Published:Updated:

`இதுதான் எனது பெருநாள் கொண்டாட்டம்!' - நெகிழவைத்த கேரள சாலையோர வியாபாரி

சிந்து ஆர்

கேரளாவில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு, மண் சரிவுகளில் சிக்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ நெருங்குவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கே.கே.ஷைலஜா, நவ்ஷாத்
கே.கே.ஷைலஜா, நவ்ஷாத்

மழையால் பாதித்த கேரள மக்களுக்கு பலரும் உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை ஆட்டிப்படைக்கும் இயற்கை பேரிடரால் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் கேரள மக்கள்.

கேரளா மழை
கேரளா மழை

இந்த நிலையில், கொச்சி மட்டஞ்சேரியைச் சேர்ந்த சாலையோர துணிக்கடைக்காரர் தனது கடைகளில் உள்ள புத்தம்புதிய துணிகளை, மழையால் வீடிழந்து உடமைகளை இழந்து முகாம்களில் வசிக்கும் மக்களுக்காக வழங்கியுள்ளார். இதுதான் தனது பெருநாள் கொண்டாட்டம் என்று உணர்ச்சிப்பெருக்குடன் அவர் கூறியுள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணம், பொருள் என சேகரித்துக்கொண்டிருந்தவர்களை தனது கடைக்கு வருமாறு அழைத்த நவ்ஷாத், குழந்தைகளுக்கும் பெண்களுக்குமான ஆடைகளை அள்ளி அள்ளி சாக்குகளில் அடைத்தார். சாதாரண சாலையோர வியாபாரி, விற்பனைக்காக வைத்திருந்த துணிகளை அள்ளி வழங்கியதைப் பார்த்தவர்கள் அதை ஃபேஸ்புக்கில் வீடியோவாக லைவ் செய்தனர்.

நவ்ஷாத்
நவ்ஷாத்

பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொருள் சேகரிக்க வந்தவர்கள் போதும் போதும் எனச் சொன்னபோதும் கேட்காமல் சாக்குப்பைகளில் துணிகளை அள்ளித் திணித்தார் நவ்ஷாத்.

இதுகுறித்து நவ்ஷாத் கூறுகையில், ``வரும்போதும் ஒன்றும் கொண்டுவரவில்லை, போகும்போதும் எதுவும் கொண்டுபோவதில்லை. மனிதர்களுக்கு உதவ வேண்டும். இதில் லாபம், நஷ்டம் எதுவும் பார்க்கவில்லை. உடை இல்லாதவர்கள் உடுத்தட்டும். இதுதான் எனது பக்ரீத் கொண்டாட்டம்" என்றார்.

கே.கே.ஷைலஜா, நவ்ஷாத்
கே.கே.ஷைலஜா, நவ்ஷாத்

நவ்ஷாத் புத்தம் புதிய துணிகளை அள்ளி வழங்கிய வீடியோவைக் கண்ட கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நவ்ஷாத்தின் புகைப்படத்தை பகிர்ந்ததோடு நவ்ஷாத் கூறிய வாசகங்களையும் பதிவுசெய்து பாராட்டினார். மழை பாதிப்பால் நடுங்கிக்கொண்டிருக்கும் கேரள மக்களுக்கு நவ்ஷாத்தின் செயல்பாடு உத்வேகத்தை கொடுத்துள்ளது. கேரள மக்கள் நவ்ஷாத்தைக் கொண்டாடி வருகின்றனர்.