Published:Updated:

`அமர்நாத் யாத்திரை நிறுத்தம்; படைகள் குவிப்பு; பதற்றம்!' - என்ன நடக்கிறது காஷ்மீரில்?

தினேஷ் ராமையா

அமர்நாத் யாத்திரைக்காக ஜம்மு - காஷ்மீர் வந்த பக்தர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அம்மாநில அரசு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதையடுத்து, காஷ்மீரில் பதற்றம் தொற்றிக்கொண்டது.

Army
Army ( AP )

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளோடு பக்தர்கள் பயணிப்பர். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கி நடந்துகொண்டிருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக மாநிலத்தைவிட்டு வெளியேறுங்கள் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டன. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் மோடி சுதந்தர தினத்தில் வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.

Jammu Kashmir
Jammu Kashmir
AP

மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்திருந்தாலும், அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் ஜம்மு - காஷ்மீர் மக்கள் மத்தியில் திடீர் பீதி குடிகொண்டிருக்கிறது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 35ஏ -வை நீக்கும் எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை என்று கூறியுள்ள ஆளுநர், அதுகுறித்த வதந்திகளை அரசியல்வாதிகள், மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டும் என அமர்நாத் யாத்திரைப் பயணிகளுக்கு அரசு அறிவுறுத்திய 24 மணி நேரத்தில், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 6,216 பயணிகள் வெளிமாநிலங்களுக்குச் செல்வதற்காகக் காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், விமானக் கட்டணம் தாறுமாறாக அதிகரித்திருக்கிறது. ஸ்ரீநகரிலிருந்து புறப்படும் மற்றும் அங்கு செல்லும் விமானங்களின் அதிகபட்ச கட்டணத் தொகையாக ரூ.9,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்திருக்கிறது.

அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதேபோல், அவர்கள் பயணம் மேற்கொள்ளும் பாதையை ஒட்டிய சில பகுதிகளிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை அதிக அளவில் ராணுவம் கைப்பற்றியது. இந்தத் தகவலும் மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Jammu Kashmir
Jammu Kashmir
AP

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரின் கெரன் பகுதியை ஒட்டிய சர்வதேச எல்லைப்பகுதியில் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியிருக்கிறது. இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற Border Action Team எனப்படும் அந்நிய மண்ணில் புகுந்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானைச் சேர்ந்த 5 முதல் 7 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்திருக்கிறது. அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்தவர்களாகவே அல்லது தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் உடலைப் பெற்றுக்கொள்ள பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தியிருக்கிறது. வெள்ளைக் கொடியுடன் வந்து சர்வதேச எல்லைப்பகுதியில் அவர்களின் உடல்களைப் பெற்றுக்கொள்ளும்படி இந்திய ராணுவம் அறிவுறுத்திய நிலையில், அதற்கு பாகிஸ்தான் ராணுவம் தரப்பிலிருந்து இதுவரை பதில் எதுவும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

Jammu Kashmir
Jammu Kashmir
AP

அதேநேரம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முஸாபர்பாத் பகுதி மக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறி வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், எல்லைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மீது கிளஸ்டர் வகைக் குண்டுகள் மூலம் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகவும் பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டியிருக்கிறது.

இதுதொடர்பாக கார்கில் பகுதி அரசு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், ` உரிய முன் அனுமதியின்றி மாவட்ட நீதிபதிகள் முதல் தாசில்தார்கள் வரை அடுத்த உத்தரவு வரும் வரையில் தங்களது அலுவலகத்தை விட்டு செல்லக் கூடாது. அதேபோல், எந்த ஓர் அதிகாரியும் தங்களது செல்போன்களை அணைத்து வைக்கக் கூடாது' என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல், ஸ்ரீநகரில் துணை ராணுவப் படைகள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் அடுத்த 24 மணி நேரத்துக்கு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 ‘இங்கு ஏதோ நடக்கிறது; ஆனால் யாருக்கும் தெரியாது’- காஷ்மீரின் நிலையால் கொதிக்கும் ஒமர் அப்துல்லா
Mehbooba Mufti
Mehbooba Mufti
Twitter

இந்தச் சூழலில் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முஃப்தி தலைமையில் இருவேறு குழுக்களாக அரசியல் தலைவர்கள் ஆளுநர் சத்யபால் மாலிக்கைச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புகளின்போது, ஜம்மு - காஷ்மீர் மக்கள் இயக்கத் தலைவர் ஷா பேசெல், மக்கள் மாநாட்டுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களான சஜ்ஜாத் லியோன் மற்றும் இம்ரான் ரீசா அன்சாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். அவர்கள் மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து ஆளுநருடன் கலந்தாலோசித்துள்ளனர். முன்னதாக, பிடிபி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் மெஹ்பூபா முப்தி ஆலோசனை நடத்தினார்.

ஆளுநருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓமர் அப்துல்லா, `காஷ்மீரில் என்ன நடக்கிறது? இந்தக் கேள்விக்கான உண்மையான பதில், இன்னும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆளுநர் நேற்று என்ன கூறினாரோ அதை இன்றும் அப்படியே மாறாமல் கூறுகிறார். அமர்நாத் யாத்திரை வந்துள்ள மக்கள் ஏன் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது தொடர்பாக நிச்சயம் மத்திய அரசு அறிக்கை அளித்திருக்கும், அதையும் கூற மறுக்கிறார்கள். ஜம்முவில் என்ன நடக்கிறது என்பதற்கான பதில் எங்களுக்குக் கிடைக்க வேண்டும். இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டால், ‘ இங்கு ஏதோ நடக்கிறது. ஆனால், அது பற்றி யாருக்கும் தெரியாது’ எனப் பதில் கூறுகின்றனர்'' என்றார் விரக்தியாக.

Omar Abdullah
Omar Abdullah
AP

பதற்றம் கொள்ள வேண்டாம் என ஆளுநர் தரப்பில் அறிவிக்கப்பட்டிருப்பினும், மத்திய அரசு இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிகள் வலியுறுத்தியிருக்கின்றன. நாடாளுமன்றம் நாளை கூடும்போது ஜம்மு - காஷ்மீர் நிலவரம் குறித்து அரசு நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியிருக்கின்றன. ஜம்மு - காஷ்மீர் மாநில நிலவரம் தேசிய அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.