்தியது.

இந்தியா-பாகிஸ்தான் அணி
இந்தியா-பாகிஸ்தான் அணி

இந்த நிலையில், காஷ்மீரில் இருக்கும் ஒரு மருத்துவக் கல்லூரியின் விடுதி மாணவர்கள், பாகிஸ்தான் வெற்றிபெற்றதை உற்சாகமாகக் கோஷமிட்டுக் கொண்டாடியிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வைரல் வீடியோவில், பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகளும், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளும் இடம் பெற்றுள்ளது. இணைய வெளியில் சர்ச்சையைக் கிளப்பிய இந்த வீடியோ காஷ்மீர் காவல்துறை ஆணையர் விஜயகுமாரின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது.

விஜயகுமார்
விஜயகுமார்

அதையடுத்து, இந்திய அணியின் தோல்வியைக் கொண்டாடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார். அவர் உத்தரவின் பேரில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மீது சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் (Unlawful Activities (Prevention) Act) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில், பஞ்சாபின் பாய் குருதாஸ் கல்லூரியில் தங்கிப் படித்து வரும் காஷ்மீர் மாணவர்கள் மீது, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர்கள் சிலர் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து கொடூரமான தாக்குதலை அரங்கேற்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு