Published:Updated:

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்... 4 சகோதரிகளுக்கு ஒரே தேதியில் திருமணம்! - உற்சாகத்தில் கேரள குடும்பம்

குழந்தைகள் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று என் கணவர் நினைத்தார்.

கேரள சகோதரிகள்
கேரள சகோதரிகள்

கேரளாவில் ஒரே நாளில் பிறந்த 4 சகோதரிகளுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரே தேதியில் திருமணம் நடக்கவுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பிரேம குமார் - ரமாதேவி தம்பதிக்கு 1995-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. இந்த குழந்தைகளின் பிறப்பு ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. பஞ்சரத்தினங்களான இந்தக் குழந்தைகள் உத்திர நட்சத்திரத்தில் பிறந்திருந்தனர். இதன் காரணமாகப் பெண் குழந்தைகளுக்கு உத்ரஜா, உத்ரா, உதாரா, உத்தமா என்றும் ஆண் குழந்தைக்கு உத்ராஜன் என்றும் பெயரிட்டனர். பிரேம குமார் சாதாரண வியாபாரி. அவரது வருமானத்தில் தான் அந்த குடும்பத்தின் வாழ்வாதாரமே இருந்தது.

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்... 4 சகோதரிகளுக்கு ஒரே தேதியில் திருமணம்! - உற்சாகத்தில் கேரள குடும்பம்

இந்நிலையில் ரமாதேவிக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டது. அவரது மருத்துவச் செலவுக்கு நிறைய நிதி தேவைப்பட்டது. ஒரு கட்டத்தில் அந்தக் குடும்பம் நிதிச்சிக்கலில் தவித்தது. மன உளைச்சலுக்கு ஆளான பிரேம குமார் தன் மனைவி மற்றும் குழந்தைகளைத் தவிக்கவிட்டுவிட்டு 2004-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். குமாரின் மரணம் குடும்பத்தை நிலைகுலையச் செய்தது. ரமா தேவிக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களின் உதவி கிடைத்தது. அதன்மூலம் வறுமையைச் சமாளித்து வந்தார். ரமாதேவியின் குடும்பச்சூழல் குறித்து ஊடகங்கள் பேசத்தொடங்கியது. அதன்பின் அரசாங்கம் உதவிக்கரம் நீட்டியது.

`துரோகம்.. மரணம்.. பயம்' - 30 வருடங்களாக மணப்பெண் கோலத்தில் வலம்வரும் கூலித் தொழிலாளி!

திருவனந்தபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரமாதேவிக்கு வேலை கிடைத்தது. 5 குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்தார். இந்த மாதம் 18-ம் தேதி ஐந்து குழந்தைகளும் 24 வயதை நிறைவுசெய்கிறார்கள். நான்கு பெண்களில் ஒருவர் ஆடை வடிவமைப்பாளர், இருவர் மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள், மற்றவர் ஆன்லைன் எழுத்தாளர். உத்ராஜன் பொறியாளராக உள்ளார். நான்கு பெண்களுக்கும் தற்போது வரன் அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்கள் நான்கு பேருக்கும் ஒரே நாளில் திருமணம் நடக்கவுள்ளது. இதற்கான பணிகளில் உத்ராஜன் பிசியாக உள்ளார்.

பஞ்சரத்தின குடும்பம்
பஞ்சரத்தின குடும்பம்

இதுகுறித்து பேசியுள்ள ரமாதேவி, ``என் கணவரின் திடீர் மரணம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னுடைய குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என முடிவு செய்தேன். மீண்டும் போராடத்தொடங்கினேன். மனமிருந்தால் மார்க்கமுண்டு. ஒவ்வொரு தடைகளையும் தாண்டி வந்தேன். குழந்தைகள் அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என என் கணவர் நினைத்தார். அவரது கனவை நான் நனவாக்க முயன்றேன். என் மகள்களின் திருமணத்தை ஒரே நாளில் நடத்த வேண்டும் என முடிவு செய்தேன். என் மகன் கொஞ்சம் நல்ல நிலைக்கு வர வேண்டும் அதற்காக அவன் காத்திருக்க வேண்டும்” என்றார்.