Published:Updated:

`மே 15 வரை நிபந்தனைகளுடன் கூடிய லாக் டௌன்!' -பிரதமருக்கு வேண்டுகோள் வைத்த பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம், ஆலப்புழா, திருச்சூர் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகள் ஒருவருமில்லை.

வரும் மே 15-ம் தேதி வரை நிபந்தனையுடன் கூடிய லாக் டௌன் வேண்டும் என்றும் பின்னர் லாக் டௌனைப் படிப்படியாக விலக்க வேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமரிடம் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "கேரளத்தில் புதிதாக 13 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 4 பேர் இடுக்கி மாவட்டத்தையும், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் என பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோய் பாதிக்கப்பட்ட 13 பேரில் 5 பேர் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள்.

ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். இன்னொருவருக்கு எப்படி நோய் பரவியது எனத் தெரியவில்லை. மீதம் உள்ளவர்களுக்குக் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது. இன்று 13 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். கண்ணூர் மாவட்டத்தில் 6 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேரும், திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா
கொரோனா

இதுவரை கேரளாவில் 481 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 123 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவின் பல்வேறு பகுதிகளில் 20,301 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 19,712 பேர் வீடுகளிலும் 489 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 104 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 23, 271பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 22,537 பேருக்கு நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது.

சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூகத் தொடர்பு அதிகமாக உள்ள நபர்கள் ஆகியோரில் 875 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 611 பேருக்கு நோய் இல்லை எனத் தெரி்யவந்துள்ளது. தற்போது கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த இரு மாவட்டங்களும் சிவப்பு மண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கண்ணூர், காசர்கோடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.

`கொரோனா பாதித்தவர்கள் அதிகம் குணமானது இங்குதான்!’ -புள்ளிவிவரங்களை வெளியிட்ட பினராயி விஜயன்

அதுபோல இடுக்கி மாவட்டத்தில் வண்டன்மேடு இரட்டையார் மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் ஐமணம், வெள்ளூர், அயற்குண்ணம் தலையோலப்பரம்பு ஆகிய 6 இடங்கள் ஹாட்ஸ்பாட் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம், ஆலப்புழா, திருச்சூர் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் ஒருவருமில்லை.

பிரதமருடன் மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட வீடியோ கான்ஃபரன்ஸில் கேரளா சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மே 15 வரை நிபந்தனைகளுடன் கூடிய லாக் டௌன் அமலில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. லாக் டௌனை ஒரேகட்டத்தில் முழுவதுமாக வாபஸ் பெறாமல் படிப்படியாக வாபஸ் பெறுவது நல்லது என்றும் தெரிவித்தோம்.

பினராயி - மோடி
பினராயி - மோடி

வெளி மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை உடனடியாகத் தொடங்கக்கூடாது. கேரளாவில் தற்போது சுமார் 4 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். லாக் டௌன் முடிந்த பின்னர் அவர்கள் தங்களது ஊர்களுக்குச் செல்ல இடை நில்லா ரயில் வசதி ஏற்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் வசிப்பவர்களின் மறுவாழ்வுக்கு உரிய திட்டங்களை அறிவிக்க வேண்டும். வெளிநாடுகளில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள் ஊருக்குத் திரும்பி வரும்போது அவர்களின் விமானக் கட்டணத்தை மத்திய அரசே செலுத்த வேண்டும். லாக் டௌன் காரணமாக சிறு வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.

வெளிமாநிலங்களில் சிரமப்படும் கேரளாவைச் சேர்ந்த நர்சுகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களிலிருந்து வனப்பாதை வழியாக ஏராளமானோர் கேரளாவுக்குள் ஊடுருவி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே இதைத் தடுக்க வனத்துறையுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு