Published:Updated:

`கேரளாவுக்கு நிதியுதவி; நினைவுகூர்ந்த முதல்வர் பினராயி விஜயன்!’ - சுஷாந்த் முடிவால் கலங்கும் ரசிகர்கள்

சுஷாந்த்  சிங்
சுஷாந்த் சிங்

``சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைக் கேட்டு மிகுந்த கவலையடைகிறோம். இந்திய திரைப்படத்துறைக்கு அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு.”

`எம்.எஸ்.தோனி: அன்டோல்டு ஸ்டோரி’ படத்தின் மூலம் மொழிகளைக் கடந்து மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங். சுஷாந்தின் மரணம் திரையுலகினரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. `இந்தச் செய்தி போலியானதாக இருக்கக் கூடாதா?’ என்று குறிப்பிட்டு பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கவலைகளைப் பதிவு செய்து வருகின்றனர். திரையுலகினர் உள்ளிட்ட பல பிரபலங்களும் சுஷாந்த் சிங் உடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து அவருடனான தங்களது நினைவைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கேரளா வெள்ளத்தின்போது ரசிகர் ஒருவரின் மூலமாக அம்மாநிலத்துக்கு 1 கோடி ரூபாய் வழங்கியது தொடர்பான அவரின் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

வெள்ளத்தால் 2018-ம் ஆண்டு கேரளா கடுமையாகப் பாதிப்படைந்தது. அம்மாநிலம் மீண்டு வருவதற்கு பயன்படும் வகையில் பல பகுதிகளில் இருந்தும் பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தனர். அப்போது, சுஷாந்த் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அனைவரும் முடிந்த அளவு உதவ வேண்டும். குறைந்தபட்சம் அம்மக்களுக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்" என்று பதிவிட்டார். இந்தப் பதிவின் கீழ் கமென்ட் செய்த சுபம்ரஞ்சன் என்பவர் தன்னிடம் உதவி செய்வதற்கு பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதைக் கவனித்த மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், ``ஒரு கோடி ரூபாயை உங்களது பெயரில் கொடுக்கிறேன். அது சரியாகச் சென்று சேர்கிறதா என்பதை மட்டும் உறுதி செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பணத்தையும் அனுப்பி அதற்கான ஸ்கிரீன் ஷாட்டுகளைப் பதிவிட்டு, ``நீங்கள் செய்ய விரும்பிய உதவியை செய்து முடித்துவிட்டேன். உங்களால்தான் நான் இந்த உதவியை செய்தேன். உங்களை நினைத்து பெருமைபட்டுக்கொள்ளுங்கள். சரியான நேரத்தில் தேவையான உதவிகளைச் செய்துள்ளீர்கள். சியர்ஸ்!” என்று தனது அன்பையும் வெளிப்படுத்தியிருந்தார். அவரது ரசிகர்கள் பலரும் தற்போது இந்தப் பதிவுகளைப் பகிர்ந்து வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

சுஷாந்த் கேரளாவுக்கு செய்த உதவியை மனதில் கொண்டு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைக் கேட்டு மிகுந்த கவலையடைகிறோம். இந்திய திரைப்படத்துறைக்கு அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு. அவரின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எங்களுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியிருந்தார். கேரள வெள்ளத்தின்போது சுஷாந்த் செய்த உதவியையும் தனது பதிவில் பினராயி விஜயன் குறிப்பிட்டிருந்தார். பினராயி விஜயனின் பதிவுக்கு கீழும் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

`எனது 50 கனவுகள்... அம்மாவுடன் செய்துகொண்ட சத்தியம்’- `கனவுக்காரன்’ சுஷாந்த் சிங்
அடுத்த கட்டுரைக்கு