Published:Updated:

`கொரோனா பாதித்தவர்கள் அதிகம் குணமானது இங்குதான்!’ -புள்ளிவிவரங்களை வெளியிட்ட பினராயி விஜயன்

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இந்தியாவிலேயே அதிக கொரோனா நோயாளிகள் குணமடைந்த மாநிலம் கேரளம்தான் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் குணமாகி வருகின்றனர். அதுமட்டுமல்லாது புதிதாகக் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் ஒரே நாளில் 28 பேருக்குக் கொரோனா பாதிப்பு என எகிறிக்கொண்டிருந்தது. ஆனால் கடந்த வாரத்திலிருந்து நிலமை கட்டுக்குள் வந்துள்ளது. அட்மிட் செய்யும் புதிய நோயாளிகளைவிட டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து புதிதாகக் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலும், டிஸ்சார்ஜ் ஆகுபவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலும் மாறியுள்ளன. இந்த நிலையில் நேற்று புதிதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஏழு பேருக்குக் கொரோனா நெகட்டிவ் ஆகியுள்ளது. அதுபோல கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக கொரோனா நோயாளிகள் குணமடைந்த மாநிலம் கேரளம்தான் எனவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ``கேரளத்தில் இன்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏழு பேருக்குக் கொரோனா சோதனை நெகட்டிவாகியுள்ளது. மாநிலம் முழுவதும் 387 பேருக்குக் கொரோனா ஏற்பட்டு 167 பேர் இப்போது சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதித்ததில் 264 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள், 8 பேர் வெளிநாட்டினர். 114 பேருக்குத் தொடர்பு மூலம் கொரோனா ஏற்பட்டது. இதுவரை 218 பேருக்குக் கொரோனா பூரணமாகக் குணமாகியுள்ளது. இந்தியாவில் நம் மாநிலத்தில்தான் கொரோனா குணமானவர்களின் எண்ணிக்கை அதிகம். மாநிலத்தில் 97,464 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 522 பேர் மருத்துவமனைக் கண்காணிப்பில் உள்ளனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் மலையாளிகளின் பாதுகாப்பு குறித்து நாம் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து வெளிநாடுகளில் அதிகமான க்வாரன்டைன்கள் தொடங்குவதாக நமது கேள்விக்கு பதில் வந்துள்ளது. அரபு நாடுகளில் க்வாரன்டைன் வார்டுகளுக்காகக் கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் அனுப்பியுள்ளார்கள். இது பாராட்டுக்குரிய நடவடிக்கை.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

சிவகாசியில் தீப்பெட்டி தயாரிப்பதற்கான பொருள்கள் அனுப்பி வைக்க வேண்டும் என விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேட்டிருக்கிறார். அதுகுறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். கேரளத்தில் சிக்னல் சோதனைக்காக வரும் ரயில்களில் ஆட்கள் வருவதாகப் புகார் வந்துள்ளது. இன்று திருவனந்தபுரம் வந்த ரயிலில் வந்த மூன்று ரயில்வே ஊழியர்களை க்வாரன்டைனில் வைத்திருக்கிறோம். டெல்லியில் கொரோனா வார்டுகளில் உள்ள கேரள நர்சுகள் கடைகளில் பொருள்கள் வாங்கச் செல்லும்போது ஏற்படும் பிரச்னைகள் குறித்து டெல்லி அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு