Published:Updated:

`பாராட்டு வேண்டாம்... ஆதரவாக நான் இருக்கிறேன்!'- சிறுவனால் மனம் மாறிய கேரளப் பெண் போலீஸ்

மொட்டைத்தலை என்பது அவமான விஷயம் இல்லை என்பதை அந்தக் குழந்தைகளுக்குத் தெரிவிக்கவே இந்த முடிவை எடுத்தேன்.

Aparna
Aparna

கேரளாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி அபர்ணா லாவாக்குமார். கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகத் தனது கூந்தலை முழுவதுமாக எடுத்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அபர்ணாவின் செயலைக் கண்ட சக அதிகாரிகள், பாராட்டு தெரிவித்துவருகின்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5-ம் வகுப்பு படிக்கும் சிறுவன்தான் அபர்ணாவின் இந்தச் செயலுக்குக் காரணம். கடந்த முறை தனது கூந்தலை பாதியளவு மட்டுமே வழங்கியிருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பார்த்த பின்னர் அவரது மனம் மாறியது.

Aparna
Aparna

பள்ளிகளில் நடக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இவரது வழக்கம். அப்போது, 5-ம் வகுப்பு படிக்கும் மாணவன் அபர்ணாவுடன் உரையாடினார். “ நானும் உங்களைப் போல போலீஸ் அதிகாரியாக வேண்டும்” என்று கூறியுள்ளார். மொட்டையடித்திருந்த மாணவனை அவர் முதலில் இயல்பாகக் கடந்துவிட்டார். அதன் பின்னர், அந்தப் பள்ளி ஆசிரியை மாணவனுக்கு புற்றுநோய் இருப்பதையும், அதற்கான சிகிச்சை எடுத்துவருவதாகவும், இதன் காரணமாக அவரது தலைமுடியை இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இது, அபர்ணாவின் மனத்தை வெகுவாகப் பாதித்துவிட்டது. இந்த முறை தனது முழுக் கூந்தலையும் குழந்தைகளுக்குத் தானமாக வழங்க முடிவுசெய்தார்.

இந்த சந்திப்பு நடந்த சில நாள்களுக்குப் பின்னர், ஒரு பார்லருக்குச் சென்று, தனது கூந்தலை முழுமையாக எடுத்துவிட முடிவுசெய்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விக் செய்வதற்காகத் தனது கூந்தலை தனியார் தொண்டு நிறுவனத்திடம் தானமாக வழங்கினார். அபர்ணாவின் இந்த முடிவுக்கு, அவரது குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய அபர்ணா, ``இந்தக் குழந்தைகள் நிறைய சிரமங்களைச் சந்திக்கிறார்கள். முடி இல்லாமல் மொட்டைத் தலையுடன் இருப்பதால், மற்றவர்களின் கேலி, கிண்டலுக்கு உள்ளாகிறார்கள். முடியை இழப்பதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. மொட்டைத்தலை என்பது அவமானமான விஷயம் இல்லை என்பதை அந்தக் குழந்தைகளுக்குத் தெரிவிக்கவே இந்த முடிவை எடுத்தேன்.

Aparna
Aparna

இதற்கு முன்புகூட என் தலைமுடியை நன்கொடை அளித்தேன். ஆனால், நான் தோள்பட்டை அளவு நீள முடியைத் தக்கவைத்துக் கொண்டு, மீதமுள்ளவற்றை வெட்டினேன். இந்த நோயாளிகளுக்கு உதவ என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்பினேன். பாராட்டுகளுக்காக இதைச் செய்யவில்லை. அவர்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தவே இவ்வாறு செய்தேன்.

இரண்டு வருடங்களில் கூந்தல் வளர்ந்துவிடும். மீண்டும் வளரக்கூடிய ஒன்றைத்தான் நான் தானமாக வழங்கியுள்ளேன். சிலர், மீண்டும் வளராத உடல் உறுப்புகளைத் தானமாக வழங்குகிறார்கள். அவர்கள் செய்யும் உதவிக்கு முன்னால் இவையெல்லாம் ஒன்றுமில்லை. தவிர, நான் ஒருபோதும் தோற்றங்களைப் பற்றி அதிகம் அக்கறை எடுத்துக்கொண்டதில்லை” என்று கூறினார்.