Published:Updated:

`கேரளாவில் கொரோனா பரவல் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவுதான்!’ - முதல்வர் பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன்
News
கேரள முதல்வர் பினராயி விஜயன்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வந்த லாரி டிரைவர் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், அதே லாரியில் வந்த கிளீனரின் மகன் மற்றும் அவருடன் தொடர்பில் இந்த 2 பேருக்கும் நோய் பரவியுள்ளது.

பாஸ் இல்லாமல் ரயிலில் பயணிப்பவர்கள் கட்டாயமாக 14 நாள்கள் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``கேரளாவில் புதிதாக ஐந்து பேருக்குக் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும் மற்றொருவர் கோட்டயம் மாவட்டத்தையும் சேர்ந்தவர். புதிதாகத் தொற்று ஏற்பட்டவர்களில் 4 பேர் சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தார்கள். ஒருவர் சென்னையிலிருந்து வந்தவர். புதிதாக நோய் குணமானவர்கள் யாரும் இல்லை. கேரளத்தில் மொத்தம் 524 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது 32 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வந்த லாரி டிரைவர் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், அதே லாரியில் வந்த கிளீனரின் மகன் மற்றும் அவருடன் தொடர்பில் இந்த 2 பேருக்கும் நோய் பரவியுள்ளது. மாநிலம் முழுவதும் 31,616 பேர் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். புதிதாக கொரோனா அறிகுறிகளுடன் 95 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா
கொரோனா

கேரளத்தில் 34 பகுதிகள் ஹாட்ஸ்பாட் லிஸ்டில் உள்ளன. திருவனந்தபுரம், ஆலப்புழா மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் இப்போது கொரோனா நோயாளிகள் யாருமில்லை. வெளிமாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு 33,116 பேர் சாலை வழியாக வந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் 1,406 பேரும், கப்பல் மூலம் 833 பேரும் வந்துள்ளனர். கேரளாவில் மாநிலத்தின் வெளியே இருந்து வந்தவர்கள் மூலம் 70 சதவிகிதம் பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்ததால் 30 சதவிகிதம் பேருக்கும் நோய் பரவியுள்ளது. கேரளாவில் கொரோனா நோய் பரவல் ஒரு சதவிகிதத்துக்கும் கீழ்தான் உள்ளது. மரண சதவிகிதமும் மிகவும் குறைவாகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த மே 7-ம் தேதி முதல் வெளிநாட்டில் இருந்து வந்த 7 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பயணித்த விமானத்தில் வந்த அனைவரும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து ரயில்களில் வருபவர்ககுக்கு பாஸ் கட்டாயமாக்கப்படும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கோவிட் 19 ஜாக்ரதா என்ற இணையதளத்தில் பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ரயில் நிலையத்தில் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். நோய் அறிகுறி இருந்தால் மருத்துவமனைகளுக்கும், அறிகுறிகள் இல்லாதவர்கள் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள். வீடுகளுக்குச் செல்பவர்கள் 14 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும். பாஸ் இல்லாமல் வருபவர்கள் நோய் அறிகுறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் 14 நாள்கள் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்
Facebook

ரயில் நிலையங்களில் பயணியை அழைத்துச் செல்ல வரும் வாகனத்தில் டிரைவர் மட்டுமே இருக்க வேண்டும். வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கூடுதல் வசதி ஏற்படுத்தப்படும். தற்போது பொது முடக்கம் மே 17ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் நோய் தீவிரம் இல்லாத பகுதிகளில் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளிக்கப்படும். மாநிலங்களுக்குள் ரயில் போக்குவரத்தையும், மெட்ரோ ரயில் போக்குவரத்து மற்றும் மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்தையும் அனுமதிக்க வேண்டும். தற்போது ஏசி ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது நோய்ப் பரவலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, ஏசி இல்லாத ரயில்களை இயக்க வேண்டும். கேரளாவில் சாலையோரங்களில் முகக் கவசம் விற்பது கட்டுப்படுத்தப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆனாலும் ஜூன் 1-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது" என்றார்.