Published:Updated:

கேரளத்தில் `தொற்றுநோய் தடுப்புச் சட்டம்' -கொரோனா எதிரொலியால் அறிவித்த பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

மத்திய அரசு கூறும் முன்பு நாம் லாக் டவுண் அறிவித்துள்ளோம். நம் மாநிலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறோம்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், கொரோனா நிலவரம் குறித்து பேசினார். நேற்று 9 பேருக்குப் புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் பேசிய பினராயி, ``மத்திய அரசு கூறும் முன்பு நாம் லாக் டவுன் அறிவித்துள்ளோம். நம் மாநிலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறோம். இன்று 9 பேருக்குக் கொரோனா பாதித்துள்ளது. இதில் நான்குபேர் துபாயிலிருந்து வந்தவர்கள். கொரோனா பாதிப்பில் 112 பேர் சிகிச்சையில் உள்ளனர். திருவனந்தபுரம், திருச்சூரில் 2 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

76, 542 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 532 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். 118 பேருக்கு வைரஸ் பாதித்ததில், ஆறுபேர் சிகிச்சை முடித்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். வைரஸ் பாதித்த 91 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், 8 பேர் வெளிநாட்டினர். மீதமுள்ள 19 பேர் இவர்களுடனான தொடர்பில் இருந்ததால் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள். ஏற்கெனவே ஆறுபேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் மேலும் ஆறுபேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் மொத்தம் 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா
கொரோனா

மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் மற்றும் கள்ளுக்கடைகள் அடுத்த உத்தரவு வரும் வரை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள எபிடமிக் டிஸீசஸ் ஆடினஸ் -2020 என்ற தொற்று வியாதிகளைத் தடுப்பதற்காக அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கும் புதிய சட்டம் ஏற்படுத்த மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

பொதுமக்களும் குழுக்களும் தனி நபரும் நடத்தும் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த அரசுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. இதைப் பயன்படுத்தி அரசு மாநில எல்லைகளை மூட முடியும். பொது மற்றும் தனியார் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க முடியும். பொது இடங்களிலும், மத வழிபாட்டுத் தலங்களிலும் மக்கள் கூடுவதை தடுக்க முடியும்.

கேரள முதல்வர் பினராயி  விஜயன், கவர்னர் ஆரிஃப் முகமது கான்
கேரள முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் ஆரிஃப் முகமது கான்
http://www.keralacm.gov.in/

அரசு அலுவலகங்கள், கல்விக்கூடங்கள், தனியார் நிறுவனங்கள், பேக்டரிகள், கடைகள், ஒர்க்‌ஷாப்புகள், ஓட்டல்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியும். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையோ, பத்தாயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க முடியும். விதிமுறையை மீறுபவர்கள் மீது போலீஸ் நேரடியாக வழக்குப்பதிய முடியும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு