Published:Updated:

`குளங்கள், சாலைகளைப் புதுப்பிக்கும் பணிகள்!' - வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவும் கேரள முதல்வர்

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

வெளிமாநிலத் தொழிலாளர்களை அமைதிப்படுத்தும் திட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் கையில் எடுத்துள்ளார்.

கேரள மாநிலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் வெற்றியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நேற்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அவருக்குக் கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. அதேசமயம் நேற்று மட்டும் 10 பேர் கொரோனா குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 395 பேருக்கு நோய் கண்டறியப்பட்டு, அதில் இவர்களில் 255 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் 78,980 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 78,454 பேர் வீடுகளிலும், 526 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை ஒன்றேகால் லட்சத்தை நெருங்கிய நிலையில் இப்போது படிப்படியாகக் குறைந்து வருகின்றது.

கேரளத்தில் நடந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம்
கேரளத்தில் நடந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம்

கொரோனா கட்டுக்குள் கொண்டுவரும் முனைப்பில் கேரள அரசு இருந்த சமயத்தில் இந்த மாத தொடக்கத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சாலையில் ஒன்றாகக் கூடி போராட்டம் நடத்தினர். மேலும் அவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை எனப் புகார் தெரிவித்தனர். அதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி போராட்டத்தைத் தூண்டியதாக வடமாநில தொழிலாளர்கள் சிலரைக் கைது செய்தனர். மேலும் போராட்டத்தைத் தூண்டியதாக கேரளத்தைச் சேர்ந்த சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகி மீதும் வழக்கு பாய்ந்தது.

மேலும் உணவுக்காக அந்தப் போராட்டம் நடக்கவில்லை எனவும், சொந்த ஊருக்குச் செல்வதற்காகப் போராட்டம் நடத்தப்பட்டதும் தெரியவந்தது. இந்தநிலையில் வெளிமாநிலத் தொழிலாளர்களை அமைதிப்படுத்தும் திட்டத்தைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கையில் எடுத்துள்ளார். வெளிமாநிலத் தொழிலாளர்களைக் கொண்டு குளங்களைத் தூர்வாரும் பணியை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "லாக் டௌன் காலத்தில் அத்தியாவசியப் பணிகள் சிலவற்றைச் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் கேரள மாநிலத்தில் உள்ள குளங்களைத் தூர்வாரும் பணியை மேற்கொள்ள உள்ளோம். இதற்கு வெளிமாநிலத் தொழிலாளர்களையும் பயன்படுத்தலாம். இப்போது வேலை இல்லாமல் இருக்கும் அவர்களுக்கு இதன்மூலம் வேலை கிடைக்கும். மேலும் கிராமப்புற சாலை உள்ளிட்டவற்றைச் செப்பனிடும் பணிகளும் நடைபெறும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு