Published:Updated:

`எல்லாரையும் அதே கண்ணோட்டத்தோடு பார்க்காதீர்கள்!' - கேரள முதல்வரின் கொரோனா அட்வைஸ்

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

சுற்றுலாப் பயணிகளை கொரோனாவுடன் வருகிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். அப்படி நோய் இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

கேரள மாநிலத்தில் வரும் வெளிநாட்டவர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்படுகிறது. அதில், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரளத்தில் சுற்றுலா வருபவர்களை கார், ஆட்டோக்களில் அழைத்துச் செல்ல சிலர் தயங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சுற்றுலா முக்கியத் தொழிலாக விளங்கும் கேரளத்தில் இதுபோன்ற நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின்போது பினராயி விஜயன் கூறுகையில், ``கேரளத்தில் மலப்புரத்தில் 2 பேர், காசர்கோட்டில் ஒருவர் என மூன்றுபேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 3 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 12,740 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 270 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். நேற்று மட்டும் 72 பேர் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளனர்.

கைகளை சுத்தப்படுத்தும் பினராயி விஜயன்
கைகளை சுத்தப்படுத்தும் பினராயி விஜயன்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கொரோனா குறித்து விவாதித்தோம். கொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றிணைந்துள்ளது. நம் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாத கடைசியில் கொரோனா வந்தது. அதற்காக சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினோம். சாதாரண பேருந்து, டாக்ஸி, ஆட்டோக்கள் இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. அரசு பஸ்சுக்கு கோடிக்கணக்கில் இழப்பு உள்ளது. பொது நிகழ்ச்சிகளை நிறுத்தி வைத்துள்ளோம். சுற்றுலா மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இனிவரும் நாள்களில் நம் வருவாய் இன்னும் மோசமாகும். விமான நிலையங்கள் சம்பந்தமாக அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினேன். வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை மட்டுமல்லாது வெளிநாட்டுக்குப் போகும் பயணிகளையும் சோதிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு அனைவரும் தயாராக வேண்டும். வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு வெளியேற தாமதம் ஏற்படும் என்பதால் அதுகுறித்து கருத்தில் கொண்டுள்ளோம். அதே சமயம் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது.

கொரோனா
கொரோனா

விமானத்தில் பயணிக்க வருபவர்களைக் கொண்டுவிடவும். வருபவர்களை அழைக்கவும் கூட்டமாக வர வேண்டாம். பாதுகாப்புக் கருதி அவ்வாறு ஆட்கள் வரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். விமான நிலையங்களில் கூடுதல் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. `பிரேக் தி செயின்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தி அனைவரையும் கை கழுவ வேண்டும் எனப் பிரசாரம் செய்கிறோம்.

136 நாடுகளில் இருந்த கொரோனா இப்போது 146 நாடுகளுக்கு பரவி உள்ளது. சுற்றுலாப் பயணிகளை கொரோனாவுடன் வருகிறார்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். அப்படி நோய் இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். டூரிஸம் கேரளத்தில் முக்கியமானது. எனவே, இனி கேரளத்தில் யாரும் வரக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்திவிடக் கூடாது.

`கொரோனா விழிப்புணர்வு' - நம் உறவுகளுக்குப் பகிர ஓர் எளிய வழிகாட்டி! #FightAgainstCoronavirus

ஆலயங்களில் நடக்க வேண்டிய சடங்குகள் நடக்கட்டும். ஆனால், ஆட்கள் கூட வேண்டாம். முதியோர் பென்சன் போன்ற அரசு உதவிகள் பெறுவதற்கான கால அவகாசம் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது. எனவே, நாள் இல்லை என கூட்டமாக வரவேண்டாம். பிற மாநிலங்களில் படிக்கும் கேரள மாணவர்களை இங்கு அழைத்துவர மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். திருமணங்களில் நூறுபேருக்கு மேல் கலந்துகொள்ளக் கூடாது. திருவிழாக்களில் அதிக ஆட்களை கூட்ட வேண்டாம்" என்றார்

அடுத்த கட்டுரைக்கு