Published:Updated:

`நீ எங்கிருந்து வருகிறாய்; ஆதார் அட்டையைக் காட்டு!’ - சர்ச்சையை ஏற்படுத்திய கேரள வைரல் வீடியோ

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளியிடம் ஆதார் அட்டையைக் காண்பிக்கும்படி கேட்கும் வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கோலா என்ற பகுதியில் எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஒரு ஆட்டோ ஓட்டுநர், மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளியிடம் ஆதார் அட்டையைக் காண்பிக்கும்படி கேட்டு மிரட்டுகிறார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த ஆட்டோ ஓட்டுநரை கேரள போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

வீடியோவின் தொடக்கத்தில், சாலையில் நின்றுகொண்டிருந்த கௌதம் மாண்டால் என்ற மேற்குவங்கத் தொழிலாளியிடம் ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் கோபத்துடன் பேசுகிறார். ‘யார் நீ? எங்கிருந்து வருகிறாய், உனது ஆதார் அட்டையைக் காட்டு’ என மிரட்டுகிறார். அதற்கு, ‘என்னுடைய அடையாள அட்டை வேண்டுமா, முதலில் நீங்கள் கட்டுங்கள்’ என்று பதில் கூறுகிறார் கௌதம். உடனடியாகத் தன் ஆட்டோவில் இருந்து ஆதார் அட்டையுடன் வந்து அதை கௌதமிடம் காட்டுகிறார், சுரேஷ்.

பிறகு, கௌதம் தன் பர்ஸில் இருக்கும் அடையாள அட்டையைத் தேடுகிறார். அதற்குள் ஓட்டுநர், கௌதமின் முகத்தில் கடுமையாகத் தாக்குகிறார். `எங்கே உன் ஆதார் அட்டை?’ எனக் கேட்டுக்கொண்டே மீண்டும் அவரைத் தாக்குகிறார். கௌதம் எதுவும் பேசாமல் திகைத்து நிற்கிறார். ஆனால், மீண்டும் மீண்டும் அவரிடம் ஆதார் எங்கே? என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார் சுரேஷ்.

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

இறுதியில், கௌதம் தன் தொழிலாளர் அடையாள அட்டையைக் காண்பிக்க, அதை வாங்கி வைத்துக்கொண்ட சுரேஷ், `காவல் நிலையத்துக்கு வா அங்கு பேசிக்கொள்ளலாம்’ என்று கூறியபடியே கௌதமின் அடையாள அட்டையுடன் நடந்து போகிறார். எதுவும் செய்ய முடியாமல், கௌதம் அங்கேயே உறைந்து நிற்கிறார், அத்துடன் வீடியோ காட்சி நிறைவடைகிறது.

`நீங்கள் இந்தியக் குடிமகன்தானா.. நிரூபியுங்கள்!’ - 127 பேருக்கு அதிர்ச்சி கொடுத்த யுஐடிஏஐ

இந்தச் சம்பவம் நடக்கும்போது, அருகிலிருந்த யாரோ ஒருவர் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர் அந்த வீடியோ வைரலாகி சர்ச்சையாகியுள்ளது. இதையடுத்து, விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷை அடையாளம் கண்டுபிடித்து காவலர்கள் கைதுசெய்துள்ளனர். தற்போது, அவர் மீது பொது இடங்களில் ஆபாசமாகப் பேசுவது, குற்றவியல் மிரட்டல், காரணம் இல்லாமல் பிறரைப் புண்படுத்தியது மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் தன் வண்டியை எடுக்கும்போது, பின்னால் வந்த கௌதம் மீது தெரியாமல் மோதியுள்ளார். பின்னர் கௌதம் முறைத்துவிட்டு, `ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று கேள்வி எழுப்பிவிட்டு கடந்துசென்றுள்ளார். ஆனால், அவரை விடாமல் பின் தொடர்ந்த சுரேஷ் , கௌதமிடம் அடையாள அட்டையைக் காட்டும்படி கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு சில நிமிடங்கள் முன்னதாக, தன் ஆட்டோவில் இடித்த இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரிடமும் சுரேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நடந்தபோது, ஓட்டுநர் சுரேஷ் மது அருந்தியிருந்ததாகவும், அதன் காரணமாகவே இப்படி நடந்துகொண்டதாகவும் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு