Published:Updated:

மூணாறு நிலச்சரிவு: 7 நாள்களுக்குப் பிறகு பெட்டிமுடி சென்ற கேரள முதல்வர்!

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

மூணாறு நிலச்சரிவு நடந்த இடத்தை கேரள முதல்வரும், கேரள மாநில ஆளுநரும் நேரில் ஆய்வு செய்தனர்.

கேரள மாநிலம் மூணாறு ராஜமலை அருகேயுள்ள பெட்டிமுடிப் பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு நிலச்சரிவில் சிக்கியது. இதில், 71 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். சம்பவம் நடந்த அடுத்த நாளான ஆகஸ்ட் 7-ம் தேதி மதியம் முதல், மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதுவரை 55 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள சூழலில், மேலும், 16 நபர்களின் உடல்களைத் தேடும் பணியில் மீட்புக்குழு 7-வது நாளாக ஈடுபட்டுவருகிறது.

கேரள முதல்வரும், ஆளுநரும்.
கேரள முதல்வரும், ஆளுநரும்.
மூணாறு நிலச்சரிவு: மீட்புப் பணியில் பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை #SpotVisit

இந்நிலையில், சம்பவ இடத்தை இரு தினங்களுக்கு முன்னர், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர், மீட்புக்குழுவினரிடம் சம்பவம் குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,``இது போன்ற துயரச் சம்பவம் இதுவரை நடந்ததே இல்லை. மாநில முதல்வர் இங்கே வருவது அவரது விருப்பம். ஆனால், அவர் இங்கே வந்திருக்க வேண்டும்” என்று கூறினார். இது கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இந்தச் சூழலில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் இருவரும் நேற்று காலை, ஹெலிகாப்டர் மூலம் மூணாறு வந்தடைந்தனர். முதலில், நிலச்சரிவில் சிக்கி, படுகாயத்துடன் மீட்கப்பட்டு, மூணாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவரும் நபர்களைச் சந்தித்து நலம் விசாரித்தனர். தொடர்ந்து நிலச்சரிவு நடந்த பெட்டிமுடிக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், ``பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு முழுமையான மறு வாழ்வு உதவிகளை அளிக்கும். பெட்டிமுடியிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும், வேறு இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் அரசு ஏற்கும். காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களின் மருத்துவச் செலவுகளையும் அரசு ஏற்கும்” என்றார். ஆளுநர், ``பெட்டிமுடிச் சம்பவம் சோகமான நிகழ்வு” என்றார்.

மூணாறு நிலச்சரிவு: `250 பேர் கொண்ட குழு; 6-வது நாள்!’ - மீட்புப் பணிகளில் தாமதம் ஏன்?
கேரள முதல்வரும், ஆளுநரும்.
கேரள முதல்வரும், ஆளுநரும்.

கோழிக்கோடு விமான விபத்துக்கு கேரள அரசு காட்டிய அக்கறை, பெட்டிமுடி நிலச்சரிவு சம்பவத்தில் இல்லை என்ற குற்றச்சாட்டு ஆரம்பத்திலிருந்தே முன்வைக்கப்பட்டுவந்தது. நிலச்சரிவு ஏற்பட்டு ஏழு நாள்கள் கடந்த நிலையில், முதல்வர் சம்பவ இடத்துக்கு வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டுமல்லாமல், `இது காலதாமதமான முன்னெடுப்பு’ என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

அடுத்த கட்டுரைக்கு