Published:Updated:

உச்ச நீதிமன்றத்தில் மனு;சொந்த ஊரில் மனைவிக்குப் பிரசவம்! -துபாயில் அதிர்ச்சிதந்த கேரள இளைஞரின் மரணம்

நிதின்
நிதின்

துபாயிலிருந்து தன் மனைவியைப் பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பிய கணவர், அடுத்த ஒரே மாதத்தில் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், பெரம்பரா பகுதியைச் சேர்ந்தவர் நிதின் சந்திரன். 29 வயதான இவர், துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளார். இவரது மனைவி ஆதிராவும் கணவருடன் அரபு நாட்டில் தங்கி ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளார். கேரள ரத்த தானம் செய்பவர்களின் துபாய் அத்தியாயத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், இந்தியக் கலாசாரம் மற்றும் கலை சங்கத்தின் தீவிர உறுப்பினராகவும் நிதின் செயல்பட்டு வந்துள்ளார்.

மனைவியுடன் நிதின்
மனைவியுடன் நிதின்

இந்நிலையில், கடந்த வருடம் இதயம் தொடர்பான பிரச்னைக்கு மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார், நிதின். பின்னாளில் அது சற்று குணமாகி சாதாரணமாக இருந்துள்ளார். அதற்குள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதால் அனைத்து நாட்டு எல்லைகளும் மூடப்பட்டன. அப்போது, துபாய் மற்றும் இந்தியாவுக்கு இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் கர்ப்பிணி மனைவி ஆதிரா, பிரசவத்துக்காக சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் மனைவிக்கு உறுதுணையாக இருந்தார் நிதின். இதன்மூலம் இவர் இந்திய ஊடகங்களில் பிரபலமாக பேசப்பட்டார்.

ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இவர், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அப்போது, வெளிநாட்டுப் பயணிகளை இந்தியாவுக்கு அழைத்துவரும் ‘வந்தே பாரத்’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. மே 7-ம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, துபாயிலிருந்து முதல் ஆளாக இந்தியா கிளம்பியவர் ஆதிரா எனக் கூறப்படுகிறது. மனைவியை மட்டும் கேரளாவுக்கு அனுப்பிவிட்டு நிதின் துபாயிலேயே இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் 2-ம் தேதி துபாயில் இருக்கும் தன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நிதின், தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர், ஏற்கெனவே இதயம் தொடர்பான சிகிச்சை பெற்று வந்ததால், உயர் ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

நிதின்
நிதின்

நிதின் இறந்த செய்தி கேட்டால் அவரது கர்ப்பிணி மனைவி உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்படுவார் என்பதை அறிந்த உறவினர்கள், நிதின் இறந்த செய்தியை ஆதிராவுக்குத் தெரியாமல் மறைத்துள்ளனர். இதையடுத்து, சமீபத்தில் சிசேரியன் மூலம் ஆந்திராவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதுவரை தன் கணவர் இறந்த செய்தி ஆதிராவுக்குத் தெரியாது எனக் கூறப்படுகிறது. தன் குழந்தையைக் காண கணவர் வருவார் எனக் காத்திருந்த மனைவிக்கு, குழந்தை பிறக்கும் முன்பே கணவர் இறந்துவிட்டார் என்ற விஷயம் தெரியவில்லை. இச்சம்பவம் மொத்த கேரளாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

`80 ஹாட்ஸ்பாட்... ஆனால், புதிதாக கொரோனாத் தொற்று யாருக்குமில்லை!’ - நம்பிக்கையளிக்கும் கேரளா

இதுபற்றி கல்ஃப் ஊடகத்திடம் பேசியுள்ள நிதினின் நண்பரும் வழக்கறிஞருமான ஹாஷிக், “ நிதின் மனைவி நிறைமாத கர்ப்பமாக இருந்ததால், கணவர் உயிரிழந்த விஷயத்தை அவருக்குச் சொல்லவில்லை. நிதினுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மட்டுமே கூறினோம். நிதின் இறந்த செய்தியை ஆதிரா எவ்வாறு தாங்கப்போகிறார் என எனக்குத் தெரியவில்லை. நான் இதற்கு முன் பல வழக்குகளைக் கையாண்டுள்ளேன். ஆனால், நிதினுக்கு நடந்த விஷயம் என்னை மனதளவில் அதிகமாகப் பாதித்துவிட்டது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஆதிரா கேரளாவுக்குச் சென்றபோது, நிதின் விமான நிலையத்தில் இருந்தார். அப்போதுதான் ஆதிரா தன் கணவரை இறுதியாகப் பார்த்தார். நிதின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமான திருப்பம் ஏற்படும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என வேதனை தெரிவித்துள்ளார்.

ஆதிரா- நிதின்
ஆதிரா- நிதின்

``நிதின் கொரோனா பாதிப்பினால் உயிரிழக்கவில்லை. அவர் திடீரென இறந்தது பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நாளை கேரளாவுக்குச் செல்லவிருக்கும் ஒரு சரக்கு விமானத்தில் நிதினின் உடலை விரைந்து சொந்த ஊருக்கு அனுப்ப முயற்சி செய்துவருகிறோம்” என நிதினின் நண்பர் கூறியுள்ளார். ஆதிரா, கேரளாவுக்கு வருவதற்கு முன்னதாக துபாய் விமான நிலையத்தில் இருவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் இருவருக்குமே நெகட்டிவ் என்றே முடிவுகள் வந்துள்ளன. இருந்தும் நிதினின் மரணத்துக்கான முழுமையான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.

நிதின், துபாயில் இருக்கும் பல கேரள மக்களுக்கு தொடர்ச்சியாக உதவி செய்துவந்துள்ளார். கணவன் மனைவி இருவருமே அடிக்கடி ரத்த தான முகாமில் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு