Published:Updated:

`நான்கே மணிநேரம்; 5 பிளாட்டுகள்!' -கேரளாவில் வெடிவைத்துத் தகர்க்கப்படும் விதிமீறிய கட்டடங்கள்

கட்டடங்கள் தகர்க்கப்படும் நாளில் நான்கு மணிநேரம் மட்டும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பாதுகாப்புக்காக வேறு இடங்களுக்குச் சென்றுவிட வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தகர்க்கப்பட உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்
தகர்க்கப்பட உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மரட் நகராட்சியில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஹோலி பெயித், இரட்டை அடுக்குமாடி குடியிருப்பான ஆல்ஃப ஸெறின் டவர்ஸ், ஜெயின் கோறல் கோவ், கோல்டன் காயலோரம் உள்ளிட்ட ஐந்து பிளாட்டுகளை இடித்து அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்தப் பிளாட்டுகளை வாங்கிக் குடியிருக்கும் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட ஒவ்வொரு குடியிருப்புக்கும் இழப்பீடு தரவேண்டும் என்று போராட்டம் நடத்தினர். மேலும், கோர்ட்டில் மேல்முறையீடும் செய்து பார்த்தனர். ஆனால், கேரளத்தில் மழை வெள்ளத்தால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டால் தாங்காது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மரட் பிளாட்டுகள்
மரட் பிளாட்டுகள்

இந்த நிலையில் பிளாட்டுகளை இடித்து அகற்றுவதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் அனைவரும் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்று மரட் நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. வேறு வீடு கிடைக்கும்வரை இங்கிருந்து தங்களை அப்புறப்படுத்தக் கூடாது என்றுகூறி குடியிருப்புவாசிகள் போராட்டம் நடத்தினர். ஒருவழியாக குடியிருப்புகள் காலி செய்யப்பட்டுவிட்டன. இந்த நிலையில், வரும் ஜனவரி 11 மற்றும் 12-ம் தேதிகளில் மரட் பிளாட்டுகள் வெடிவைத்துத் தகர்க்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

Vikatan

ஜனவரி மாதம் 11-ம் தேதி காலை 11 மணிக்கு ஹோலி பெயித் அடுக்குமாடிக் கட்டடம் தகர்க்கப்படுகிறது. அன்று காலை 11.30 மணிக்கு ஆல்ஃப ஸெறின் டவர் தகர்க்கப்படுகிறது. ஜனவரி 12-ம் தேதி காலை 11 மணிக்கு ஜெயின் கோறல் கோவ் கட்டடமும் மதியம் 2 மணிக்கு கோல்டன் காயலோரம் பிளாட்டும் தகர்க்கப்படுகிறது. முதலில் தகர்க்கப்படும் ஹோலி பெயித் பிளாட், மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இரட்டை அடுக்குமாடி குடியிருப்பான ஆல்ஃபா ஸெறின் டவரைத் தகர்ப்பது சிக்கலான விஷயம் என்பதால் அதற்காகத் தனி முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

தகர்க்கப்பட உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்
தகர்க்கப்பட உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்

அடுக்குமாடி குடியிருப்புகளை தகர்ப்பதற்காக வெடி மருந்துகள் நிரப்பும் பணி நடந்துவருகிறது. கட்டடங்கள் தகர்க்கப்படும் நாளில் நான்கு மணிநேரம் மட்டும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பாதுகாப்புக்காக வேறு இடங்களுக்குச் சென்றுவிட வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், கட்டடங்களை வெடிவைத்துத் தகர்க்கும்போது தங்கள் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அப்பகுதியில் குடியிருப்பவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கேரள முதல்வருக்கு மனு அளித்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புகளை உடைக்கும்போது அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் நஷ்டஈடு உடனடியாக வழங்க வேண்டும் அல்லது அரசே வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.