Published:Updated:

இரவு பகலாக கடலில் தத்தளிப்பு... கேரள மீனவரின் 18 மணி நேர திக் திக் அனுபவம்!

படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் சாமுவேல்
படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் சாமுவேல்

கரையில் இருந்து சுமார் 16 நாட்டிக்கல் மைல் தூரத்தில் தத்தளித்த அவர், பகல் முழுவதும் கரையை நோக்கி நீந்தியுள்ளார்.

கேரள மாநிலம், கொல்லம் நீண்ட கரையிலிருந்து ஆலப்பாட்டைச் சேர்ந்தவர், மீன்பிடித் தொழிலாளி சாமுவேல் (37). இவருடன் சேர்த்து 10 மீனவர்கள், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 12 மணியளவில் ஆழ்கடலில் மீன்பிடித் தொழில் செய்வதற்காக விசைப்படகில் சென்றுள்ளனர். சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில், சாமுவேல் கடலில் விழுந்துவிட்டார். படகு சென்றுகொண்டிருந்ததால், சாமுவேல் கடலில் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. கரையிலிருந்து சுமார் 16 நாட்டிக்கல் மைல் தூரத்தில் தத்தளித்த அவர், பகல் முழுவதும் கரையை நோக்கி நீந்தியுள்ளார்.

சுமார் எட்டு நாட்டிக்கல் மைல் தூரம் கடந்த நிலையில், உடல் தளர்ந்துவிட்டதாம். கடலில் சென்ற வேறொரு படகைக் கண்டதும் கூக்குரலிட்டுள்ளார். அந்தப் படகில் இருந்தவர்கள் சாமுவேலை மீட்டுள்ளனர். சாமுவேல் மீட்கப்படும்போது, சனிக்கிழமை இரவு 10.30 மணி. சுமார் 18 மணி நேரம் கடலில் நீந்தியும், மிதந்தும் வந்துள்ளார் சாமுவேல்.

சனிக்கிழமை நள்ளிரவு ஒரு மணிக்கு, நீண்டகரைக்கு சாமுவேல் அழைத்துவரப்பட்டு, பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சாமுவேலுக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும் அகில், அவந்திகா என்கிற இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

விசைப்படகு
விசைப்படகு
மாதிரி படம்

கடலில் நடந்த சம்பவம் குறித்து சாமுவேல் கூறுகையில்... "வெள்ளிக்கிழமை, தீப்தி என்ற விசைப்படகில் நாங்கள் மீன்பிடிக்கச் சென்றோம். நான் படகின் ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்தேன். மற்றவர்களும் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் குளிர்ந்த பனிக் காற்று வீசியதால் கண் விழித்தேன். படகு சென்றுகொண்டிருந்தது. இனி படகு ஓட்டும் அறைக்குள் சென்று உறங்கலாம் என்று எழுந்தேன். அப்போது, நிலை தடுமாறிவிட்டேன். படகைப் பிடித்திருந்த கை தவறி, கடலில் விழுந்துவிட்டேன். நான் கடலில் நீந்தியபடி கூச்சலிட்டேன். படகு சென்றுகொண்டிருந்தது, யாரும் என்னைக் கவனிக்கவில்லை. படகின் பின்னாலேயே கொஞ்சம் தூரம் நீந்தினேன். அதன் பிறகு, கரைக்குச் செல்லலாம் எனத் திரும்பி நீந்தினேன்.

நான் அணிந்திருந்த பர்முடாசும், டீ சர்ட்டும் தண்ணீரை உறிஞ்சியதால் சுமையாகத் தெரிந்தது. அவற்றை கழற்றி வீசினேன். நீந்தி நீந்தி கைகள் சோர்ந்தன. எனவே, அலைகளை சமாளித்து கடலில் மிதந்தேன். கடலில் மல்லாந்து படுத்தபடி சிறிது தூரம் நீந்தினேன். ஏதாவது படகு வரும் என நம்பினேன். கடவுள் கைவிட மாட்டார் என நினைத்துக்கொண்டே ஒரு பகல் முழுவதும் தண்ணீரில் நீந்தினேன். அப்போது சூரியனைப் பார்த்தேன். சுமார் 5 மணி இருக்கும் என்று கணித்துக்கொண்டேன்.

கடலில் இருந்து மீட்கப்பட்ட சாமுவேல்
கடலில் இருந்து மீட்கப்பட்ட சாமுவேல்

இரவு நெருங்கியதால் மனதில் பயம் ஏற்பட்டது. மிகவும் சங்கடத்துடன் அலறிக் கூவினேன். கரையே தென்படாத கடலில் யாருக்கு கேட்கும். இன்னும் சில மணி நேரம் நீந்தினேன். நான் செய்த புண்ணியம், தூரத்தில் ஒரு படகு தென்பட்டது. உரக்க கத்தினேன். அவர்கள் என்னைக் கண்டுகொண்டார்கள். அவர்கள் என்னை மீட்கும்போது இரவு 10.30 மணி ஆகியிருந்தது. நான் அறிந்த கடல் என்னைக் கைவிடவில்லை" என்றார்.

சாமுவேலை மீட்ட படகின் பெயர், 'யேசு ஆராத்யன்' (ஏசுவை துதிப்பவன்). கடலில் விழுந்து 18 மணிநேரம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த சாமுவேலை கேரளமே கொண்டாடுகிறது. இதுகுறித்து சாமுவேலின் உறவினர் ஒருவர் கூறுகையில், "படகில் இருந்த சாமுவேலை காணவில்லை, எங்கு விழுந்தார் எனத் தெரியவில்லை என படகில் இருந்து தகவல் சொன்னதும் நாங்கள் தவித்துபோனோம். கடலோர பாதுகாப்புப் படைக்கு தகவல் கூறினோம். அவர்களும் தேடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், கடல் மாதா சாமுவேலை காப்பாற்றிவிட்டாள்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு