Published:Updated:

`கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்!' - பினராயி விஜயன்

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார் கேரள முதல்வர்.

இந்தியா முழுக்கக் கொரோனா பெருந்தொற்றால் 577-க்கும் அதிகமான குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், தங்கள் மாநிலத்தில் நோய்த்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கேரள அரசு பல சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார் கேரள முதல்வர். இதன் அடிப்படையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு என்று சிறப்புத் தொகுப்பு ஒன்றையும் அவர் அறிமுகம் செய்திருக்கிறார்.

குழந்தை -Representational Image
குழந்தை -Representational Image

இதன் அடிப்படையில் பெருந்தொற்றின் காரணமாகப் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ஒரே தவணையில் ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்கிற அதிரடி அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருக்கிறார். இதுதவிர குழந்தைகளுக்கு 18 வயது ஆகும் வரை ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இவை எல்லாவற்றையும் தாண்டி குழந்தைகளின் கல்லூரிப் படிப்பு வரையிலான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்கிற மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுத் திக்குத் தெரியாமல் தவிக்கும் அக்குழந்தைகளின் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றியிருக்கிறார்.

கேரளாவைப் போலவே ஆந்திர அரசும் கோவிட் பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, தாய் மற்றும் தந்தையை இழந்த ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூ.10 லட்சம் நிரந்தர வைப்பு நிதி செலுத்தப்படும் என்கிற மிக முக்கிய அறிவிப்பை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் வெளியிட்டிருக்கிறார். பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் போடப்படும் ரூ.10 லட்சம், குழந்தைக்கு 25 வயது ஆகும் வரை வங்கியில் இருக்கும். வைப்பு நிதிக்கான 5 - 6 சதவிகித மாதாந்திர வட்டி ஒவ்வொரு மாதமும் குழந்தையின் பாதுகாவலருக்குக் கொடுக்கப்படும் என்கிற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

Jagan Mohan Reddy
Jagan Mohan Reddy
Twitter/@YSRCPDMO

இதுதவிர கொரோனா பெருந்தொற்றால் இறப்பவர்களின் இறுதிச் சடங்கை நிறைவேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.15,000 வழங்கப்படும் என்கிற மிக முக்கிய அறிவிப்பையும் சமீபத்தில் ஆந்திர முதல்வர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

கேரளா மற்றும் ஆந்திர அரசுகளைப் போலவே டெல்லி அரசும் தன் கருணைப் பார்வையை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பக்கம் திருப்பியுள்ளது. குழந்தைகளின் மொத்தக் கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவாலும் அறிவித்திருக்கிறார். ஒடிசா மற்றும் மணிப்பூர் அரசுகளும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

அடுத்த கட்டுரைக்கு