Published:Updated:

`நானும் உங்கள் மகன்தான்!’ - மீட்புப் பணியில் உயிரிழந்தவரின் குடும்பத்தை நெகிழ வைத்த நடிகர் ஜெயசூர்யா

கேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உதவி செய்திருக்கிறார் நடிகர் ஜெயசூர்யா

லினு - ஜெயசூர்யா
லினு - ஜெயசூர்யா ( Mathrubhumi )

கேரளாவில் கடந்த வருடம் பெய்த பெருமழை மொத்த மாநிலத்தையும் புரட்டிப்போட்டுவிட்டது. வரலாறு காணாத மழையால் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். இந்த மழையால் 400-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு வெள்ளத்திலிருந்தே இன்னும் மீளாத கேரளா, அதற்குள் மற்றுமொரு பேரிடரைச் சந்தித்துள்ளது.

கேரள வெள்ளம்
கேரள வெள்ளம்

இந்த வருடமும் பெய்த மழை, கேரளாவைப் பதம் பார்த்துள்ளது, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2018-ம் ஆண்டு வெள்ளம் மட்டுமே ஏற்பட்ட நிலையில் இந்த வருடம் வெள்ளத்துடன் சேர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன.

கேரள மக்களின் வேதனையான இந்தச் சூழலைக் களைவதற்காக தங்களிடம் இருக்கும் பொருள்கள், பணம் போன்றவற்றை அளித்து உதவி வருகின்றனர் பொதுமக்கள். மற்றொருபுறம் பல கதாநாயர்களும் உருவாகியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தின் காரணமாகச் சிலர் தங்களின் வீடு உடைமைகளை இழந்தபோதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்துவருகின்றனர்.

உயிரிழந்த லினு
உயிரிழந்த லினு
Mathrubhumi

அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், கண்ணூர் மாவட்டம், செருவனூர் பகுதியைச் சேர்ந்த போனத் லினு. 34 வயதான இவரது வீடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் தன் குடும்பத்தினருடன் முகாமில் தங்கியிருந்தார். இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகத் தன் நண்பர்களுடன் சென்ற லினு, மீண்டும் திரும்பவே இல்லை. பொதுமக்களைக் காப்பாற்றும்போது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினர் தங்கியிருந்த முகாமுக்குக் கொண்டு வரப்பட்டு, பின்னர் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து தீவிரமடையும் மழை; 20 பேர் உயிரிழப்பு - மீண்டும் வெள்ளத்தில் சிக்கிய கேரளா

லினுவின் இறப்பு அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களைக் காப்பாற்ற தன் உயிரை விட்ட லினுவை ஹீரோவாகப் பார்க்கின்றனர் அந்தப் பகுதி மக்கள். இந்தச் சம்பவத்தால் வேதனைப்பட்ட மலையாள நடிகர் ஜெயசூர்யா, உயிரிழந்த லினுவின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவியை வழங்கியுள்ளார். லினுவின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்ட சூர்யா, அவர்களிடமிருந்து வங்கிக் கணக்கு எண்ணைப் பெற்று பணம் செலுத்தியிருக்கிறார்.

நடிகர் ஜெயசூர்யா
நடிகர் ஜெயசூர்யா
Facebook/@Jayasurya

லினுவின் குடும்பத்தினரிடம் அவர் பேசும்போது, `` லினு கேரள மக்களுக்காக தன் உயிரையே கொடுத்திருக்கிறார். தயவுசெய்து நான் அளிக்கும் பணத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னையும் உங்கள் மகனாக நினைத்து இதனை ஏற்க வேண்டும்” எனக் கலங்கியவாறு கூறியிருக்கிறார். ஜெயசூர்யாவின் செயலை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர் கேரள மக்கள்.