Published:Updated:

கேரளத்தை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் - 48,000 வாத்துகளை அழிக்க நடவடிக்கை!

பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல் ( மாதிரி படம் )

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டிருக்கும் பகுதிகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள அனைத்துப் பறவைகளையும் அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரள மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்று ஒருபக்கம் பரவிவரும் நிலையில், இப்போது பறவைக் காய்ச்சல் பரவி மிரட்டுகிறது. ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பகுதியிலும், கோட்டயம் மாவட்டத்திலுள்ள நிண்டூர் பகுதியிலும் பறவைக் காய்ச்சல் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதிகளில் வாத்துகள் கூட்டம் கூட்டமாக இறந்து விழுந்தன. அதைத் தொடர்ந்து இறந்த வாத்துகளின் சாம்பிள்கள் போபாலிலுள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி சோதனை நடத்தப்பட்டன. எட்டு சாம்பிள்களில் ஐந்து சாம்பிள்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. கோட்டயத்தில் ஒருவருக்கு சொந்தமான எட்டாயிரம் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பறவைகள் அனைத்தையும் அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கால்நடைத்துறை அறிவித்திருக்கிறது.

வாத்துகள்
வாத்துகள்
மாதிரி படம்

வாத்துகளுக்குப் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது என்றாலும் இதுவரை மனிதர்களுக்குத் தொற்றவில்லை என்று கூறப்படுகிறது. பறவைக் காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், பிற பகுதிகளில் பரவாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தடுப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இரண்டு மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டிருக்கும் பகுதிகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள அனைத்துப் பறவைகளையும் அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 48,000 பறவைகள் அழிக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்
மாதிரி படம்

கேரளத்தில் கடந்த ஆண்டும் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டது. கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களில் கடந்த ஆண்டு பறவைக் காய்ச்சல் பரவியபோது கோழிகள் அழிக்கப்பட்டன. அதன் மூலம்தான் பறவைக் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அது போன்று இந்த ஆண்டும் பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த வாத்து மற்றும் கோழிகளை அழிக்க கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. கேரளத்தில் வேகமாகப் பரவிவரும் பறவைக் காய்ச்சலால் மக்கள் பீதி அடைந்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு