Published:Updated:

`எங்கள் குடும்பத்தினருடன் சேர்த்து வையுங்கள்!'- கொரோனாவால் இரானில் அடைபட்டுள்ள கேரள மீனவர்கள் கதறல்

கேரள மீனவர்கள்
கேரள மீனவர்கள்

கொரானா வைரஸ் பரவலின் காரணமாக இரானில் சிக்கியுள்ள கேரள மீனவர்கள் தங்களைத் தாயகம் அழைத்துச் செல்லுமாறு வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸினால் அந்நாட்டில் மட்டும் இதுவரை 3,000 மக்கள் உயிரிழந்துள்ளனர். அண்டார்டிக்காவைத் தவிர மற்ற அனைத்துக் கண்டங்களுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் தற்போது மற்ற நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

கொரோனா
கொரோனா

அந்த நாடுகளின் பட்டியலில் இரானும் முன்னிலையில் உள்ளது. கொரோனா வைரஸினால் இரானில் மட்டும் இதுவரை 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இரானிலிருந்து வெளி நாடுகளுக்குச் செல்லும் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. இதனால் இரானில் மீன் பிடிக்கச் சென்ற பல கேரள மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம்: சீனாவில் குறைகிறது... கவலை அளிக்கும் மற்ற நாடுகளின் நிலவரம்!

இந்த நிலையில், இரானில் சிக்கியுள்ள மீனவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கேரள அரசு மற்றும் இந்திய வெளியுறவுத் துறைக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். ``இரானில் உள்ள அஸலூர் என்ற இடத்தில் நாங்கள் சிக்கியுள்ளோம். இங்கு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் எங்களால் இந்த நாட்டைவிட்டு வெளியேற முடியவில்லை. இந்த ஓர் அறையில் மட்டும் 21 மீனவர்கள் உள்ளோம். எங்களுக்கு அருகில் உள்ள பல இடங்களில் இன்னும் அதிகமான இந்திய மீனவர்கள் சிக்கியுள்ளனர்.

பினராயி கடிதம்
பினராயி கடிதம்

கொரோனா பயத்தால் வெளியில் கூட செல்லமுடியவில்லை அதனால் பிற மீனவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. மேலும், எங்களுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் பெறுவதும் கடும் சிரமமாக உள்ளது. எங்களை மீட்டு குடும்பத்தினருடன் சேர்த்துவைக்கும்படி இந்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கிறோம். நாட்டின் அனைத்து முக்கியத் தலைவர்களிடமும் கேட்டுக்கொள்கிறோம். இரானிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் முடக்கப்பட்டுள்ளன. இது எங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது” என வேதனை தெரிவித்துள்ளனர்.

இவர்களின் வீடியோ வெளியான பிறகு இரானில் சிக்கியுள்ள மீனவர்களைக் காப்பாற்றுமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அதில், ``கேரளாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் இரானின் அஸலூரில் சிக்கித் தவித்து வருகின்றனர். அங்கு கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அவர்களால் நாடு திரும்பமுடியவில்லை. இந்தச் சூழ்நிலையில், அவர்களைத் தாயகம் அழைத்து வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தன் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு