Published:Updated:

`இடைத்தேர்தல் வெற்றிக்கு ஐயப்ப சுவாமியே காரணம்!' - கேரள கம்யூனிஸ்ட் அமைச்சர் கருத்து

``இடது முன்னணி வெற்றிபெற்றதற்கு ஐயப்ப சுவாமியும் ஒரு காரணம். பக்தியின் பெயரில் நாடகம் தேவையில்லை என கானகவாசியான ஐயப்பன் முடிவு செய்ததால் எல்லாம் இடது முன்னணிக்கு சாதகமாக முடிந்தது'' என்கிறார் கேரள அமைச்சர்.

அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்
அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்த சமயத்தில் கேரள மாநிலத்திலும் ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது. திருவனந்தபுரம் மாவட்டத்தின் வட்டியூர்கவு, பத்தணம்திட்டா மாவட்டத்தின் கோனி ஆகிய தொகுதிகள் ஏற்கெனவே காங்கிரஸ் வசம் இருந்தன. அதை இந்த இடைத்தேர்தல் மூலம் சி.பி.எம் கைப்பற்றியது. அதேசமயம் சி.பி.எம் கட்சி வசம் இருந்த அரூர் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது. எர்ணாகுளம் தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்தது. அதுபோல முஸ்லிம் லீக் கைவசம் இருந்த மஞ்சேஸ்வரம் தொகுதியை அக்கட்சி மீண்டும் தக்கவைத்துக்கொண்டது.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்தின் மொத்தமுள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் சி.பி.எம் வெற்றிபெற்றது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து பெண்களை சபரிமலைக்குக் கொண்டு சென்றதால் சி.பி.எம் தோல்வியை தழுவியதாகவும், பக்தர்களுடன் சேர்ந்து காங்கிரஸ் போராட்டம் நடத்தியதால் மக்கள் வெற்றியை கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சி.பி.எம் மாநிலக் குழு கூட்டத்தில் சபரிமலையில் பெண்களை அழைத்துச் செல்லமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், சபரிமலை அமைந்துள்ள பத்தணம்திட்டா மாவட்டத்தின் கோனி தொகுதியை காங்கிரஸிடமிருந்து சி.பி.எம் தட்டிப்பறித்திருக்கிறது. இந்த நிலையில், கோனி தொகுதியில் சி.பி.எம் வேட்பாளர் ஜினோஸ்குமார் வெற்றிபெற்றதற்கு ஐயப்ப சுவாமி காரணம் என கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்
அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

திருவனந்தபுரத்தில் நடந்த தேவசம் போர்டு ஊழியர்கள் சங்க அமைப்பின் மாநில அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்ட கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேசுகையில், ``பக்தர்களுக்கு ஆதரவாக கேரள அரசு உள்ளது. கோயிலை முழுங்கி ஏப்பம்விடுபவர்களுக்கு அரசு ஆதரவாக இல்லை. பினராய் விஜயன் தலைமையிலான சி.பி.எம் அரசு தேவசம்போர்டுகளுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்பது கோர்ட் வழங்கிய தீர்ப்பு என்பதை புரியவைப்பதில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. தேவசம்போர்டு ஊழியர்களும் பொய் பிரசாரங்களின் பின்னால் சென்றார்கள். ஐயப்ப சுவாமியின் பெயரைப் பயன்படுத்தி தவறான பிரசாரம் செய்தவர்களுக்கு கோனி தொகுதியில் தோல்வி மூலம் ஐயப்பன் தண்டனை வழங்கியிருக்கிறார்.

``ஐயா...கொஞ்சம் அரி தர முடியுமா?''- மாவோயிஸ்ட்  கொலை விவகாரத்தில் தமிழில் பினராயி பதில்

கோனியில் இடது முன்னணி வெற்றிபெற்றதற்கு ஐயப்ப சுவாமியும் ஒரு காரணம். பக்தியின் பெயரில் நாடகம் தேவையில்லை என கானகவாசியான ஐயப்பன் முடிவு செய்ததால் எல்லாம் இடது முன்னணிக்கு சாதகமாக முடிந்தது" என்றார். முற்போக்கு சிந்தனைகொண்ட சி.பி.எம் கட்சியின் அமைச்சரின் இந்தப் பேச்சு கேரள அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.