Published:Updated:

`சிறுவன் மண் தின்றது பசியினால் அல்ல!'- கேரள அரசின் நிர்பந்தத்தால் பதவி விலகிய முக்கிய நிர்வாகி

சிறுவனின் தாய்க்கு தினமும் 650 ரூபாய் சம்பளத்தில் திருவனந்தபுரம் மாநகராட்சி சார்பில் தற்காலிக பணி வழங்கப்பட்டது. அவருக்கு வசிப்பதற்காக வீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

தாய் ஸ்ரீதேவி
தாய் ஸ்ரீதேவி

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் பசியின் கொடுமையால் சிறுவன் மண் தின்றதாக எழுந்த புகார் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள கைதமுக்கு பகுதியில் ரயில்வே புறம்போக்கில் ஷெட் அமைத்து குடியிருக்கும் ஸ்ரீதேவியின் 7 வயது சிறுவன் மண் தின்றதுதான் சர்ச்சை ஏற்படக் காரணம். ஸ்ரீதேவிக்கு, ஏழு வயது மூன்று மாத குழந்தையையும் சேர்த்து 6 குழந்தைகள் உள்ளனர்.

ஸ்ரீதேவிக்கு தற்காலிக பணி வழங்கிய மேயர்
ஸ்ரீதேவிக்கு தற்காலிக பணி வழங்கிய மேயர்

கணவனின் குடிப்பழக்கத்தால் உணவு இல்லாமல் குழந்தைகள் தவித்துவந்துள்ளனர். இந்தநிலையில், தன் மூத்த மகன் பசியால் மண்ணை வாரி தின்றதாக தாய் ஸ்ரீதேவி கூறினார். இதையடுத்து, சைல்ட் லைன் அதிகாரிகள் நேரில் சென்று அவர்களுக்கு உணவு அளித்தனர். அந்தச் சமயத்தில் தன் குழந்தைகளைக் காப்பகத்தில் ஏற்றுக்கொள்ளுமாறு தாய் ஸ்ரீதேவி அதிகாரிகளிடம் கோரிக்கைவைத்தார். என் குழந்தைகள் வயிறார சாப்பிட்டால் போதும் என ஸ்ரீதேவி கூறவும் அதிகாரிகள் நான்கு குழந்தைகளைக் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், குழந்தையின் தாய்க்கு தினமும் 650 ரூபாய் சம்பளத்தில் திருவனந்தபுரம் மாநகராட்சி சார்பில் தற்காலிக பணி வழங்கப்பட்டது. அவருக்கு வசிப்பதற்காக வீடு வழங்கப்படும் என திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஸ்ரீகுமார் தெரிவித்தார்.

இதற்கிடையே, `ஸ்ரீதேவியின் மகன் மண் சாப்பிடுவது வழக்கமான ஒன்றுதான், பசியால் அல்ல' என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மீடியாக்கள் மூலம் வெளிப்படுத்தினர். மேலும் சிறுவனின் தாயும், `பசியால் சிறுவன் மண் தின்னவில்லை' எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து சி.பி.எம் மாநிலக் குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. அப்போது அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக குழந்தைகள் மண் தின்றதாக பொய்யாகத் தகவல் பரப்பப்பட்டதாக கூறப்பட்டது.

பதவி விலகிய எஸ்.பி.தீபக்
பதவி விலகிய எஸ்.பி.தீபக்

சி.பி.எம் வஞ்சியூர் ஏரியா கமிட்டி உறுப்பினரும், குழந்தைகள் பாதுகாப்புக் குழு மாநில பொதுச்செயலாளராக அரசால் நியமிக்கப்பட்ட எஸ்.பி.தீபக் இந்தப் பிரச்னையை முதலில் கிளப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் எஸ்.பி.தீபக், குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் அங்கு சென்றபோது சிறுவன் மண் தின்றதை நேரில் கண்டதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மாநில குழந்தைகள் பாதுகாப்புக்குழு பொதுச்செயலாளர் பதவியை எஸ்.பி.தீபக் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்தில் ஒப்படைத்த பின்னர் தீபக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கட்சி கூறியதன் அடிப்படையில் மாநில குழந்தைகள் பாதுகாப்புக் குழு மாநில பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்துள்ளேன்.

சிறுவன் மண் தின்றதாக தாய் கூறியிருந்தார், குழந்தைகள் பாதுகாப்புக் குழு பணியாளரும் தெரிவித்தார். அதன் அடிப்படையில்தான் நான் இதுகுறித்து கூறினேன். அதன்பிறகுதான் மண் தின்றது பசியினால் அல்ல என நான் புரிந்துகொண்டேன். முதலில் நான் நேரில் சென்று விசாரணை நடத்தாததுதான் தவறு" என்றார்.