Published:Updated:

‘என்னால் மற்றவர்கள் பாதிக்கப்படக் கூடாது!’- மனிதாபிமானத்தால் கேரள உள்ளங்களை மீண்டும் வென்ற `நவ்ஷாத்'

மலையரசு

மழை, வெள்ள சோகத்திலிருந்து மீண்டு வரும் மக்களை, மீண்டும் ஒரு செயலால் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார், நவ்ஷாத்.

Noushad
Noushad

பெருநாள் கொண்டாட்டம் மற்ற மாநிலங்களில் களைகட்டியபோது, இரண்டாம்முறை ஏற்பட்ட பெருவெள்ளத்தால் கேரள தேசத்து மக்கள் உடைமைகளையும் வீடுகளையும் இழந்து நிர்கதியாய் நின்றனர். இவர்களுக்கு, ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளைத் தந்தாலும் அனைவராலும் பாராட்டப்பட்டவர், துணி வியாபாரி நவ்ஷாத்.

கொச்சி மட்டஞ்சேரியைச் சேர்ந்த துணிக்கடைக்காரரான நவ்ஷாத், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பணம், பொருள் என சேகரித்துக்கொண்டிருந்தவர்களைத் தனது கடைக்கு வருமாறு அழைத்தார். குழந்தைகளுக்கும் பெண்களுக்குமான ஆடைகளை அள்ளி அள்ளி சாக்குப்பைகளில் போட்டு, வந்தவர்களிடம் கொடுத்து `இதுதான் எனது பெருநாள் கொண்டாட்டம்' எனக் கூறி நெகிழவைத்தார்.

Noushad
Noushad

பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பொருள் சேகரிக்க வந்தவர்கள், போதும் போதும் எனச் சொன்னபோதும் கேட்காமல், சாக்குப்பைகளில் துணிகளை அள்ளித் திணித்தார் நவ்ஷாத். சின்னக் கடையில் துணிகளை விற்பனைசெய்து பிழைப்பை நடத்திவரும் வியாபாரி, விற்பனைக்காக வைத்திருந்த துணிகளை எல்லாம் அள்ளி வழங்கியதைப் பார்த்தவர்கள், அதை ஃபேஸ்புக்கில் வீடியோவாக லைவ் செய்தனர். மனிதாபிமானத்தில் உச்சம் தொட்ட நவ்ஷாத்தை, வெள்ளத் துயரிலும் கொண்டாடினர் கேரள மக்கள்.

`கிட்னி பாதிப்பு; 14 ஆபரேஷன்; உடைந்த கால்! - கேரள வெள்ள நிவாரணப் பணியில் கவனம் ஈர்த்த இளைஞர்

இதனால் ஒரே நாளில் மாநிலம் முழுவதும் பிரபலமானார் நவ்ஷாத். ட்விட்டர், ஃபேஸ்புக் என நெட்டிசன்கள் அவரை வைரலாக்க, முதல்வர் பினராயி முதல் மெகா ஸ்டார் மம்மூட்டி வரை தங்கள் பாராட்டைத் தெரிவித்தனர். இதற்கிடையே மழை, வெள்ள சோகத்தில் இருந்து மீண்டு வரும் மக்களை மீண்டும் ஒருமுறை நெகிழ வைத்திருக்கிறார் நவ்ஷாத். இந்தமுறை அவரின் செயலை வெளிக்கொணர்ந்தவர், பேபி ஜோசப் என்னும் பெண்மணி. செவ்வாய்க்கிழமை அன்று நவ்ஷாத்தின் கடைக்குச் சென்றார், பேபி ஜோசப். நவ்ஷாத்தின் கடையைச் சுற்றி மூன்று நான்கு துணிக்கடைகள் இருந்தும், அங்கு எந்தக் கூட்டமும் இல்லை.

Noushad
Noushad

அதேநேரம், நவ்ஷாத்தின் கடையில் நல்ல கூட்டம் இருந்துள்ளது. அப்போது நவ்ஷாத்திடம் ஆர்டர் எடுக்க மொத்த வியாபாரி ஒருவர் வந்திருக்கிறார். அவரிடம் நவ்ஷாத் பேசியது குறித்து விவரிக்கும் பேபி ஜோசப், ``நான் கடைக்குச் சென்றபோது,  ஆர்டர் எடுக்க மொத்த வியாபாரி ஒருவர் வந்திருந்தார். அவரிடம், `இந்த வாரம் எந்த ஸ்டாக்கும் இல்லை. புதிதாக எந்தத் துணிகளையும் இனி வாங்கப் போவதில்லை. இருக்கும் துணிகளை விற்றுவிட்டு இங்கிருந்து கடையை மாற்றத் திட்டமிட்டுள்ளேன். 40,000 ரூபாய் வாடகைக்குத் தான் இந்தக் கடையை எடுத்தேன். என்னைப் போலவே இங்குள்ள மற்றவர்களும் அதே வாடகையைச் செலுத்திவருகின்றனர். ஆனால், எனக்கு மட்டுமே துணிகள் விற்பனையாகின்றன. மக்கள் எனது கடையைத் தேடி வருவதால், மற்ற வியாபாரிகளுக்கு வியாபாரம் நடப்பதில்லை.

`என்னிடம் பணமில்லை; வெள்ள நிவாரணத்துக்கு ஸ்கூட்டரை விற்றுவிட்டேன்!'- நெகிழவைத்த கேரள வாலிபர்

அவர்களின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. இதைக் காணும்போது மனசு வருத்தப்படுகிறது. என்னால் இதைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. இந்த நிலைமையை மாற்றவே, இந்தக் கடையை மூட முடிவெடுத்துள்ளேன். இனி, பிளாட்பாரத்திலோ அல்லது வேறு எங்காவதோ கடை போட்டுக்கொள்ளலாம் என நினைக்கிறேன்' என நவ்ஷாத் கூறிவிட்டார். இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு, அந்த மனுஷனை எப்படிப் பாராட்டுவது எனத் தெரியவில்லை.

Noushad
Noushad

ஒவ்வொரு முறையும் மனிதத்தன்மையுடன் அவர் நடந்துகொள்கிறார்" எனக் கூறியிருக்கிறார்.

மழை, வெள்ளத்துக்காக நவ்ஷாத் செய்த உதவிக்குப் பிறகு, அவரது கடைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மற்ற கடைகளுக்கு மக்கள் செல்வதைத் தவிர்த்துள்ளனர். இதனால் அந்தக் கடைகள் வெறிச்சோடிக் காணப்பட்டுள்ளன. மற்ற வியாபாரிகளுக்கும் வியாபாரம் நடக்க வேண்டும் என நவ்ஷாத் எடுத்த முடிவு, தற்போது அவரை மீண்டும் வைரலாக்கிவருகிறது.

`வறுமைதான்; என் மக்கள் துன்பப்படுறாங்களே'- மகனின் சிகிச்சைக்காக சேமித்த பணத்தை கொடுத்த தந்தை!