Published:Updated:

``ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு புடவை, லெஹெங்கா இலவசம்!'' - உதவும் கேரள மனிதரின் உடை வங்கி

உடை வங்கி என்றவுடன் சாதாரண உடைகள் என்று நினைத்துவிட வேண்டாம். திருமண உடைகளான காஸ்ட்லி புடவைகள், லெஹங்கா போன்ற உடைகளைச் சேகரித்து ஏழைப் பெண்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் நாசர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ரத்த வங்கி, உணவு வங்கி கேள்விப்பட்டிருப்போம். கேரளாவைச் சேர்ந்த ஒருவர், உடை வங்கியை நடத்தி வருகிறார். பாலக்காடு - மலப்புரம் எல்லையில் உள்ள ஒரு சிறிய கிராமம் தூதா. அங்குள்ள நாசர் என்பவர்தான், உடை வங்கி முன்னெடுப்பை எடுத்துள்ளார்.

உடை வங்கி
உடை வங்கி
``10 ஆண்டுகள் தனியறையில் வசித்ததைவிட இப்போது கஷ்டமாக உள்ளது!'' - திருமணம் செய்த கேரள தம்பதி வருத்தம்

உடை வங்கி என்றவுடன் சாதாரண உடைகள் என்று நினைத்துவிட வேண்டாம். திருமண ஆடைகளான காஸ்ட்லி பட்டுப் புடவைகள், லெஹங்கா போன்ற உடைகளைச் சேகரித்து ஏழைக் குடும்பத்துப் பெண்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் நாசர்.

இதுகுறித்து நாசரை தொடர்பு கொண்டு பேசினோம். ``மலப்புரம் மாவட்டம் தூதாதான் என் பூர்விகம். படித்து முடித்துவிட்டு, சவுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு சவுதியில் இருந்து திரும்பி வந்துவிட்டேன். கேரளா வந்தவுடன் என்னால் முடிந்த சிறிய சிறிய சமூகப் பணிகளைச் செய்து வந்தேன்.

உடையுடன் நாசர்
உடையுடன் நாசர்
கேரளா:`` `ஈசோ’ என்ற பெயரில் சினிமா வெளிவர அனுமதிக்க மாட்டோம்’’  முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ்

சாலையில் ஆதரவில்லாமல் இருக்கும் மக்களை மீட்டு, அவர்களைச் சுத்தப்படுத்தி இல்லங்களில் ஒப்படைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தேன். அப்போது, பல ஏழை மக்கள் திருமணத்துக்காக என்னிடம் உதவி கேட்டு வருவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரிசி, காய்கறி, இறைச்சி என்று பலரும் பல வகையான உதவிகளைக் கேட்பார்கள். அவர்களிடம் விசாரித்தபோதுதான் பெரும்பாலான ஏழை மணப்பெண்கள், நல்ல உடை எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தது தெரியவந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் மனைவி, 4 பிள்ளைகள், என் சகோதரி உதவியுடன் உடைகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் மலப்புரம், பாலக்காடு மாவட்டங்களில்தான் உடைகளைச் சேகரித்து வந்தோம்.

சமூக வலைதளங்களில் இதற்கான முயற்சிகளில் இறங்கிய பிறகு, கேரளா முழுவதும் இருந்து உடைகளை வழங்கி வருகின்றனர். செல்வந்தர்களிடம் இதுபோன்ற விலை மதிக்கத்தக்க உடைகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும்.

அது மாதிரியான உடைகளை சேகரித்து வருகிறோம். உடைகளை வாங்கி ட்ரை க்ளீன் செய்த பிறகுதான் கொடுக்கிறேன். ஆரம்பத்தில் என் வீட்டின் ஒரு பகுதியிலேயே வைத்து நடத்தி வந்தேன். புடவைகள் அதிகமானதாலும், மக்கள் அதிகம் வரத் தொடங்கியதாலும் சமீபத்தில் ஒரு கடையைப் பிடித்திருக்கிறேன்.

கேரளா உடை வங்கி
கேரளா உடை வங்கி

தற்போது, 1,000-க்கும் மேற்பட்ட உடைகளைச் சேகரித்துள்ளேன். இதுவரை 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை, லெஹங்கா எனக் கொடுத்துள்ளேன். இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என்று அனைத்து சமுதாய மக்களுக்குமான உடைகள் உள்ளன. 3,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை மதிப்பிலான உடைகள் இருக்கின்றன.

நிறைய அழைப்புகள் வருகின்றன. புனேவில் இருந்து அழைத்து பார்சல் மூலம் உடையை அனுப்புகின்றனர். இன்னொரு பக்கம், கோவை, பெங்களூர், சிக் மங்களூர் போன்ற நகரங்களில் இருந்து உடைகளைக் கேட்கின்றனர். அவர்களுக்கு பார்சல் மூலம் உடைகளை அனுப்புகிறோம். நேரிலும் வரலாம். வாரத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் கடை திறந்திருக்கும்.

அருகில்தான் என் வீடு உள்ளது. அதனால், யாருக்காவது அவசரம் என்றாலும் உடனடியாக வந்துவிடுவேன். உடை கொடுப்பவர்கள் யாரிடமும் திருப்பிக் கொடுங்கள் என்று கேட்க மாட்டேன். அவர்கள் விருப்பப்பட்டால் வைத்துக் கொள்ளலாம். வேண்டாம் என்றால் திருப்பிக் கொடுக்கலாம்.

உடை வங்கியில் எம்.எல்.ஏ
உடை வங்கியில் எம்.எல்.ஏ
ரூ.12 கோடி ஓணம் பம்பர் லாட்டரி: ஏமாற்றப்பட்ட துபாய் ஹோட்டல் ஊழியர்; ஆட்டோ ஓட்டுநருக்குக் கிடைத்தது!

என்னுடைய இந்த சேவை முயற்சிக்கு, கேரள மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எம்.எல்.ஏ, எம்.பி, சினிமா பிரபலங்கள் இந்த முயற்சியைப் பாராட்டுகின்றனர். தொடர்ந்து அழைப்புகள் வந்ததால் சமீபத்தில் கண்ணூர் சென்றேன். ஒரே நாளில் 150 புடவைகள் சேகரித்தேன். வீடு திரும்ப நள்ளிரவு ஆகிவிட்டது. உடை எடுக்க வரும்போது, பலர் மிகுந்த நெகிழ்ச்சியாகி என்னையும் திருமணத்துக்கு அழைக்கின்றனர்.

சில திருமணங்களுக்கு மட்டும் செல்ல முடிந்தது. அவர்களது முகங்களைப் பார்க்கும்போது சொல்ல முடியாத சந்தோஷம் கிடைக்கிறது. அடுத்ததாக, மார்ச் மாதம் முதல் ஏழைக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நல்ல உடைகள் கொடுப்பதற்கான முயற்சிகளில் இறங்க உள்ளேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு