Published:Updated:

``ஐயா...கொஞ்சம் அரி தர முடியுமா?''- மாவோயிஸ்ட் கொலை விவகாரத்தில் தமிழில் பினராயி பதில்

கேரள அதிரடிப்படையினர் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேரில் 3 மாவோயிஸ்ட்டுகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

என்கவுன்டர் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் மாவோயிஸ்ட்டுகள்
என்கவுன்டர் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் மாவோயிஸ்ட்டுகள்

கேரளாவில் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் மாணிக்கவாசகம் உள்ளிட்ட 4 பேரை கேரள அதிரடிப்படையான தண்டர்போல்ட் போலீஸ் சுட்டுக் கொன்றது. சரணடைய அவர்கள் தயாராக இருந்த போதும் அதிரடிப்படையினர் வேண்டுமென்றே சுட்டுக்கொன்றதாக ஆதிவாசி மக்கள் தலைவர் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். ``அட்டப்பாடி காட்டில் மாவோயிஸ்ட்டுகள் சுற்றி வளைக்கப்பட்டதும் இரு தரப்புக்கும் நடுநிலையாளராக இருந்து ஆதிவாசி தாய்க்குலச் சங்கத்தின் துணைத் தலைவர் சிவானி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இரு நாள்களாகப் பேச்சுவார்த்தை நடந்தது. சுட்டுக் கொல்லப்பட்ட அரவிந்தனும் அவரின் மனைவியும் அங்கே இருந்தனர். மாவோயிஸ்ட்டுகள் சரணடையத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். போலீஸாரிடத்தில் இதைத் தெரிவித்தோம். எனினும், போலீஸார் அவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளனர்'' என்று முருகன் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதில், கொல்லப்பட்ட மாணிக்கவாசகத்துக்குக் குடல் நோய் இருந்துள்ளது. இதனால், அவர் சரணடைய தயாராக இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மஞ்சக்கட்டி மலையில் மாவோயிஸ்ட்டுகள்; தடுத்த பெருமழை! - கேரள துப்பாக்கிச் சூட்டின் பின்னணி

இதற்கிடையே, கேரளச் சட்டமன்றத்தில் இந்த விவகாரம் புயலைக் கிளப்பியது. ``மாவோயிஸ்ட்டுகள் சாதம் வடிக்க அரிசி கேட்டதாகவும் ஆனால், போலீஸ் அவர்களுக்குத் துப்பாக்கிக் குண்டை பரிசாக அளித்தனர். இது திட்டமிட்ட என்கவுன்டர்'' என்று கேரள எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்குப் பதிலளித்த கேரள முதல்வர் பினராஜி விஜயன்,``முதலில் மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். தண்டர்போல்ட் வீரர்கள் தற்காப்புக்காகவே மாவோயிஸ்ட்கள் மீது தாக்குதல் நடத்தினர். கொல்லப்பட்டவர்களிடமிருந்து ஏ.கே-47, ஏ.கே- 56 ரக துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. எந்த உயிரிழப்பும் வேதனை தரக்கூடியது. ஆனால், அவர்கள் சட்ட ஒழுங்கை சீரழிக்கின்றனர். மாநிலத்தில் சட்ட ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.

அட்டப்பாடியில் அதிரடிப்படை
அட்டப்பாடியில் அதிரடிப்படை

பின்னர், 'கொஞ்சம் அரிசி தர முடியுமா? ' என்று தமிழில் கேட்பது போல பேசிய பினராயி விஜயன், ''கொல்லப்பட்டவர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தாக்குவதற்கு எல்லா நிலையிலும் அவர்கள் தயாராக இருந்தனர்'' என்றும் மாவோயிஸ்ட்டுகள் மீது குற்றம் சுமத்தினார். கொல்லப்பட்ட மாணிக்கவாசகம், ரேமா, கார்த்தி, அரவிந்த் ஆகிய 4 பேருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்களின், உடல்கள் தற்போது திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் உள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக, கேரள மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.