Published:Updated:

மக்கள் தொகையில் சரி பாதி பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி; அசத்தும் கேரளா!

COVID-19 vaccine
COVID-19 vaccine ( AP Photo/Rafiq Maqbool )

இந்தியாவில் 32.98% பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கேரளத்தில் 50.25% மக்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கேரள மாநிலத்தில் கொரோனா தாக்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தினமும் 20,000-ஐ தொடும் அளவிற்கு கொரோனா பதிப்பு இருந்து வருகிறது. அதே நேரம் கொரோனா பரவலைத் தடுக்க கேரளத்தில் பலவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளைப் பெற்று பொதுமக்களுக்குச் செலுத்தி வருகிறது கேரள அரசு.

ஒரு தடுப்பூசி கூட வீணாகாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் கேரள மாநில மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் மக்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரள சுகாதாரத்துறை அமைசர் வீணா ஜார்ஜ்
கேரள சுகாதாரத்துறை அமைசர் வீணா ஜார்ஜ்

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், ``கேரள மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போதைய மக்கள் தொகை 3.54 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 50.25% மக்களுக்கு கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது 1,77,88,931 பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 16-ம் தேதி கேரளாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 213 நாள்களில் மாநிலத்தின் பாதிக்கும் அதிகமான மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

`கேரள அரசின் நிவாரணம் போதுமானதாக இல்லை!’ - கொரோனா விவகாரத்தில் அரசை விமர்சித்த கே.கே.ஷைலஜா

விடுமுறைகூட எடுக்காமல் சுகாதாரப் பணியாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு என் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,45,13,225. அதில் முதல் டோஸ் தடுப்பூசி 1,77,88,931 பேருக்கும், இரண்டாம் டோஸ் தடுப்பூசி 67,24,294 பேருக்கும் போடப்பட்டுள்ளது. 50.25% மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 19% மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 61.98% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 23.43% பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
`தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கே இனி மது' - மதுக்கடைகளுக்கு கேரள அரசு புதிய உத்தரவு!

தேசிய அளவிலான சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது இது அதிகமாகும். இந்தியாவில் 130 கோடி மக்கள் தொகையில் 42,86,81,772 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது 32.98 சதவிகிதமாகும். 12,18,38,266 பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது 9.37 சதவிகிதமாகும். இந்தியா முழுவதும் மொத்தம் 55,05,20,038 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கேரளத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் பெண்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பெண்களின் எண்ணிக்கை 1,27,53,073. அதே நேரம் ஆண்கள் 1,17,55,197 பேர் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் போட்டுள்ளனர்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு